

எப்போது ‘less’ என்பதைப் பயன்படுத்துவது, எப்போது ‘few’ என்பதைப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம் நேருகிறதே. ‘Few, Less’ இரண்டுமே குறைவான என்பதைக் குறிக்கும் சொற்கள்தான். எண்ணக் (countable) கூடியவை என்றால் ‘few.’ எண்ண முடியாதவை என்றால் ‘less.’ ‘Few chairs’, ‘few children’, ‘few buckets of water’, ‘less water’, ‘less sand’, ‘fewer hours’, ‘less time.’
இன்னொன்றைக் கவனித்தீர்களா? எண்ண முடிந்த பொருள்கள் (chairs, children, hours) வாக்கியங்களில் பன்மை யாகக் கருதப்படுகின்றன. எண்ண முடியாத பொருள்கள் (water, sand, time) வாக்கியங்களில் ஒருமையாகக் கருதப்படுகின்றன. ‘Few chairs WERE available.’ ‘Less time WAS available.’
***
தளர்ந்து தொய்வது என்பதைக் குறிப்பிட எந்த ஆங்கிலச் சொல் பயன்படும்? - ‘Droop.’ பலவீனமடைவதை குறிக்கும். ‘Sag’ என்பதும் இதன் சமச்சொல்தான். ‘Drooping branches’, ‘drooping eyelids’, ‘drooping shoulders’. ‘Spirits drooped.’
***
‘Nausea’ என்பது ஒவ்வாமையா?
‘Nausea’ என்பது கிரேக்க மொழியில் கப்பலைக் குறிக்கும் ‘naus’ என்ற சொல்லில் இருந்து வந்தது. கப்பல் பயணம் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. முக்கியமாக முதல் கப்பல் பயணம். அப்போது ஒருவித குமட்டல் உணர்வு உண்டாகும். ‘Sea sickness’ - இதை அப்போது ‘nausea’ என்றும் குறிப்பிட்டார்கள். இப்போது பொதுவாகவே குமட்டல் உணர்வை இந்தச் சொல் குறிக்கிறது. ‘Nauseating behaviour’ என்பது எரிச்சலை உண்டாக்கும் அருவருப்பான நடவடிக்கை.
***
‘Heterophones’ என்பது என்ன? - ஒரே எழுத்துக்கள் கொண்ட இரு வார்த்தைகள். ஆனால், இரு விதமாக உச்சரிக்கப்படுபவை. இருவிதமான பொருள் அளிக்கக் கூடியவை. ‘Polish’ என்பது மெருகேற்றும் செயலைக் குறிக்கிறது. இதை 'பாலிஷ்' என்று உச்சரிப்போம்.
‘Polish furniture’ என்பதில் உள்ள ‘Polish’ போலாந்து நாட்டைச் சேர்ந்த என்பதைக் குறிக்கிறது. அதை 'போலிஷ்' என்று உச்சரிப்போம். ஆக, ‘Polish’ என்று சொல் ‘heterophone’ ஆகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘Object’ என்ற சொல்லும் ‘heterophone’ ஆகப் பயன்படுத்தக் கூடியது. ‘Object’ என்றால் பொருள். ‘I see the object’ – இங்கே ‘object’ என்பதை ‘ஆப்ஜெக்ட்’ என உச்சரிப்போம். ‘Object’ என்பது எதிர்ப்பையும் குறிக்கும் சொல். ‘I object the interference.’
இங்கே ‘object’ என்பதை ‘அப்ஜெக்ட்’ என உச்சரிப்போம். ‘We lead a healthy life.’ ‘Lead is a metal.’ இந்த இரு வாக்கியங்களில் ‘lead’ என்பது ‘heterophone’ ஆகப் பயன்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா?
***
‘Import’, ‘export’ ஆகிய இரண்டில் எது ஏற்றுமதி எது இறக்குமதி என்பதில் மிகவும் குழப்பம் அவ்வப்போது ஏற்படுகிறது. நினைவில் கொள்ள என்ன செய்யலாம்? - ‘In port’ அதாவது துறைமுகத்துக்குள் வருவது இறக்குமதி (import). ‘Exit port’ அதாவது துறைமுகத்திலிருந்து வெளியேறுவது ஏற்றுமதி (export).
***
‘God’ என்ற சொல்லை எப்போது எழுதினாலும் ‘g’ என்ற எழுத்து ‘capital letter’ ஆகத்தான் இருக்க வேண்டுமா? - தனியாக எழுதும்போது ‘God’ என்று குறிப்பிடுவோம். ‘He believes in God.’ ‘Is God everywhere?’. ‘God' என்பதற்கு முன் ‘adjective’ சேர்க்கப்பட்டால் ‘god’ எனக் குறிப்பிடுவோம். ‘Eros is the Greek god of love.’ ‘It is believed that Hindu god Rama’s abode is Ayodhya.’ ‘God’ என்பதற்குப் பின்னொட்டு இருந்தால் அந்தச் சொல் ‘god’ என்றே குறிப்பிடப்படும். ‘He is a godfearing person.’ ‘He is the godfather of the junior students in the school.’
- aruncharanya@gmail.com