

மிகச் சிறப்பாக ஓடும் திரைப்படங்களை ‘super hit movie’ என்று கூறக் கேட்டிருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாளிதழில் ‘sleeper hit’ என்று ஒரு திரைப்படத்தை விவரித்து இருந்தார்கள். இதற்கு என்ன பொருள்?
ஒரு திரைப்படம் பெரிதாக விளம்பரப்படுத்தப்படவில்லை. பெரிய பட்ஜெட்டிலும் எடுக்கப்படவில்லை. அதில் மிகப் பிரபலமான நட்சத்திரங்களும் இல்லை. என்றாலும் அனைவரும் வியப்படையும்படி போகப்போக அதிகளவில் பேசப்பட்டு பெருவெற்றி அடைந்தால் அதை ‘sleeper hit’ என்பார்கள். ‘ஒரு தலை ராகம்’, ‘ராட்சசன்’, ‘மைனா’, ‘வாகை சூட வா’, ‘சிவா மனசுல சக்தி’, ‘சூது கவ்வும்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘லவ் டுடே' ஆகியவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். திரைப்படம் மட்டும் இல்லை, தொலைக்காட்சித் தொடர், வீடியோ கேம், இசைப்பாடல் காணொளிகள் போன்றவற்றில்கூட இது போன்ற ‘sleeper hits’ உருவாகலாம்.
(A) I am the one who has the ability to fight.
(B) I am the one who have the ability to fight.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் எது சரி என்று கேட்கிறார் ஒரு வாசகர்.
‘I’ என்பதைத் தொடர்ந்து ‘have’ என்ற சொல் வரும். ‘He/She’ (அதாவது the one என்று இங்கே குறிப்பிடப்படுவது) என்பதைத் தொடர்ந்து ‘has’ இடம்பெறும். ஒரு வாக்கியத்தில் இரண்டு ‘subjects’ (மேலே உள்ள வாக்கியத்தில் I, the one) இருந்தால், தனக்கு மிக அருகாமையில் எந்த 'subject’ உள்ளதோ அதற்கேற்ற வடிவத்தைத்தான் ‘verb’ எடுக்கும்.
இங்கே ‘has' அல்லது ‘have’ என்ற ‘verb'க்கு மிக அருகில் இருப்பது ‘the one.’ எனவே ‘has’ என்பதுதான் பொருத்தமானது. அதாவது ‘I am the one who has the ability to fight’ என்பதே சரியான வாக்கியம்.
‘Buy’, ‘Purchase’ ஆகிய இரண்டுக்கும் இடையே ஏதாவது வேறுபாடு உண்டா?
இரண்டு வார்த்தைகளுமே பணத்தைக் (ஏதோ ஒரு முறையில்) கொடுத்து ஒன்றை வாங்குவதைக் குறிக்கின்றன. இரண்டு வார்த்தைகளையும் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாம்.
என்றாலும் ‘buy’ என்பது பொதுவான வார்த்தை. பேச்சு வழக்கில் ‘buy’ என்கிற வார்த்தையைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். பெரிய அளவிலோ (bulk), அதிக விலை கொடுத்தோ ஒன்றை வாங்கும்போது ‘purchase’ என்பதைப் பயன்படுத்துவது வழக்கம். ‘Buy’ என்பது எப்போதுமே வினைச்சொல்தான் (verb). ‘Purchase’ என்பதைப் பெயர்ச் சொல்லாகவும் (noun), வினைச்சொல்லாகவும் பயன்படுத்த முடியும்.
‘Rider’ என்கிற சொல்லை மிக வித்தியாசமான கோணத்தில் ஒரு நாளிதழில் பயன்படுத்தி இருந்தார்கள். அதை நீங்கள் விளக்க முடியுமா?
அப்படி எந்த வாக்கியத்தில் பயன்படுத்தி இருந்தார்கள் என்பதையும் அதை எதனால் வித்தியாசமான கோணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி ‘rider' என்பதன் அர்த்தங்களைப் பார்ப்போம்.
குதிரை, யானை, மிதிவண்டி, இருசக்கர வாகனம் போன்ற எதை ஓட்டுபவரையும் ‘rider’ என்கிற சொல் குறிக்கும். ஏற்கெனவே ஓர் ஒப்பந்தத்தை இரு தரப்பினர் போட்டுக்கொண்ட பிறகு அதில் கொசுறாக ஒரு நிபந்தனையைச் சேர்த்தால், அதையும் ‘rider’ என்கிற சொல்லால் குறிப்பது உண்டு. மற்றபடி ‘raid’ என்றால் சோதனை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இப்படி ‘raid’ செய்யும் அதிகாரிகளை ‘raider’ என்கிற சொல்லால் குறிப்பிடக் கூடாது. ‘Raider’ என்பவர் சட்டமீறலாகவும் அதிரடியாகவும் ஓர் இடத்துக்குள் புகுந்து, அங்கு இருப்பவற்றைக் கொள்ளையடித்துச் செல்பவர்.