

ஒரு படம் பார்க்கச் செல்கிறீர்கள். ‘படம் எப்படி இருந்தது?' எனப் பொதுவான கேள்வி எழுகிறது. சிலர் படம் நன்றாக இருந்தது என்பார்கள். இன்னும் சிலர் படத்தோடு தங்கள் அனுபவங்கள் ஒன்றிப்போனால் அதைப் பேசுவார்கள். சிலர் திரைக்கதை, படத்தொகுப்பு என சினிமா நுட்பங்கள் பற்றிப் பேசுவார்கள்.
ஆக, எல்லோருடைய பதில்களும் ஒன்று போல இருப்பதில்லை. ஒவ்வொருவரின் சினிமா தொடர்பான பார்வை, புரிதல், தேடல், ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் பதிலும் மாறுகிறது. அதேபோல் மாணவர்களிடம் வாசிக்க புத்தகம் தருகிறோம். அவர்கள் வாசிப்பும் அதைச் சார்ந்த வெளிப்பாடும் ஒருவருக்கொருவர் மாறுபடும் என்பதை உணர்ந்திருக்கிறோமா?
வாசிப்பதே சவால்தான்: ஒரு மாணவர் நன்றாக வாசித்து கதை சொன்னால் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் மற்றொரு மாணவரால் சரிவர வெளிப்படுத்த முடியவில்லை எனில் சரியாக வாசிக்கவில்லை என முத்திரை குத்தி விடுகிறோம். நான் கவனித்தவரையில் மாணவர்களின் வாசிப்பும் அதனை வெளிப்படுத்தும் விதமும் பல கட்டங்களாக உள்ளன. உதாரணத்துக்கு ஆதி என்கிற வாசிக்கத் தடுமாறும் ஒரு மாணவனை எடுத்துக்கொள்வோம். ஆதி சில எழுத்துகள் தெரிந்தும் / தெரியாமலும் தட்டுத் தடுமாறி வாசிக்கி றான். அவனைப் பொறுத்த வரை ஒரு கதையை வாசித்து முடிப்பதே பெரிய சவால்தான்.
வாசித்து முடித்தபின், அவன் அளவில் புரிந்த கதையைச் சொல்வான்.
உதாரணமாக, ஆதி ‘தேனீயின் பசி' கதையை வாசித்து முடித்தான். தேனீ பூக்களைத் தேடிச் செல்வதுதான் கதை. அதில், ‘தேனீ', ‘பசி' எனக் கதையில் பலமுறை வந்த சொற்களின் எழுத்துகளை ஆதி அறிந்துகொண்டான். அதை எழுதிப் பார்த்தான். அந்த இரு சொற்கள் மட்டுமே கதை வாசிப்பில் அவன் கற்றுக்கொண்டவை.
தொடர் வாசிப்பு: அடுத்தக் கட்டமாக ஆதிக்கு ஓரளவு வாசிக்கத் தெரிந்துவிட்டது. கதையைச் சரளமாக வாசிக்கிறான். அவனது இயல்பில் கதையை மீண்டும் அப்படியே சொல்கிறான். கூடக் குறையாகக் கதையைச் சொல்கிறான். இப்போது ஆதி, ‘புது டீச்சர்’ எனும் கதையை வாசிக்கிறான். அது வகுப்பறையில் மாணவர்கள் செய்யும் சின்னச்சின்ன தவறுகளைப் ‘பரவாயில்லை' எனச் சொல்லி ஏற்கும் திட்டாத ஆசிரியரின் கதை.
இந்தக் கதையின் மையத்தை ஆதிக்கு சொல்லத் தெரியாது. ஆனால், கதை சொல்லி விடுவான். அடுத்து, ஆதி தொடர்ச்சியாக வாசிக்கிறான். தொடர் வாசிப்பின் மூலம் கதையை உள்வாங்குகிறான். கதை வாசித்து அதைத் தன் வாழ்க்கையோடு பொருத்துகிறான். கதையின் மையம் / பாத்திரங்களைத் தன் வாழ்க்கையோடு இணைத்து ஆராய்கிறான்.
