ஆங்கிலம் அறிவோமே 4.0 - ‘Docs’ என்றால் என்ன?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - ‘Docs’ என்றால் என்ன?
Updated on
2 min read

‘That makes two of us’ என்கிற வாக்கியத்தை ஆங்கில மொழி சீரியல் ஒன்றில் அடிக்கடிக் கேட்கி றேன். இதற்கு என்ன பொருள்?
‘எனக்குப் புகைபிடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காது. தன் உடல் நலம் மட்டுமல்ல, அருகில் இருப்பவர்கள் ஆரோக்கியம் பற்றியும் சிறிதும் கவலைப்படாத ஜென்மங்கள்’ என்று ஒருவர் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நீங்கள் ‘That makes two of us’ என்று கூறினால் உங்களுக்கும் அதே கருத்து என்று பொருள். அதாவது அதே எண்ணம் கொண்டவர்களாக இருவர் இருக்கிறீர்கள்.

***

‘Napkin’ என்பதும் ‘kerchief’ என்பதும் ஒன்றா? - ‘Kerchief’ என்றால் சதுரமான சிறிய துணி. இதை முக்கோணமாக மடித்து தலையில் கட்டிக் கொள்வார்கள். ‘Hand kerchief’ என்பது கைக்குட்டை என்பது தெரிந்திருக்கும். உணவு மேஜைக்கெதிரே அமர்ந்தபடி உணவு உட்கொள்ளும்போது மடியின்மீது ஒரு சிறிய துணியை விரித்துக் கொள்வார்கள். உணவுப் பொருள் சிந்தினால் அதன்மீது தங்கி உடையைப் பாதுகாக்கும். அந்தத் துணிதான் ‘napkin’. மாதவிலக்கின்போது பெண்கள் பயன்படுத்துவதை ‘sanitary napkin’ என்பார்கள்.

***

‘Docs’ என்றால்? - ‘Documents’ அல்லது ‘Doctors’ - பின்னணியைப் பொறுத்து அர்த்தம் கொள்ளலாம். (சில ஆங்கில நாளிதழ்களில் தலைப்புகளில் உள்ள ஆங்கிலப் பெயர்களை இஷ்டத்துக்கு வெட்டுவதைக் கவனித்திருப்பீர்கள். ‘Guv’ என்றால் ‘government’, ‘Univ’ என்றால் ‘university’ என்பது போல.
உயிர் போகும் வேளையில் ஒருவரது பிள்ளைகள் ‘docs, docs’ என்று பதறுவதன் பொருள் மேற்கூறிய இரண்டில் எது என்பது அவருக்கும் அவரது மகன்களுக்கும் இடையே உள்ள உறவைப் பொறுத்தது!

***
‘Forum’, ‘Quorum’ இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? -
‘Forum’ என்பது ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும் விவாதிக்கவும் வாய்ப்புள்ள இடம் அல்லது அவை.
மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியபோது ஓர் அவையில் இருக்கவேண்டியவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையை ‘quorum’ என்பார்கள். அந்தக் குறைந்த பட்ச எண்ணிக்கை அதாவது ‘quorum’ இல்லாவிட்டால் அந்தச் சந்திப்பில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. ‘Quorum’ என்பது என்ன எண்ணிக்கை (அதாவது எத்தனை பேர்) என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டிருக்கும்.

***

‘The law is wanting in that respect’ என்று ஒரு நூலில் படித்தேன். ‘Wanting’ என்பது இந்த இடத்தில் எதைக் குறிக்கிறது? - ‘Want’ என்பது தேவை அல்லது விருப்பப்படுவது ஆகியவற்றைக் குறிக்கிறது. ‘Wanting’ என்பது ஏதோ குறைகிறது என்பதைக் குறிக்கிறது. அதாவது இல்லாமை. ஏதோ ஒரு கோணத்தில் சட்டங்கள் போதிய அளவு இல்லை என்பதைத்தான் மேற்படி ஆங்கில வாக்கியம் குறிக்கிறது. ‘The students are certainly wanting in discipline’ என்ற வாக்கியம் அந்த மாணவர்கள் ஒழுக்கக் குறை வானவர்கள், போதிய கட்டுப்பாடு அற்றவர்கள் என்பதை உணர்த்துகிறது.

***

‘Have you got the right money?’ என்று ஒருவர் என்னைக் கேட்டால் அது என்னைக் கோபப்பட வைக்க வேண்டுமா? - புரியவில்லை. ஒருவேளை ‘நீங்கள் வைத்திருப்பது கறுப்புப் பணம் இல்லை அல்லவா?’ என்பதைத்தான் அவர் அப்படி கேட்கிறாரோ என நினைக்கிறீர்களா? அப்படியல்ல. நீங்கள் பேருந்தில் செல்லும்போது அப்படி ஒருவர் கேட்டால் சரியான தொகையை (அதாவது, ‘exact amount’) வைத்திருக்கிறீ​ர்களா என்று பொருள்.

***

‘My shirt is better than my friend’ என்று ஒருவர் கூறக் கேட்டேன் - கூற வந்தது புரிந்துவிட்டது என்கிற வகையில் ஓகே. ஆனால் அந்த வாக்கியத்தின் பொருள் ‘என் சட்டை என் நண்பனைவிட சிறப்பானது’ என்பதுதான். ‘My shirt is better than my friend’s (shirt)’ என்ற வாக்கியம்தான் ‘என் சட்டை என் நண்பனுடைய சட்டையைவிட சிறப்பானது’ என்ற பொருளை வெளிப்படுத்துகிறது.

சிப்ஸ்

‘Collusion’ என்பது ரகசிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறதா?

ஆம். குற்றச்செயல் தொடர்பானது.

‘Parley’ என்பது எதைக் குறிக்கிறது?

இரு குழுக்களுக்கிடையே நடைபெறும் விவாதம். விவாதம் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் விவாதம்!

‘My mother is in home’, ‘My mother is at home’. எது சரி?

At

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in