

கற்றல் ஆர்வம் மட்டுமே வாழ்வை என்றைக்கும் சுவாரசியம் ஆக்குகிறது. 21ஆம் நூற்றாண்டில் கல்வி பரந்துப்பட்ட தளத்தைச் சென்றடைந் திருக்கிறது. குறிப்பாக, தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் அணிவகுக்கும் செயலிகள், கற்றல் முறையை எளிமையாக்கியுள்ளன. அந்த வகையில் மாணவர்களுக்கு உதவும் 5 கற்றல் செயலிகளைத் தெரிந்துகொள்வோம்.
டுவோலிங்கோ: வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில வேண்டும் என்பது மாணவர்கள் பலரின் கனவு. அவ்வாறு மேல்படிப்புக்காகச் செல்லும் மாணவர்களுக்குப் பெரும் தடையாக இருப்பது மொழிப் பிரச்சினை. குறிப்பாக, கொரியா, ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் கல்வி கற்க செல்லும்போது அந்நாட்டு மொழியைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த வகையில் மாணவர்களின் தேவையை உணர்ந்து, எளிமையான வகையில் பன்னாட்டு மொழிகளைக் கற்றுத் தருகிறது ‘டுவோலிங்கோ’ (Duolingo) செயலி.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கற்றல் செயலி இது. வலைதளம் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு போன்களில் ‘டுவோலிங்கோ’ செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சுமார் 80க்கும் மேற்பட்ட புதிய மொழிகளை இந்தச் செயலி மூலம் மாணவர்கள் கற்கலாம். சுவாரசியமாக மொழிகளை கற்க ஏதுவாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இச்செயலி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இச்செயலியைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கோர்ஸரா: இந்தக் காலத்தில் வெறும் பட்டப் படிப்பு மட்டும் போதாது. பட்டப் படிப்புகளுடன் அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற தனித்துவமான படிப்புகளையும் படிப்பது மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு உதவும். அந்த வகையில் இணையதளப் படிப்புகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து அதற்கான சான்றிதழையும் வழங்குகிறது ‘கோர்ஸரா’ (Coursera) செயலி. வணிகம், கணினி அறிவியல், தரவு அறிவியல், மருத்துவம், கலை, தகவல் தொழில்நுட்பம் என ஏழாயிரத்துக்கும் அதிகமான படிப்புகள் இச்செயலியில் இடம்பெற்றுள்ளன. ஆனால், பயனர்கள் இச்செயலியைப் பயன்படுத்த குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் முதல் ஏழு நாள்களுக்கு இச்செயலியைக் கட்டணம் ஏதுமின்றி பயனர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இச்செயலியின் மூலம் புதிய படிப்புகளைக் கற்று வருகிறார்கள். ஓரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளையும் இச்செயலி மூலம் படிக்கலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பு.
சிட்டி: பள்ளிக் குழந்தைகள் கற்றல் மீது காட்டும் ஆர்வமே எதிர்காலத்தில் அவர்களைப் படைப்பாளராக மாற்றும். புத்தகத்தில் படித்ததை வெறுமனே மனப்பாடம் செய்து, தேர்வில் எழுதுவதோடு மட்டுமல்லாமல், செய்முறையில் பரிசோதனை செய்து பார்ப்பது மாணவர்களின் மனதில் பதிய உதவும். அந்த வகையில் செய்முறை கல்வியை மாணவர்களிடம் ஊக்கப்படுத்துவதில் ‘சிட்டி’ (Chitti) செயலி முன்னிலையில் உள்ளது. அறிவியல், கணிதம் தொடர்பான சந்தேகங்களுக்கு அனிமேஷன் முறையில் எளிமையான விளக்கங்களை இச்செயலி தருகிறது. மேலும் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைச் சுவாரசியமான செயல் முறைகளுடன் மாணவர்களிடம் இச்செயலி கொண்டு செல்கிறது. முக்கியமாக ‘சிட்டி’ செயலியில் பாடங்கள் தமிழ் மொழியில் கற்றுத் தரப்படுகிறது.
கேம்பிலி: ஆங்கிலம் கற்பதில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? அப்படியெனில் அதற்கான சிறந்த வழிகாட்டுதலை வழங்குகிறது கேம்பிலி (Cambly) செயலி. ஆங்கிலத்தைப் பேசுவதில் ஏற்படும் தயக்கத்தைக் குறைத்து தன்னம்பிக்கையுடன் உரையாடச் இச்செயலி உதவுகிறது. இத்தளத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆங்கிலப் பயிற்சி அளிக்கிறார்கள். அவர்கள் நம்மை தொடர்புகொள்வார்கள். அவர்களுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் ஆங்கிலத்தைச் சரளமாகப் பேச முடியும். மேலும் அடிப்படை ஆங்கிலத்தை முதலில் கற்று தருவதால், ஆரம்ப நிலையில் இருப்பவருக்கும் இது பயனளிக்கும். மொழியைக் கற்றுத் தருவது மட்டுமல்லாமல், வார்த்தைகளைச் சரியான உச்சரிப்புடன் கூறவும் இச்செயலியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி பயனர்கள் இத்தளத்தில் பயிற்சி பெறலாம்.
ஸ்டெல்லேரியம் மொபைல்: விண்வெளி துறையில் சாதிப்பதைக் கனவாக கொண்ட மாணவர்களுக்கு உற்சாகமான அனுபவத்தைத் தருகிறது ஸ்டெல்லேரியம் (Stellarium mobile- star map) செயலி. வானியல், கோள்கள், நட்சத்திரங்கள், அண்டம் குறித்து ஆர்வமுள்ளவர்களின் ஆவலை மேலும் தூண்டும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. திறன்பேசி மூலம் வானியலின் சுவாரசியமான தகவல்களைக் கற்றுக்கொள்ள இந்தச் செயலி உதவுகிறது. மேலும் ‘ஸ்டெல்லேரியம்’ செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள திறன்பேசி கேமராவை வானத்தை நோக்கிக் காட்டும்போது, அதன் வழியே நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள், செயற்கைகோள்கள், வால் நட்சத்திரங்களை எளிதாக அடையாளம் காணலாம். ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுளின் பிளே ஸ்டோர் தளத்திலும், ஆப்பிள் பயனர்கள் ஆப் ஸ்டோர் தளத்திலும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ‘ஸ்டெல்லேரியம்’ செயலியைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை.