படித்த உடன் மறந்துவிடுகிறதா?

படித்த உடன் மறந்துவிடுகிறதா?
Updated on
2 min read

மாணவ மாணவியரிடையே பொதுவாக எழும் பிரச்சினை படித்த பாடங்களை மறந்துவிடுவதுதான். அதுவும் தேர்வு நாள்களில் மறதி என்பது கொடுமையானது. என்ன செய்யலாம்? மறந்துவிடுகிறது என்பதற்காகப் படிக்காமலே இருந்துவிட்டால் மறக்கவேண்டிய அவசியமில்லை எனக்கூடச் சிலருக்குத் தோன்றலாம். இந்த மறதி எதனால் ஏற்படுகிறது? படிப்பதை மறப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்:

# பதற்றம்: திட்டமின்றிப் படிப்பது பதற்றத்தை ஏற்படுத்தும். ‘இதுநாள் வரை படிக்க வில்லையே’ எனும் குற்றவுணர்வும் ஒரு காரணம்தான். கடைசி நேரத்தில் புதுப்பாடங் களைப் படிப்பதும் ஒரு வகை பதற்றத்தை ஏற்படுத்தும். படிப்பதற்கும் அதை மூளையில் பதிவு செய்வதற்குரிய சமிக்ஞையையும் பதற்றம் துண்டித்து விடும். மறதி யைத் தூண்டி ஞாபகம் வைத்துக் கொள்வதை அது தடுக்கிறது. எனவே, பதற்றமே ஏற்படாமல் நம்மை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

# விருப்பக் குறைவு: படிப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளாமல் அதன் மீது விருப்பமில்லாமல் படிப் பது நினைவில் நிற்காது. நம் அணுகுமுறையும் ஆர்வமின்மை யும் மிக எளிய பாடத்தைக்கூடக் கடினமானதாகக் கருதத் தோன்றும். படிக்கும்போது கடினம் என எண்ணி வெறுப்புடன் படிக்கும்போது அந்தப் பாடங்களின் மீது விருப்பமில்லாமல் போகிறது. பெற்றோரின் விருப்பத்திற்காகப் படித்தாக வேண்டுமே என்கிற கட்டாயத்தில் படித்தால்கூட மறதி ஏற்படும். படிப்பதை மனதில் நிறுத்தும் முந்தைய அனுபவம், செவி வழியே மனதில் தங்கும் அப்பாடம் குறித்த பதிவுகள், ‘கடினமான பாடம் எதுவும் இல்லை, அனைத்தும் எளிய பாடங்கள்’ என எண்ணிப் படிப்பது போன்ற செயல்முறைகளால் படித்தவை நினைவில் நன்கு பதிந்துவிடும். பொதுவாக எந்தச் செயலையும் மிகுந்த விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்தால் வெற்றி நிச்சயம்.

# விழிப்புணர்வின்மை: கவனத்துக்கு அடுத்த கட்டமான வாசிப்பின் மையப்பகுதிக்கு அழைத்துச் செல்வது, அந்தப் பாடத்தைப் பற்றிய உங்களது விழிப்புணர்வேயாகும். படித்த வற்றை மனதிற்குள்ளேயே அசைபோடும்போதும் விழிப்புணர்வு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

# பயம்: பயத்துக்கான முக்கியக் காரணம் பதற்றமும் அசாதாரண கற்பனைகளுமே.

# முறையான பயிற்சியின்மை: பயிற்சி இல்லாமல் வாசிப்பதை மட்டுமே வைத்து நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. பயிற்சியின் மூலம் மட்டுமே பல செய்திகளை அனிச்சைச் செயலாக நினைவில் தேக்கி வைத்துக்கொள்ள முடியும். பயிற்சிக்காகக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அதிக மதிப்பெண்கள் வாங்கும் ஒரு சாதனமாகப் பயிற்சியைப் பயன்படுத்த வேண்டும்.

# சரியாகப் புரிந்துகொள்ளாமை: கண்ணை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்வதும் புரிந்துகொள்ளாமையும் ஒன்றுக்கு இன்னொன்று தொடர்புடையவை. புரிந்துகொண்டு படிப்பது, வைத்த பொருளை நல்ல வெளிச்சத்தில் தேடுவது போன்றது. புரிந்து படிப்பவர்கள் எந்தப் பாடத்தையும் கஷ்டப்பட்டு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. புரிந்துகொண்டால் நுண்ணறிவு மூலம் எதையும் முறையாக எளிதில் வரிசைப் படுத்தவும் மூளையில் அவற்றை அழகாக ஒழுங்குபடுத்தவும் முடியும்.

# கவனக்குறைவு: முழுக் கவனமின்றிப் படிக்கும்போது எதுவும் நினைவில் நிற்காது. கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்யும் எந்தச் செயலிலும் வெற்றி நிச்சயம்.

# எந்திரமயமாகப் படித்தல்: ஓய்வு இல்லாமல் படித்தல், படிப்பறையிலேயே அடைந் திருத்தல், ஒரே பாடத்தைத் தொடர்ந்து படித்தல், வினாத்தாள்களோடு ஒருங்கிணைக்காமல் படித்தல், படித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளாமை ஆகியவை நினைவாற்றலைக் குறைக்கும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

# குறைவான திருப்புதல்: தேர்வுக்கு முன் அனைத்துப் பாடங்களையும் திருப்புதல் செய்ய இயலாமையால் பலர் தேர்வு எழுதும்போது தடுமாற்றம் அடைந்து மதிப்பெண்கள் குறைந்து ஏமாற்றம் அடைகின்றனர். திருப்புதலின்போது பாடத்தின் ஒவ்வொரு பிரிவையும் கண்களை மூடி ஆழ்மனதில் ஓடச்செய்து மறந்து போனவற்றை மீண்டும் வாசித்து மனதில்கொள்ளவேண்டும். படித்ததைத் திருப்புதல் செய்யும்போது ஏற்கெனவே படித்தபோது குறித்துவைத்த கடினப்பகுதிகளை மட்டுமே புரட்டுவது, முழுப் பாடத்தையும் எளிதில் வாசிக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய மூன்றும் நிச்சயமாக வாழ்வில் நீங்கள் வெற்றி பெற்று சாதனைகள் பல புரிய வழி வகுக்கும்.

கற்பனைகளில் சில:

* தோல்வியடைந்து விடுவோமா என எண்ணுவது.
* அதிக மதிப்பெண்கள் பெற முடியாவிட்டால் என்ன செய்வது, அனைத்துப் பாடங்களையும் படித்து விட முடியுமா எனச் சந்தேகம் கொள்வது.
* நம் இலக்கைத் தவற விட்டுவிடுவோமோ என்கிற நினைப்பு.
* தேர்வு நேரத்தில், ‘தேர்வுக்கு அந்த வினா வரும், இந்த வினா வரும். அதைப் படித்தாயா, இதைப் படித்தாயா?’ என்று சிலர் சொல்வதைக் கேட்டு நடுங்கி அச்சம் கொள்வது.
* குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கப்போகும் முன் சற்று நடுக்கத்துடன் பயமிருந்தாலும் முதல் கிண்ணம் தண்ணீர் ஊற்றிக் குளித்தபின் அந்தப் பயம் நீங்கிவிடுவதுபோல் படிப்பைத் தொடங்கும் முன் இருக்கும் பயமும் பதற்றமும் படிக்கத் தொடங்கியபின் பறந்துவிடும் என்பதுதான் உண்மை என நாம் உணரவேண்டும்.

- success.gg@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in