

ஆவண செய்வதா? – ஆவன செய்வதா? - அரசு அலுவலரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து, ‘ஆவண’ செய்யுமாறு கேட்கிறார்கள். பதிலும் ‘ஆவண’ செய்வதாகவே வருகிறது. ‘ஆவணம்’ என்பதற்கு, நிலையான பதிவு (Document) என்பது பொருள். ‘ஆவன’ என்பதே, ‘ஆக வேண்டியன’ என்னும் பொருள் தரும் சொல். இதுபோலும் சொற்களைப் பற்றி, தமிழ் வளர்ச்சித் துறையினர், மாவட்டந்தோறும், ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள். ஆனாலும், ஒப்பமிடும் அரசு உயர்அலுவலர் அதைப் பார்த்துத் திருத்தினால்தான் மற்றவர்களும் திருத்தமாக எழுதுவார்கள். இதைச் சரிசெய்ய, அரசுதான் ‘ஆவன’ செய்ய வேண்டும்.
ஆத்திச்சூடியா ஆத்திசூடியா? - குழந்தைகளுக்கு எழுத்துகளை அறிமுகம் செய்வது, கல்வியின் தொடக்கம். ஔவையாரின் ‘ஆத்திசூடி’, புகழ் பெற்ற சிறுநூல். இந்த வடிவ நூல்கள் அவ்வப்போது தமிழில் வந்துகொண்டே இருக்கின்றன. (ஆத்திசூடியின் முதல்தொடர் – அறம் செய விரும்பு. அறத்தின் வடிவமான குழந்தைகளுக்கு, அறத்தைப் பற்றி விளக்க முடியுமா என்பது வேறு.) ஆனால், இன்றைய இணையத் தமிழில், ஆத்திசூடி படும்பாடு, பெரும்பாடு. ஆமாம்! பிறகு, “ஆத்திச்சூடி” என்று எழுத்துப் பிழையோடு, கல்வி தொடங்கினால்? அது விளங்குமா?
‘ஆத்திச்சூடி’ செயலிகள் (Apps) சிலவும்(!) இருக்கின்றன. இன்ஸ்டகிராம், யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற இணைய ஊடகங்களில் ‘ஆத்திச்சூடி’ என்றே பலரும் எழுதுகிறார்கள். இதைப் பார்த்து, “இணையத்தில் தமிழ் ஔவையா! அடடா” என்று மகிழ்வதா? “நான் எழுதிய ஆத்திசூடியை எழுத்துப் பிழையுடன் எழுதுகிறாயா?” என்று -கையில் கம்போடு- உருட்டி விழிக்கும் ஔவையைப் பார்த்து அஞ்சுவதா?
‘நன்மை கடைப்பிடி’ என்னும் ஆத்திசூடிக்கு, ‘நல்லவற்றைப் பின்பற்று’ என்று பொருள். ஆனால், ‘விக்கிப்பீடியா’வில் ‘கடைபிடி’ என்று உள்ளதைப் பார்த்தோ என்னவோ, நமது இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலிலும் அவ்வாறே உள்ளது. இதற்கு, ‘கடையைப் பிடி’ என்று பொருளாகும்! விக்கிப்பீடியரும், பாடநூல் எழுதியவரும், அடுத்த முறை திருத்திவிட அன்போடு வேண்டுகிறேன்.
வாய்ப்பாடும் வாய்பாடும்: ‘வாய்பாடு’ வாயால் சொல்லிச் சொல்லி, மனப்பாட மாகக் கற்பது. கணித, அறிவியல், வாய்பாடுகளை ஆங்கிலத்தில் ‘Formula’ என்பர். கணக்கு வகுப்பில், வாய்பாடு சொல்லத் தெரியாமல், வாங்கிய பிரம்படியை, எழுபது வயதிலும் மறக்காதவர் இன்றும் உண்டு. ‘கணக்கி’ (Calculator) வந்தபின், ஐந்தையும் பதினொன்றையும் பெருக்க, கணக்கியைத் தேடுகிறாள் ஆறாம் வகுப்புக் கலைவாணி. ‘மனப்பாடம் மட்டுமே கல்வியல்ல’ என்பது, எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, ‘மனப்பாடம் இல்லாமலும் கல்வியில்லை’ என்பதும்! இப்போது வாய்பாடு எனும் அந்தச் சொல்லும் ‘வாய்ப்பாடு’ என்று பிழையாகவே புழங்குகிறது. வாயால் இசைக்கப்படும் வாய்ப்பாட்டின் ‘பக்க வாத்திய விளைவாக’ வாய்ப்பாடு வந்திருக்குமோ?!
பிழைத்திருத்தமா? பிழைதிருத்தமா? - பேச்சில் பிழைநேர்ந்தால் ‘வாய்தவறி வந்துவிட்டது’ என்கிறோம். எழுத்தில் பிழை நேர்ந்தால், திருத்தம் செய்து கொள்கிறோம். கை /வாயின் வேகத்துக்கும் மன வேகத்துக்குமான இடைவெளியே எழுத்து /பேச்சில் நேரும் பிழை என்றும் சொல்லலாம். ஆனால், அந்தப் பிழையைத் திருத்த, முயற்சிகூடச் செய்யாமல் இருப்பதுதான் பெரும் பிழை! பிழையைத் திருத்திக்கொள்வதில் ‘பிழை திருத்தம்’ செய்வதில் பிழையில்லை. ‘பிழைத்திருத்தம்’ என்று எழுதுவதுதான் பெரும்பிழை!
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com