

தவறாமல் / தவிராமல்: அழைப்பிதழில் ‘தவறாமல் வருகை தர’ கேட்டுக் கொள்கிறார்கள். வருவதைத் தவிர்த்து விடாமல் - தவிர்க்காமல் - தவிராமல் வந்துவிட வேண்டுகிறோம் என்னும் பொருளில்தான் ‘தவறாமல்’ எனும் சொல்லில் அழைக்கிறார்கள். ஆனாலும், இது சரியான சொல் அன்று. அழைப்பதை ஏற்று வருவதில் தவறு, தப்பு ஏதும் உள்ளதா என்ன? எனவே, தவிராமல் (அ) தவிர்க்காமல் வருகைதர அழைப்பதே சரி.
ஏற்கனவே / ஏற்கெனவே: ஒரு திரைப்படத்தில் வரும் ‘எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ..’ வரிகளைக் கவிஞர் வைரமுத்து சரியாகவே எழுதி, பாடியவரும் சரியாகவே பாடியிருக்கிறார். எனினும் இணையத்தில் வழக்கம்போல, ‘ஏற்கனவே’ என்றே உள்ளது. மின்னூலாகவும் கிடைக்கும் ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு நாவலும்கூட ‘ஏற்கனவே’ என்றே வந்துள்ளன. ஆனால், ‘முன் சொன்னதற்கு ஏற்க-எனவே’ எனும் பொருள் தரும் இதற்கு, ‘ஏற்கெனவே’ (முன்னதாகவே-Already) என்பதுதான் சரியான பொருள் தரும் சொல்.
மெள்ள / மெல்ல: ‘மெல்ல’ எனும் சொல், ‘மென்மை’ எனும் பண்பு குறித்த சொல். மெல்லிசை, மெல்லினம் போலும். சொற்களாக எழுத்து மொழியிலும், ‘மெல்லிசு’ போலப் பேச்சு வழக்கிலும் வரும். இதை ‘மெள்ள’ என்றும் சிலர் எழுதுகிறார்கள். ஆனால், ‘மெள்ள’ எனும் சொல்லுக்கு மென்மை என்றோ, மெதுவாக எனும் பொருளிலோ வேர்ச்சொல் ஏதும் இல்லை. கம்பரும் ‘அருந்தும் மெல் அடகு’ என்னும் வரியில், ‘லகர’ ஒற்றையே பயன்படுத்துகிறார். தமிழறிஞர் பலரை உருவாக்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த தமிழறிஞர் நீ.கந்தசாமியின் நூலை மேற்கோளிட்டு, ‘மெல்ல’ எனும் சொல், பழந்தமிழில் – மென்மை எனும் பொருளில் வந்துள்ள சொற்களின் பட்டியலைத் தருகிறார் தமிழறிஞர் நா.கணேசன் (கூகுள் குழு உரையாடல்).
அவர், ‘மெல்ல எனும் சொல், வழக்கில் ‘மெள்ள’ என மருவியிருக்கலாம்’ என்றும் சொல்கிறார். இதுபோல ‘சங்கத் தமிழ் தேடு’ செயலியில், ‘மெல்’ என இட்டால் சங்க இலக்கிய நூல்களில் மட்டும் 97 இடங்களில் மென்மை பொருளில் வந்துள்ள பட்டியல் கிடைக்கிறது. ‘மெள்ள’ ஒன்றுகூட இல்லை. எனவே ‘மெல்ல’ எனும் சொல்லே மென்மை, மெதுவாக எனும் பொருள்களில் வரும் சொல் என்றும், ‘மெள்ள’ எனும் சொல், வழக்கில் மருவி, தவறாகப் புழங்குவதாகவும் கொள்ளலாம்.
மென்மேலும் தவறு செய்ய வேண்டாம்: தொடர்ந்து தவறு செய்பவரை, ‘மென்மேலும் தவறு செய்கிறார்’ என்கிறார்கள். ஆனால் இதுவும் தவறே. ‘மேலும் மேலும்’ தவறு செய்வதை ‘மேன்மேலும்’ என்றுதான் சொல்ல முடியும். முதலில் வரும் ‘மேல்’ எனும் சொல், ‘மெல்’ என மாறுவது வழக்கில் நடக்கும் தவறு. இது எழுத்திலும் தொடர்வதோடு, பல அகரமுதலி(அகராதி)களிலும் ஏறிவிட்டதால் இதைப் பற்றிச் சொல்ல நேர்கிறது. அன்புடன் வேண்டுகிறேன், ‘மேன்மேலும்’ என்னும் சொல்லை, ‘மென்மேலும்’ என்று எழுதி, மேலும் மேலும் தவறு செய்ய வேண்டாமே?
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com