

2023ஆம் ஆண்டு வெளியான கல்வி சார்ந்த முக்கியமான சில நூல்கள்:
நாங்கள் வாயாடிகளே
# சாந்தசீலா
ஹெர் ஸ்டோரிஸ்
ரூ. 160
வகுப்பறையில் சமத்துவம் தேவை என்கிற கருத்தை வலியுறுத்தும் ‘நாங்கள் வாயாடிகளே’ என்கிற புத்த கத்தை ஆசிரியர் சாந்தசீலா எழுதி யிருக்கிறார். பேருந்து வசதிகூட சரியாக இல்லாத கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் இவர். சமத்துவம் பற்றிய புரிதலும் அதையொட்டிய உரையாடலும் நிகழ வேண்டி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான மொழியில் முக்கிய கருத்துகளை சாந்தசீலா பகிர்ந்திருக்கிறார்.
எது கல்வி?
# இரா. எட்வின்
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
ரூ. 180
தமிழகக் கல்வி நிலை
யங்களின் செயல்பாடு, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை, மாணவர் களின் மனநிலை என கல்விச் சூழலைப் பற்றி 30க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அலசுகிறது ‘எது கல்வி?’ என்கிற நூல் தொகுப்பு. கல்வி சார்ந்த அவசியத் தகவல்களை எளிமையாகவும் நேர்த்தியாகவும் இந்த நூலில் முன்வைத்திருக்கிறார் எழுத்தாளர் இரா. எட்வின்.
தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை
# சு. உமா மகேசுவரி
பன்மை வெளி
ரூ. 150
அரசுப் பள்ளி ஆசிரியராக இருபது ஆண்டுகால அனுபவமும், பள்ளிக் கல்வி சார்ந்த பிரச்சினைகளைக் கவனப்படுத்தும் கட்டுரை களையும் எழுதி வரும் சு. உமா மகேசுவரி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். மாணவர்கள் இடைநிற்றலைத் தடுப்பது எப்படி, மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள், கல்வித்துறை திட்டங்களின் சாதக பாதகங்கள் ஆகியவை பற்றி அவர் எழுதிய 23 கட்டுரைகளின் தொகுப்பே புத்தகமாக வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கு இருக்கும் சிக்கல்களைப் பற்றி மட்டும் எழுதாமல், ஆலோசனைகளையும் வழங்கி தனது கட்டுரைகளில் அலசியிருக்கிறார்.
ஆயிரம் ஜன்னல் வகுப்பறை
# கலகல வகுப்பறை சிவா
பாரதி புத்தகாலயம்
ரூ. 110
பள்ளி ஆசிரியர், எழுத் தாளர் ‘கலகல வகுப்பறை’ சிவா. இவர் ‘இந்து தமிழ்திசை’ ‘வெற்றிக்கொடி’யில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகி இருக்கிறது ‘ஆயிரம் ஜன்னல் வகுப்பறை’ நூல். வளரிளம் பருவக் குழந்தைகள் நிறைந்துள்ள வகுப்பறைக்குள் நிகழும் சுவாரசியமான நிகழ்வுகள், முன்னேற்றங்கள், தடைகள் என அனைத்தையும் பதிவுசெய்து இந்த நூலை எழுதியிருக்கிறார் சிவா.
கல்விக் கொள்கையா? காவிக் கொள்கையா?
# மு. சிவகுருநாதன்
நன்னூல் பதிப்பகம்
விலை: ரூ. 150
கல்வி தொடர்பாகத் தொடர்ந்து எழுதி வருபவர் அரசுப் பள்ளி ஆசிரியர் மு.சிவகுருநாதன். 2019-2022 காலகட்டத்தில் அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரைகள் விமர்சனபூர்வமாக அணுகுகின்றன. இவர் எழுதிய கட்டுரைகள், ‘கல்வி அறம்’, ‘கல்வி அபத்தங்கள்’, ‘பாடநூல்களில் வெறுப்பு அரசியல்’ ஆகியவை ஏற்கெனவே நூல்களாக வெளியாகியுள்ளன.
கல்விக் கதைகள்
# ச. தமிழ்ச்செல்வன்
எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம்
ரூ. 300
தமிழ் சிறுகதைகள், கட்டுரைகள் பல எழுதியிருக்கும் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் ‘கல்விக் கதைகள்’ நூலின் தொகுப்பாசிரியர். இந்நூலில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் கல்வி சார்ந்தும் குழந்தைகள் சார்ந்தும் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அந்தப் படைப் பாளிகளின் பள்ளிக் கால மலரும் நினைவுகளாக அல்லாமல் கல்வி முறையின் மீதான அக்கறை மிகுந்த விமர்சனங்களாகவும் குழந்தைகளோடு உரையாடக்கூடியதாகவும் அமைந்துள்ளன.
மாண்புமிகு ஆசிரியர்கள்
# முகில்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ரூ. 199
பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் மீது அக்கறையும் பொறுப்பும் மிக்கவர்கள் ஆசியர்கள். தன்னலமற்ற ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்விலும் கல்வித்துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வரிசையில் தலைகீழ் மாற்றங்களைச் சாத்தியமாக்கிய ஆசிரியர்களின் கதைகளை ‘மாண்புமிகு ஆசிரியர்கள்’ என்கிற நூலில் கவனப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் முகில்.
IIT கனவுகள்
# பிரபு பாலா
மெட்ராஸ் பேப்பர்
விலை: ரூ. 130
இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் எனப் பெயர்பெற்றவை ஐஐடிக்கள். புகழ்பெற்ற எதாவதொரு ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்பது பல மாணவர்களின் கனவு. இந்தச் சூழலில் பயிற்சியும் முயற்சியும் இருந்தால், சாமானியர்கள்கூட ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும் என்பதற்கான வழிகாட்டியாக இருக்கிறது எழுத்தாளர் பிரபு பாலா எழுதிய ‘IIT கனவுகள்’ என்கிற நூல். தேர்வுகளை வென்று ஐஐடியில் நுழைவதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது இந்நூல்.
வாசிப்பு இயக்கம் - யாருக்காக? எதற்காக?
# பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்
பாரதி புத்தகாலயம்
ரூ. 70
அரசுப் பள்ளி மாண வர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை இன்னும் ஆழமாக எடுத்துச்செல்லும் வகையிலும் குழந்தைகளை வாசிக்கத் தூண்டும் வகையிலும் தமிழ்நாடு அரசால் ‘வாசிப்பு இயக்கம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாசிப்பு இயக்கத்தால் மாணவர்களுக்கு என்ன பயன், இதை அவர்கள் எப்படி அணுகுவது, என்னென்ன திட்டங்கள், எப்படி செயல்படுத்தப்படும் ஆகி யவை பற்றி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் ‘வாசிப்பு இயக்கம் - யாருக்காக? எதற்காக?’ என்கிற புத்தக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளது.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல் கலாம் ஆசாத்; இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் புலே
# எஸ்.மோசஸ் பிரபு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ரூ.30. (ஒரு நூலின் விலை)
விடுதலைப் போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பத்தாண்டு பணியாற்றி ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்களித்தவர் மெளலானா அபுல் கலாம் ஆசாத். அதேபோல் இந்தியாவில் முதல் முறையாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கி பல கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே பெண்களுக்கு கல்வி புகட்டியவர் சாவித்ரி பாய் புலே. கல்வி அனை வரையும் சென்றடைவதற்கும் கல்வித் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய இவ்விரு பெரும் தலைவர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நூல்கள் இவை.
- தொகுப்பு: ராகா, நந்தன்