

கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாகவே தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) சார்ந்த பணிகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தந்திருக்கிறன. இந்த ஆண்டிலும் வழக்கம்போல் அத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் கூடுதலாகவே உரு வாகும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அந்த வகையில் வேலைவாய்ப்பு உள்ள துறைகள், பணிகள் சில.
தரவு அறிவியல் (Data Science)
தரவு அறிவியல் என்பது அடிப்படையில் ஒரு தகவல் தொழில்நுட்பப் பிரிவுதான். உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தரவு அறிவியலும் ஒன்று. இத்துறையில் தரவுப் பொறியாளர், தரவு அறிவியலாளர், தரவு ஆய்வாளர் எனப் பல பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு துறைகளில் எழும் வணிகம் சார்ந்த சிக்கல்களைப் பகுப் பாய்ந்து தீர்வு தருவதற்கு இத்துறையில் பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள். எனவே, தரவு அறிவியலை எடுத்துப் படிப்போர் நல்ல மதிப்பெண்களோடு வெளியே வந்தால், வேலை வாய்ப்பைப் பெறலாம்.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
இப்போது செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) தாக்கம் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஏ.ஐ.யால் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் பறிபோகும் என்கிற விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலான நாடுகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஒ) போன்ற அரசு நிறுவனங்கள் தொடங்கி, தனியார் நிறுவனங்கள் வரையில் ஏ.ஐ.யில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
சைபர் பாதுகாப்பு (Cyber Security)
சமீப காலமாக அதிகம் கவனம் பெற்ற துறைகளில் சைபர் பாதுகாப்புக்குத் தனி இடமுண்டு. தகவல் தொழில்நுட்பத்தின் அரணாக இருந்து சைபர் தாக்குதல்களைத் தடுக்கவும், தரவைப் பாதுகாக்கவும் சைபர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், டிஜிட்டல் சேவைகள் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த எல்லாத் துறைகளிலுமே சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, சைபர் பாதுகாப்பு சார்ந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு இத்துறையில் நல்ல எதிர்காலம் உண்டு.
உற்பத்தித் துறை (Manufacturing)
வெளிநாட்டு மின்னணு நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முதலீடு செய்து வருகின்றன. மேலும் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றாலும் உற்பத்தித் துறையில் கூடுதல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் உற்பத்தித் துறையில் அண்மைக் காலத்தில் மட்டும் இருபதாயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே உற்பத்தித் துறையில் பணியாற்ற விரும்புவோர், கல்லூரியைவிட்டு நல்ல மதிப்பெண்களோடு வந்தால், இத்துறையில் இணைந்து முன்னேறலாம்.
தொலைத் தொடர்புத் துறை (Telecommunication)
உலகிலேயே அதிக மொபைல் போன்கள் பயன்பாடு உள்ள நாடு இந்தியாதான். அதுபோலவே இணையப் பயன்பாட்டிலும் இந்தியாவே கோலோச்சுகிறது. எனவே, இதன் விளைவால் தொலைத் தொடர்புத் துறை அதிக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது 5ஜி அலைக்கற்றையின் வரவாலும் மேம்பட்ட புதிய தொழில்நுட்பங்களாலும் புதிய வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் 5ஜி சேவை பொதுப் புழக்கத்துக்கு வந்தபிறகு தொழில்கள் புதிய பரிமாணத்தை எட்டின. தற்போது இந்தியாவிலும் 570 மாவட்டங்களில் 1,40,000 நெட்வொர்க் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 5ஜி சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில்நுட்பத் துறையில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் தொலைத் தொடர்புத் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகுக்கும்.
இ – காமர்ஸ் (E-commerce)
அமேசான். ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல நாடுகளிலும் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன. 2022இல் இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு ரூ.5,21,766 கோடியாக மதிப்பிடப்பட்டது. இது, 2026இல் ரூ.13,63,004 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்கள் தொழில்நுட்பத் துறையில் உள்ள போட்டியைச் சமாளிக்க ரோபாடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), வெர்சுவல் ரியாலிட்டி என்கிற மெய்நிகர் யதார்த்தம், ஃபின்டெக் (fintech) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து வருவதால், இத்துறை சார்ந்த தளங்களில் இயங்குபவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)
இணையத்தை மையப்படுத்தி இயங்கும் இ-காமர்ஸ் உள்பட வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிறுவனங்களின் வியாபார வளர்ச்சிக்கு விளம்பரப்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று. கடல் கடந்தும் வியாபாரத்தைச் சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. எனவே, இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக, தேடுபொறி இயந்திரத் திட்டமிடல் (search engine optimization), சமூக வலைதள நிர்வகிப்பு, உள்ளடக்கம் எழுதுதல் போன்ற பணிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இத்துறையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவை தவிர ஏ.ஐ. பயன்பாடு உள்ள இடங்களில் பிராம்ட் பொறியாளர், காலநிலை மாற்றத்தின் விளைவால் உருவாகியுள்ள பசுமை நிபுணர்களுக்கும் வேலைவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. முதலீடுகள் பெருகும் மருந்து & சுகாதார சேவை துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.