

கவிஞர் நேசன்மகதி, விளம்பரம் ஒன்றை ‘வாட்ஸ்-அப்' குறுஞ்செய்தியாக அனுப்பி, ‘கெடிகாரமா? கடிகாரமா?’ என்று கேட்டார். ‘விநாயகர் வடிவ கெடிகார விற்பனை’ எனும் விளம்பரமும் இருந்தது. உமறுப் புலவரின் ஆசிரியர் கடிகை முத்துப் புலவர் வந்து நமது மண்டையில் தட்ட, ‘கடிகை, கடிகாரம்தான் சரி’ என்றேன் (நன்றி: தமிழ்-தமிழ் அகர முதலி–த.நா.பாடநூல் கழகம்-பக்கம்-247/1985). வெண்கல மணி ஓசையில் காலம் அறிந்ததால், கடிகாரம் ஆனது. அளவில் சிறியது, கைக்கடிகாரம் ஆனது.
‘பாசமலர்’ படத்தில் 'மலர்ந்தும் மலராத' பாடலில் ‘தங்கக் கடியாரம்’ என்று பி.சுசீலா பாட, கண்ணதாசன் ‘கடிகாரம்' என்றே எழுதியிருக்கிறார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நான்மணிக் கடிகை’ பொ.ஆ.4ஆம் நூற்றாண்டினது. ‘கடிகை வெண்பா’ - அரசனுக்கு நேரம் சொல்லும் ஒரு சிற்றிலக்கியம். கடிகை - நேரம் அளவிடுவது. மதுரைக் காஞ்சி-532, நெடுநல் வாடை-142, கலித்தொகை-96/10, அகநானூறு-35/3 என சங்க நூல்களில் வரும்.
பிறகு கடிகை - கடிகாரம், கெடிகாரம் ஆனது எப்படி? கங்கை – கெங்கை என்றும் (குடியாத்தம் கெங்கையம்மன் கோயில்), கரகம் – கெரகம் (கரகாட்டக்காரன் - கோவை சரளா) என்றும் பேச்சு வழக்கில் ‘க’, ‘கெ’ ஆனது போல, ‘கடிகாரம்’, ‘கெடிகாரம்’ ஆகியிருக்கலாம். ஆனால், பெருவழக்கிலும் எழுத்திலும் ‘கடிகாரம்’ என்பதே சரியான தமிழ்ச்சொல். என்ன செய்ய? கடிகாரத்திற்கே ‘நேரம்’ சரியில்லை போல. ‘கெரகம்’தான்!
எம்பளது – நுப்பது
எண்பதை ‘எம்பளது’, முப்பதை ‘நுப்பது’ என்று சொல்வது, பழைய தஞ்சை மாவட்ட மக்கள் வழக்கு. எழுதும்போது, சரியாக எழுதுவர். இது எப்படி வந்ததென்று சொல்லாய்வரே சொல்ல வேண்டும். தப்பான உச்சரிப்போடு நெடுங்காலமாக வழக்கில் இருப்பது மட்டும் உண்மை.
அரைவை – அறைவை
சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜூலியானா, ‘அரைவை எந்திரமா? அறைவை எந்திரமா?’ என்று கேட்டார். நல்ல கேள்வி. ‘அறவை, அறைவை’ என்பன தவறானவை. மாவு அரைக்குமிடம் – மாவு அரவை ஆலை. புடைவையைப் புடவை என்றும், உடைமையை உடமை என்றும் வழங்குவது போல, அரைக்கும் அரைவையை அரவை என்றே ஏற்கலாம். மரம் அறுக்கும் மர அறுவை ஆலை என்பது வேறு.
இறக்கை – றெக்கை – ரெக்கை
இறக்கை – ‘wings’. றெக்கை - பேச்சு வழக்கு. இறகு, பெரியது. சிறகு என்பது ‘feather’ - இறக்கையின் சிறுபகுதி, சிறியது. இறகிலிருந்து பிரிவதே சிறகு, ஆனால், பெரும்பாலும் வழக்கை முன்வைத்து ‘சிறகை’, ‘இறகு’, ‘இறக்கை’ எனும் பொருளில் எழுதுகின்றனர். இதை இலக்கணத்தில் (சிறகு எனும் உறுப்பு, இறகு-இறக்கை எனும் முத லுக்கு ஆகி வருவதால்) சினையாகு பெயர் என்பர். ‘ரெக்கை’ என்பது பிழை வழக்கு.
(தொடரும்)