

வங்கி என்பதன் ஆங்கில வார்த்தை யான ‘பேங்க்' எப்படித் தோன்றியது? - ‘பேங்க்’ (bank) என்பதை நாம் ‘வங்கி' என்கிறோம். இத்தாலிய வார்த்தையான ‘பாங்க்கோ' (banco) என்பதிலிருந்து தோன்றியதுதான் ‘பாங்க்’ என்கிற வார்த்தை. யூதர்கள் இங்கிலாந்தின் கடைத்தெருவில் ஒரு நீளமான இருக் கையில் உட்கார்ந்து, தங்கள் வணிகத்தை நடத்தினார்கள். அந்த இருக்கையை (‘பெஞ்ச்'சை) இத்தாலிய மொழியில் ‘பாங்க்கோ’ என்று அழைத்தார்கள். அதுதான் ‘பாங்க்’ ஆனது.
***
‘அவர் ஸ்டைலே தனிதான்’ என்றால் என்ன பொருள்? - ‘Style’ என்பதை சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் கவ்வுவது, தலையைச் சிலுப்பி விட்டுக்கொள்வது போன்ற செயல்கள் மட்டுமே எனச் சிலர் எண்ணுகிறார்கள். ‘He did it with style’ என்றால் தரமாகவும் தனித்தன்மையுடனும் அதைச் செய்தான் என்றுதான் பொருள்.
***
ஹோட்டல் அறைகளில் ‘சூட்’ என்று எதையோ குறிப்பிடுகிறார்களே, அதன் பொருள் என்ன? ‘கோட் சூட்’ அணிந்து வந்தான் என்கிறோமே. இரண்டுக்கும் என்ன வேறுபாடு? - ‘Suite’ என்பதற்கும் ‘suit’ என்பதற்கும் உள்ள வேறுபாடுதான். ‘Suit’ என்கிற சொல்லுக்கு ‘பொருந்துவது’ என்று பொருள். ‘இந்த கலர் சட்டை உனக்கு suit ஆகும்.’ ‘இந்த வரன்தான் அந்தப் பெண்ணுக்கு suitable’. அதே சமயம் ‘வழக்கு’ என்பதைக் குறிக்கவும் ‘suit’ என்கிற சொல்லைப் பயன்படுத்துவார்கள். ‘He filed a suit against her.’
‘Suit’ என்பதை ஓர் ஆடைத் தொகுதி என்றும் கூறலாம். ஒரே வகையான துணியில் தைக்கப்படும் சட்டை, பாண்ட் உள்ளடங்கிய உடுப்புத் தொகுதி. (இதற்கு மேல் தேவைப்பட்டால் அணியப்படுவது coat). எந்தச் சூழலுக்கான ‘suit’ என்பதைப் பொறுத்து, அது ‘dinner suit’, ‘jogging suit’, ‘safari suit’, ‘sailor suit’, ‘tracksuit’ என்று குறிப்பிடப்படும். அதற்காக உங்கள் பிறந்த நாளன்று ‘birthday suit’இல் காட்சி அளிக்கப்போவதாகக் கூறிவிடாதீர்கள். ‘Birthday suit’ என்பது (நகைச்சுவையாக) ஆடையற்ற நிலையைக் குறிக்கிறது (அப்படித்தானே பிறந்தோம்!)
சீட்டுக்கட்டில் உள்ள இனங்களை ‘suit’ என்கிற சொல்லால் குறிப்பிடுவதுண்டு. ‘The suits are called hearts, clubs, diamonds and spades.’ விளையாட்டைப் பொறுத்தவரை ‘follow suit’ என்றால், அதற்குச் சற்று முன்பு விளையாடியவர் இறக்கிய அதே ரகமான கார்டைத் தானும் இறக்குவது. (அதாவது அவர் க்ளாவர் கார்டை இறக்கியிருந்தால் அடுத்தவரும் க்ளாவர் கார்டையே இறக்குவது). இதே பயன்பாட்டைப் பொதுவாகவும் குறிப்பிடுவதுண்டு. இன்னொருவர் செய்து முடித்த செயலையே நீங்களும் செய்தால் ‘you follow his suit.’
இப்போது ‘suite’க்கு வருவோம். இதைக் கூட்டுத்தொகுப்பு தங்கும் அறை எனலாம். அதாவது, பிரம்மாண்ட ஹோட்டல்களில் உள்ள ‘suites’இல் தங்க அதிகக் கட்டணம் வசூலிப்பார்கள். ஒவ்வொரு ‘suite’ இடத்திலும் பல அறைகள் இருக்கும்.
***
‘Indebted for’ என்பது சரியா? அல்லது ‘Indebted to’ என்பது சரியா? - அது, அதைத் தொடர்ந்து வரும் சொல்லைப் பொருத்தது. அதைத் தொடர்வது ஒரு காரணம் என்றால் ‘indebted for.’ அதைத் தொடர்வது ஒரு நபர் என்றால் ‘indebted to.’
‘I am indebted for his kindness.’ ‘I am indebted to you.’
சிப்ஸ்
‘Bouquet’ என்றால்?
பூச்செண்டு. (பூக்கே என்று உச்சரிக்க வேண்டும்)
‘Oral’, ‘Aural’ வேறுபாடு?
‘Oral’ என்பது வாய் தொடர்பானது. ‘Aural’ என்பது காது தொடர்பானது.
‘I am doing my graduation in New Delhi.’ சரியா?
புது டெல்லியில் என் பட்டப் படிப்பைப் படிக்கிறேன் என்கிற அர்த்தத்தில் சொன் னால் தவறு. பட்டமேற்பு விழா எனப்படும் ஒரு நாளைத்தான் ‘Graduation’ என்கிற சொல்லால் குறிப்பிடுவார்கள்.
- aruncharanya@gmail.com