

கூடு - கூண்டு: தேனீக்களும் பறவைகளும் தாம் வாழ, தாமே கட்டுவது கூடு (Nest). தேன்கூடு, குருவிக்கூடு போல. மனிதர்கள் வீடுகட்டி வாழக் கற்றுக்கொண்டதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்களும் குருவிகளும் கூடுகட்டி வாழ்ந்தன என்கிறது அறிவியல். பறவை, விலங்குகளை அடைக்க, மனிதர் கட்டுவது கூண்டு (Cage). ‘கூண்டுக்கிளி’ என்னும் ஒரே படத்தில் தான் எம்ஜிஆர், சிவாஜி எனும் இருபெரும் நடிகர்களும் இணைந்து நடித்தார்கள். கூட்டுப் பறவையைக் கூண்டில் அடைப்பது இயற்கைக்கு எதிரானது. உலக உயிரினங்களில் இளைய (Junior Most) உயிரினமான மனிதர், ‘உலகம் முழுவதும் தமக்கே உரிமை’ என நினைப்பது, தமக்குத் தாமே கட்டிக்கொள்ளும் கூண்டு.
நெரி - நெறி: நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளை ‘நெறி’க்கப் படுவதான செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தின. ‘நெறி’ என்பது வழி, தத்துவம் எனப்படும். ‘குறள்நெறியில் வாழ்வதுதான் வாழ்வைப் பொருளுடையதாக மாற்றும்’ என்பதுதான் சரி. கழுத்தை ‘நெரித்து’க் கொல்வதும், கை, காலில் புண் வந்தால் கவட்டில் ‘நெரி’கட்டுவதும் சொல்லளவில் சரி. நெரி வேறு, நெறி வேறு.
புனைவும் புணையும்: ‘நீர்வழிப் படூஉம் புணை’ என்பது புறநானூறு-192. எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய ‘நீர்வழிப் படூஉம்’ புதினம்தான், 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றது. புணை என்றால் தெப்பம். புனைபெயர், தாமே புனைந்துகொள்ளும் பெயர். ‘வினைபுனை நல்இல்’ அகநானூறு-98. புனைதல்-அழகுறச் செய்வது, கவிதை புனைதல்.
பெயர் மாற்றம்: தமிழைச் சரிவர உச்சரிக்கத் தெரியாத ஆங்கிலேயர், மதராஸை ‘மெட்ராஸ்’, திருஅல்லிக் கேணியை ‘ட்ரிப்ளிகேன்’ என்றது போல ஊர்ப்பெயர் மாற்றம் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் உண்டு. நம் ‘செந்தமிழர்’ பலரும், இன்றும் அப்படியே ‘செப்பு’வதுதான் சிரிப்பு.
அதுபோல, வடமொழியின் அரசியல் தாக்கம் மிகுந்துவந்த இடைக் காலத்தில் – பிற்காலச் சோழரிலிருந்து, இப்போதும் பல்லாயிரம் ஊர்ப் பெயர்களும், வாழ்முறைச் சொற்களும் வடமொழி மாற்றம் கண்டன.
9ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரின் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – முதலாயிரம் – பாடல் எண்-872) ‘அரங்கமா நகருளானே’ என்னும் வரி, பெருமாளை ‘அரங்கன்’ என்றே அழகு தமிழில் அழைத்தது.
10-11ஆம் நூற்றாண்டின் பிறகு, இது மாற்றப்பட்டு, ‘ஸ்ரீரங்கன்’ ஆகி, இன்று ‘ரங்கா ரங்கா’ என்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடிய ‘ஐயாறன்’ பஞ்சநதீஸ்வரன் ஆகி, ‘அறம்வளர்த்த நாயகி’ தர்ம சம்வர்த்தினி ஆனதுபோல நிறைய உள்ளன.
இப்படித்தான் ‘உலகம், லோகம்’ ஆனதும். ‘சங்க இலக்கியம் தொடரடைவு’ எனும் அருமையான செயலி ஒன்று, சங்க இலக்கியத்தில் ‘உலகம்’ எனும் சொல் 53இடத்தில் வருவதாகப் பட்டியலிட்டுள்ளது. தவிர, உலகில், உலகத்து, உலகத்தோடு எனும் சொற்கள் 160 என்று சொல்கிறது. இந்தப் பழைய ‘உலக’மே இப்போது ‘லோகம்’ ஆகிவிட்டதை என்ன சொல்ல?
விவரம் – விவரித்தல்: விவரம் என்பதே சரி. ஆனால், விவரம் தெரியாதவர் விபரம் என்றே தவறாக எழுதுகிறார்கள். தனித் தமிழறி ஞர்கள் பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரன், பாரதிதாசன், சரவணத்தமிழன், தமிழ்க்குடிமகன், இரா.இளவரசு, இன்றும் செந்தலை ந.கவுதமன் போன்றோரின் தொடர் முயற்சிகளால் தமிழ் மறுமலர்ச்சி கண்டு வருவது நமது பெரும்பேறுதான்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com