ஆங்கிலம் அறிவோமே 4.0: 59 - ‘Foot’ஐ சரியாகப் பயன்படுத்துவோமா?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 59 - ‘Foot’ஐ சரியாகப் பயன்படுத்துவோமா?
Updated on
2 min read

‘Corporal punishment’ என்பது எதைக் குறிக்கிறது?

‘Corporal’ அல்லது ‘corporeal punishment’ என்பது உடலைத் துன்புறுத்துவதைக் குறிக்கிறது. அடித்தல், உதைத்தல் என்பதுபோல. இதில் ‘corporal’ என்ற சொல் ‘adjective’ ஆகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘Corporal’ என்பது ‘noun’ஆகப் பயன்படுத்தப் படும்போது ராணுவத்திலுள்ள, சற்றே ஆரம்பநிலை அதிகாரியைக் குறிக்கிறது.

***

‘My foot!’ என்று அழுத்தம் திருத்தமாக ஒருவர் கூறினால், அது அதிகாரத்தை வெளிப்படுத்துகிறதா? - அது நம்ப முடியாமையைக் குறிக்கும் சொற்றொடர். வாக்கியத்தின் இறுதியில் வியப்புக்குறி இருப்பதையும் கவனித்திருப்பீர்கள். பாதம் தொடர்பான வேறு சில வழக்குச் சொற்களையும் பார்ப்போம். ‘Take a load off your feet’ என்றால், நீங்கள் உட்கார்ந்துகொள்ளலாம் என்று பொருள். ‘Get your feet wet’ என்றால், புதிய சூழலுக்கு உங்களை தயார் செய்துகொள்ளுங்கள் என்று பொருள். ‘Find your feet’ என்பது அனுபவத்தின் மூலம் நம்பிக்கையைப் பெறுங்கள் எனும் ஆலோசனை.

‘Get cold feet’ என்றால் உங்களுக்கு ஏதோ சந்தேகம் தோன்றியிருப்பதையும் அதன் காரணமாக நீங்கள் செய்ய இருக்கும் செயலைச் செய்யாமல் தயங்குகிறீர்கள் என்பதும் புலப்படுகிறது. ‘Put your foot down’ என்பது மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்வதைக் குறிக்கிறது. ‘உன் வேலை எப்படி இருக்கிறது?’ என்று ஒருவரைக் கேட்கிறீர்கள். அப்போது, உங்களுக்குத் தெரியாது அவரை வேலையை விட்டுத் ‘தூக்கி’விட்டார்கள் என்பது. ‘You had put your foot in your mouth’. அதாவது, உங்களையும் அறியாமல் ஒருவருக்கு பெரும் சங்கடத்தை அளித்துவிட்டீர்கள். ‘I am dead on my feet’ என்பது நான் மிகவும் களைப்படைந்து விட்டேன் என்பதைக் குறிக்கிறது.

***

எது சரியான பயன்பாடு? ‘Everyday’ என்பதா? ‘Every day’ என்பதா? - இரண்டுமே சரிதான். ஆனால் அவை வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. ‘Everyday’ (இடைவெளி இல்லாத வார்த்தை) மிகவும் வழக்கமான என்று பொருளைக் குறிக்கப் பயன்படுகிறது. ‘This is an everyday occurrence’ என்றால் இது ஒரு தினசரி நிகழ்வு (அதாவது அடிக்கடி நடப்பது தான்) என்று பொருள். ‘Every day’ என்பது ஒவ்வொரு நாளும் என்பதைக் குறிக்கி றது. ‘You should attend the classes every day’.

***

‘Then, than’ ஆகிய இரண்டு வார்த்தை களையும் நான் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தி விடுகிறேன். இவற்றின் அர்த்தங்களிலும் குழப்பம் நேர்கிறது. என்ன செய்யலாம் என்று கேட்கிறார் ஒருவர்.

நேரம் குறித்த சொல் ‘then.’ ‘Go to his house and then come to my house.’ ‘Have your food, then go to school.’ ‘Than’ என்பது ஒப்பிடும்போது பயன்படுத்தப்படும் சொல். ‘My bag is larger than your bag.’ ‘I will rather be poor than do the evil thing you want me to do.’

சிப்ஸ்

‘Innards’ என்று ஒரு மருத்துவ அறிக்கையில் படித்தேன். அதன் பொருள்

உள்ளுறுப்புகள்.

‘In-law?’ என்றால் என்ன?

திருமணத்தால் ஏற்படும் பந்தம். ‘Mother-in-law, brothers-in-law, sisters-in-law’. (கவனித்தீர்களா? Brother-in-laws, Sister-in-laws அல்ல).

‘Go slow?’ அல்லது ‘Go slowly?’ - எது சரி?

இரண்டும் சரிதான். (பின்னால் மாடு முட்ட வரும்போது இரண்டுமே சரி அல்ல!)

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in