ஆங்கிலம் அறிவோமே 4.0 - 60: வார்த்தைகள் மாறும் காலம்!

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 60: வார்த்தைகள் மாறும் காலம்!
Updated on
2 min read

‘Physically handicapped person’ என்றால் முன்பு உடல் ஊனமுற்றவர் என்போம். இப்போது தமிழில் அதை மாற்றுத்திறனாளி என்று அழகாகக் கூறுகிறோம். ஆனால், ஆங்கிலத்தில் ‘physically disabled’ என்று கூறுகிறார்களே! வாசகரே, சம்பந்தப்பட்டவருக்கு மாற்றுத்திறன் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். எனவே, மாற்றுத் திறனாளி என்பது பொருத்தமான வார்த்தையா என்ற கேள்விகூட எழலாம். ஆனால், மாற்றுத்திறனாளி என்று அழைப்பது மனிதாபிமான வெளிப்பாடு. இது சம்பந்தப்பட்டவரை காயப்படுத்தாமல் இருக்கிறது. ஆங்கிலத்தில்கூட இந்த அடிப்படையில் வேறு பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை ‘euphemism’ என்பார்கள் (கிரேக்க மொழியில் ‘eu’ என்பது நல்ல என்பதைக் குறிக்கும்). கேட்கும் திறன் இழத்தலை ‘hearing loss’ என்பதற்குப் பதிலாக ‘hearing impairment’ என்பது இந்த வகைதான். (செவிட்டுத் தன்மை என்பதற்குப் பதிலாக கேட்கும் திறன் இழத்தல் என்பதுபோல). வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணை ‘servant’ என்பதற்குப் பதிலாக ‘maid’ என்று குறிப்பிடுவதும் இந்த வகையில்தான்.

‘He died’ என்பதை ‘he departed’ என்பதும் இதுவே (தமிழில் இறைவனடி சேர்ந்தார் என்பதும் இஃதே). ‘They made love’ என்பது அவர்கள் காதலித்தார்கள் என்பதைக் குறிக்கும் வாக்கியம் அல்ல. அவர்கள் உறவு கொண்டார்கள் என்பதைக் குறிக்கும் வாக்கியம். (அவர்களுக்கிடையே சிறிதும் காதல் இல்லாமலும் இருக்கலாம்). ‘He slept with her’ என்பது சம்பந்தப்பட்டவர்கள் அருகருகே படுத்துக்கொண்டு தூங் கினார்கள் என்பதைக் குறிப்பதல்ல. அதுவும், ‘They made love’ வகைதான். நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது ‘I am between jobs’ என்று ஒருவர் கூறினால், ‘ஓ, பல வேலைகளுக்கு நடுவே பிஸியாக இருக்கிறீர்களா? நான் பிறகு கூப்பிடுகிறேன்’ என்று கூறினால், அது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு சமம். ‘I am between jobs’ என்பது வலையின்மையைக் குறிக்கிறது.‘Cheap’ என்று சொல்லுக்குப் பதிலாக ‘frugal’, ‘economical’, ‘thrifty’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு நாகரிகம். எதையும் வாங்குகிற எண்ணமே இல்லாமல் ஒரு சூப்பர் மார்க்கெட் டுக்குச் சென்று வெறும் கையோடு திரும்பிய ஒருவர், பெருமையோடு ‘I did window shopping’ என்று கம்பீரமாகச் சொல்லலாம்.

வளராத நாடுகளை ‘developing countries’ என்று கூறுவது வேறென்னவாம்? ஒரு விசேஷத்தில் பலரும் கூடி இருக்கின்றனர். அப்போது உங்களுக்குத் தெரிந்த ஒருவர், ‘Excuse me. I shall go and powder my nose’ என்று கூறிவிட்டு நகரத் தொடங்கினால், ‘அப்படியானால் நீங்கள் வலதுபக்கம்தான் போக வேண்டும். அங்கே உள்ள அறையில்தான் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியும் பவுடர் போன்ற ஒப்பனைப் பொருள்களும் உள்ளன’ என்று வழிகாட்டியாக மாறி அவரை சங்கடப்படுத்தக் கூடாது. அப்படிக் கூறுபவர் ‘கழிவறைக்குச் செல்ல விரும்புகிறார்’ என்று பொருள். (கழிவறை என்பது toilet என்றாகி இப்போது restroom ஆனதும் தெரிந்ததுதானே). முக்கியமான மீட்டிங். கிளம்பத் தாமதமாகி விட்டது. ‘I will come late’ என்பதற்குப் பதிலாக ‘I am running a little behind’ எனலாம். பிள்ளைத்தாய்ச்சி என்று தமிழில் கூறிவந்தவர்கள் ‘pregnant’ என்று கூறுவதே நாகரிகம் என்று கருத, ஒரு கட்டத்தில் அதைவிடவும் ‘in family way’ என்று கூறுவதே சிறப்பு என்று கருதத் தொடங்கிவிட்டார்கள். உடல் ஊனமுற்றவரை ‘physically disabled’ என்பதற்குப் பதிலாக ‘physically challenged’ என்று குறிப்பிடத் தொடங்கி இருக் கிறார்கள்.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in