உதாரணத்துக்கு ஆதி ‘புலியின் நிறம்' கதையை வாசிக்கிறான். அதில் காட்டில் இருந்த புலி கூண்டுக்குள் அடைப்பட்டதும் தன் நிறத்தை இழக்கும். மீண்டும் காட்டிற்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்த பின்பு பழையபடி தன் நிறத்தைப் பெறும்.
இக்கதையை வாசித்த ஆதி, விடுமுறையில் தன் அம்மாவைப் விட்டுப் பிரிந்து கொஞ்ச நாள் விடுதியில் இருந்ததை நினைக்கிறான். தன்னைப் போலத்தானே புலியும் அதன் வீட்டை விட்டுப் பிரிந்து கஷ்டப்படும் என்று தன் நிலையை இணைத்துப் பார்க்கிறான். அந்தக் கதையைச் சொல்லும்போது அவனையும் வெளிப்படுத்துகிறான்.
தேடி வாசித்தல்: ஆதி தொடர்ந்து வாசிக்கிறான். இப்போது ஆதிக்கு கதையின் மையம் புரிய ஆரம்பிக்கிறது. கதை வாசித்து, நன்கு உள்வாங்கிய பின் அதில் தன்னைப் பாதித்தது எது என யோசிக்கிறான். அதற்கான காரணங்களைத் தேடுகிறான். கதையின் தாக்கத்தால் தன்னையே சுயவிமர்சனத்துக்கும் கேள்விக்கும் உட்படுத்துகிறான்.
உதாரணத்துக்கு ஆதி ‘நோ சொல்லு' என்ற கதையை வாசிக்கிறான். கதையில் பட்டப்பெயர் வைத்து அழைத்தால் ‘நோ' சொல்ல வேண்டும் என வருகிறது. ஆதி, தன் நண்பர்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பதை மகிழ்ச்சியாக செய்து கொண்டிருந்தவன். ஆனால், கதையில் பட்டப்பெயர் தொடர்பான வாசிப்பு அதைச் சார்ந்த உரையாடல் அவனை யோசிக்க வைக்கிறது. தன் நண்பனுக்கு அது பிடிக்கவில்லை என்றதும் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறான்.
அடுத்து ஆதி தேடித் தேடி வாசிக்கிறான். கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிக்கிறான். ஆதி வாசிப்பதன் வழி மகிழ்ச்சி அடைகிறான். பின்னர் தானும் இதே போல் கதை எழுதினால் என்ன என நினைக்கிறான். புதிய கதை ஒன்றை எழுதுகிறான். கடைசி நிலையில் எல்லாரும் கதை எழுத வேண்டியதில்லை. கதைகள் வாசிப்பதன் வழியே மாணவர்களிடம் சுயகற்றல் நடக்கிறது. வழக்கமான பாடப்புத்தகங்கள் கற்றுத்தர இயலாத நுட்பமான உணர்வுகளை கதைகள் கற்றுத் தருகின்றன.
வாசிப்பு அறிமுகம்: “ஆதிக்கு வாசிக்கவே தெரியல. அவனுக்கு ஏன் புத்தகம் தர்றீங்க?” என்கிற கேள்வி பல இடங்களில் எழுகிறது. ஆதியை ஈர்க்கும் வகையில் எளிமையான புத்தகங்களைத் தயாரித்து அவன் கையில் சேர்க்கவில்லை எனில், முதல் கட்டமாக எழுத்து அறிதல் எப்படி நடக்கும்? வாசிப்பிற்குள் எப்படி நுழைவான்? சுயகற்றலை நோக்கி எப்படி நகர்வான்? உங்களுக்கு அருகில் இருக்கும் மாணவர்களுக்கு வாசிக்க எளிமையான புத்தகங்களைக் கொடுங்கள். அவர்கள் தேர்வு செய்யட்டும். அவர்கள் வாசித்து வெளிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில் எந்தக் கட்டத்தில் இருக்கிறார்கள் என கண்டறியுங்கள். அவர்களுக்குத் தேவை எளிய புத்தகங்களும் வாசிப்பதற்கான ஊக்கமும் அதற்கேற்ற சூழலும்தான்.
ஒரு குழந்தைக்கு நீங்கள் தரும் ஆகச்சிறந்த வாழ்நாள் பரிசு புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்துவதுதான்.
கட்டுரையாளர்: அரசுப்பள்ளி ஆசிரியர், வாசிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்