

வி.சேகர் இயக்கிய திரைப்படம், ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’. இந்த வரியில் தொடங்கும் கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றும் உள்ளது. மாறாக, கன்றுக்குட்டி - பேச்சு வழக்கில் ‘கன்னு’க்குட்டி ஆகிறது. ‘கன்னுக்குட்டி கன்னுக்குட்டி’ - திரைக் கலைஞர் சிவகுமார் நடித்த பாடல். கொன்று, தின்று - ‘கொன்னாப் பாவம், தின்னாப் போச்சு’ - பழமொழி.
இப்படி, ‘று’ எழுத்து, இனவழியில், ‘னு’ ஆவதுண்டு. எண்ணுப் பெயர்களில், ஒன்று - ஒண்ணு, மூன்று - மூணு என, ‘ணு’ ஆவது எப்படி? தமிழறிஞர் இராம.கி., தனது ‘வளவு’ வலைப்பக்கத்தில் ‘ஒண்ணு சரியா? ஒன்னு சரியா? என்றால், ‘ஒண்ணு’ என்பது முதலில் வந்திருக்க வேண்டும், ‘ஒன்னு’ என்பது பின்னால் வந்திருக்க வேண்டும்’ என்கிறார்.
இதை, இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். ‘ஒண்ணா’ எனில் ‘இயலா’ என்பது பொருள். ‘சொல்லொ(ண்)ணாத் துயரம்’, ‘காண ஒண்ணாக் கொடுமை’ என ‘ஒண்ணா’ - எதிர்ச்சொல்லாகவே உள்ளது. ஆக, ஒன்று, மூன்று என்பன எழுத்து வழக்கு; ஒன்னு, மூனு என்பன பேச்சு வழக்கு, ஒண்ணு, மூணு என்பன தவறான வழக்கு எனலாம்.
ஆர்ந்த - ஆழ்ந்த இரங்கல்? - அன்பிற்குரியவர்களின் மரணத்தில், ‘மனமார்ந்த அஞ்சலி / இரங்கல்’ என்கிறார்கள். நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம். ஆனால், ‘ஆழ்ந்த இரங்கல்’ என்பதே சரி. ‘உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து’ என்பது உட்பொருள். நன்றி சொல்ல, ‘மனமார்ந்த நன்றி’ என்பதே சரி. நன்றியை உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து சொல்லக் கூடாதா? எனில், ‘நல்லதுக்கு, அழைச்சாத்தான் போகணும், கெட்டதுக்கு அழைக்க மறந்தாக்கூட, கேள்விப்பட்டாலே போகணும்’ என்பார்கள். ஆளில்லாத பூக்கடையில், இரவிலும் சில மாலைகள் தொங்குவதைப் பார்க்கலாம். பணத்தை மீறிய தமிழர்மரபு. நல்ல மரபுதானே இலக்கணமாகிறது?!
ஒருக்காலும் ஒருகாலும்: நக்கீரரின் முருகாற்றுப் படைக்குப் பின்னுள்ள கடைச் செருகல் - வெண்பா ஒன்றில், ‘ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்’ என்னும் தொடர் உள்ளது. ஆள்பவனையும் ஆண்டவனையும் கேள்வி கேட்ட திருவிளையாடல் படத்தில், முக்கண்ணன் சிவனிடமே, தன் ஒரு கண் சிவந்து ‘...ஒருக்காலும் இருக்க முடியாது’ என்று சீறுவார் நக்கீரர். ‘ஒருக்கா வந்துட்டுப் போப்பா?’ இது, சிற்றூர்த் தாயின் தவிப்பு.
மலை மக்கள் இலக்கியமான குற்றாலக் குறவஞ்சி, ‘ஒருக்கால்’ ‘இருக்கால்’ என்றே பாடும் (கு.கு: 353ஆம் பாடல்). ஆக, ‘ஒருமுறை’ எனப் பொருள்படும் ‘ஒருகால்’ எனும் சொல் பேச்சுவழக்கில் ‘ஒருக்கால்’ என்றாகிறது. ‘ஒருக்காலும்’ என ‘உம்’ சேரும்போது எதிர்ச் சொல்லாகிறது எனக் கருதலாம்.
அடையார்? பெரியார்? - காஞ்சிபுரத்துத் திருப்பெரும்புதூர் அருகில் பிறந்து, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களைக் கடந்து, மொத்தம் 43 கி.மீ., நடந்து, வங்கக் கடலை அடையும் ஆறு அடையாறு. இதை, ‘அடையார்’ என்பது அடுக்குமா? சொல்லின் இறுதியில் வரும் ‘று’ (குற்றியலுகரம்) ஆங்கிலேயர்க்கு வராததால் ‘ர்’ போட்டு அடையார் என்றனர். இவ்வாறே, ‘முல்லைப் பெரியாறு’ (பேரியாறு-பதிற்றுப் பத்து : 28), ‘பரளியாறு’ (பஃறுளியாறு –சிலம்பு:11:காடு:19) என்பனவும் மருவின. தமிழக ஆறுகளின் ‘வரலாறு’ மாறி, ‘வரலார்’ ஆவது நல்லதா?!
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com