தமிழ் இனிது 25: ஒரு வினாடிக்கு எத்தனை நொடி?!

தமிழ் இனிது 25: ஒரு வினாடிக்கு எத்தனை நொடி?!
Updated on
2 min read

சம்மந்தி – சம்பந்தி: திருமண உறவால் இரண்டு குடும்பங்கள் இணைவதே சம்பந்தம். புதிய உறவின் குடும்பத் தலைவர்கள் சம்பந்தி ஆகின்றனர். சமமான பந்தம் (உறவு)- சம பந்தம் - சம்பந்தம் ஆனது. ‘மருமகனின் / மருமகளின் பெற்றோர்’ எனும் பொருள் தரும் சொல் இது. ‘சமன் செய்து’ (குறள்-118), ‘சரிநிகர் சமானம்’ - பாரதி, ‘சமச்சீர்க் கல்வி’ போல, சம்பந்தியும் – ஏற்றத் தாழ்வில்லாத - சமத்துவம் கருதிய சொல்லே.

இரண்டு முழங்காலையும் சமமாக மடக்கி அமர்வது சம்மணம். (ச(ம்)மணர் இவ்வாறே அமர்வர்). பந்தி எனில் விருந்து வரிசை. ஊரார் இதனை ‘கொண்டான் - கொடுத்தான்’ என்றே பேச்சு வழக்கில் சொல்கிறார்கள்.

கம்பு எனும் சிறுதானியக் கூழ் - கம்பங்கூழ் - கம்மங்கூழ் ஆனது போல, ப, ம இன எழுத்துகள் மயங்கி ஒலிக்கும் மயங்கொலிச் சொல்லே சம்மந்தி என்பது. எனவே, சம்பந்தி எனும் சொல்லே பொருளோடு வாழட்டும்!

அறுவெறுப்பும் – கண்றாவியும்: ‘அருவரு’ என்றால் வெறுத்து ஒதுக்குதல் என்று பொருள். அராவுதல் - அருவுதல். இன்னது என்னும் தெளிவு இல்லாமல், உடலை / மனத்தை (அ)ராவுதல் அருவுதல் - அருவருப்பு. கண்ணை வருத்தும் காட்சியைக் கண்ணை (அ)ராவுதல் – உரசுதல் - கண்ணராவி (கண்றாவி அல்ல) என்போம். அருவருப்பாக உணர்தலை ‘அருவருப்பு’ என்பதே சரி. என்னதான் வெறுப்பாக இருந்தாலும், ‘அருவெறுப்பு’ என்பது பிழையான சொல்லே.

உடன்பாடும் உடம்பாடும்: கூட்டணிக் கட்சிகளிடையே ‘உடன்பாடு ஏற்பட்டது’ என்கிறார்கள். இணையாத ஈரெழுத்துகள் இணைய, உடம்படு மெய் வரும் என்பது இலக்கணம். (நன்னூல்-162) உடம்படுத்தல்தான் சொல்.

‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போடு உடன் உறைந்த அற்று’ (குறள்-890) என்கிறார் வள்ளுவர். ஆனால், இப்போது கடப்பாடு, ஒருமைப்பாடு போல, உடன்பாடும் நிலைத்துவிட்டது. நாமும் உடன்பட வேண்டியதுதான்.

நொடி வேறு வினாடி வேறு: இயல்பாகக் கண் இமைக்கும் நேரமும், கைவிரலை நொடிக்கும் -சொடுக்கும் நேரமுமே ஒரு மாத்திரை எனும் கால அளவு என்பார் தொல்காப்பியர் (‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை’- தொல்-07). கண்ணையும், விரலையும் எடுத்துக்காட்டாகச் சொன்னது ஏன் எனில், “காது கேளாதவர் புரிந்துகொள்ளக் கண் இமைப்பதையும், பார்வை அற்றவர் அறிந்துகொள்ளக் கை நொடித்தலையும் சொன்னார்” என்று திருச்சியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர், தமிழறிஞர் ஜோசப் விஜூ நயம்படச் சொல்வது சிறப்பு. ஆனால், தமிழ்க் கணக்கின் அளவான – அழகான - நொடி, இன்றைய உலகக் கணக்களவில் இல்லை.

நாழிகை பழந்தமிழ்க் கணக்கு. (அதனால்தான் ‘நாழியாச்சு’ என்று பறக்கிறார்கள்) தமிழ் எண்கள் மறைந்து, ரோம எண்களே வழக்கில் இருப்பதால், வணிகத்தில் இன்றியமையாத எண்களில் நொடிக் கணக்கு இப்போது வழக்கில் இல்லை.

60 வினாடி ஒரு நிமிடம். ஒரு வினாடிக்கு 24 நொடி. நொடியும், வினாடியும் வேறு வேறு. வினாடி / விநாடி என்பன வடமொழி. நிமிட(minute) கணக்கை மணித்துளி என்கிறோம். நொடியை வினாடி என்கிறோம், அப்படித்தான் அகராதிகளும் சொல்கின்றன. வாழ்க்கைக் கணக்கில், தமிழ்க் கணக்கு மாறியதை யார் அறிவார்?

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in