

எட்டு கைகள் கொண்டிருப்பதால் அந்த உயிரினத்தை 'ஆக்டோபஸ்' என்கிறார்களாமே, உண்மையா? - ‘ஆக்டோ' என்றால் லத்தீன் மொழியில் 'எட்டு' என்று பொருள். அக்டோபர்கூட தொடக்கத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அதனால் தான் அந்தப் பெயர். (செப் டம்பர், டிசம்பர் ஆகியவைகூட முறையே ஒன்பதாவது, பத்தாவது எனும் பொருளில் பெயரிடப் பட்ட மாதங்கள்தான்). எனினும் 'ஆக்டோபஸ்' என்றால் எட்டு ‘பாதங்கள்’ என்றுதான் பொருள்.
வேறு சில விலங்குகளின் பெயர்க் காரணங்களையும் அறிந்து கொள்வோமே. ‘Hippopotamus’ என்பது நீர்யானை. கிரேக்க மொழியில் இந்தச் சொல்லின் பெயர் நீர்யானை அல்லது நீர்க் குதிரை. ‘ஹிப்போஸ்’ என்பது குதிரையையும் ‘போடோமஸ்' என்பது நீரையும் குறிக்கும் சொற்கள். காண்டாமிருகத்தை ‘rhinoceros’ என்பதற்கும் இதேபோன்ற காரணம் உண்டு. கிரேக்க மொழியில் ‘rhino’ என்பது மூக்கையும் ‘ceros’ என்பது கொம்பையும் குறிக்கும். (கொம்பு, மூக்கு கொண்ட விலங்கு). ‘Rhinoplasty’ என்பது மூக்கில் செய்யப்படும் அறுவைசிகிச்சை. ‘Orangutan’ என்பது ஒருவகை குரங்கினத்தைக் குறிக்கிறது. (சிம்பன்ஸியும் இந்தக் குரங்கினமும் மனித இனத்துக்கு மிக நெருக்கமானவை. மரபணுக்களில் மிக ஒத்திருப்பவை). ‘ஒராங் உத்தன்’ என்பதன் பொருள் ‘காட்டு மனிதன்’. மலாய் மொழியில் ‘orang’ என்பது மனிதனையும், இந்தோனேசிய மொழியில் ‘hutan’ என்பது வனத்தையும் குறிக்கும் சொற்கள்.
கங்காரு என்ற பெயர் அந்த விலங்குக்கு வைக்கப்பட்டது குறித்து ஒரு வேடிக்கையான கதை கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவை முதலில் அடைந்த ஐரோப்பியர் ஜேம்ஸ் குக். இவர் அந்தப் பகுதிகளில் திரிந்துகொண்டிருந்த வித்தியாசமான விலங்கைக் கண்டு, அதன் பெயர் என்ன என்று அங்குள்ள பழங்குடி இனத்தவரைக் கேட்டபோது, ‘கங்காரு’ என்று பதில் கிடைத்ததாம். அவர்களின் மொழியில் இதற்கு அர்த்தம் ‘எனக்குத் தெரியாது’. ஆனால், அதுதான் அந்த விலங்கின் பெயர் என்று எண்ணிய ஜேம்ஸ் குக் அப்படியே அதைக் குறிப்பிடத் தொடங்க அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.
***
‘Imposter’ என்றாலே ஏமாற்றுபவரா? - ஒருவர் போல் நடித்து ஏமாற்றுபவர். ஆனால், ஒருவர் ‘imposter syndrome’ கொண்டவராக இருக்கிறார் என்றால் அதன் பொருள் வேறு. தனக்கு அதிக மரியாதை, மதிப்பு தரப்படுகிறது என்றும் தான் இதற்கு தகுதியானவர் அல்ல என்றும் ஒருவர் தொடர்ந்து நினைக்கும்போது அவருக்கு ஏற்படும் மனநிலை அது. கூடவே தன்னைப் பற்றிய உண்மையைப் பிறர் விரைவில் உணர்ந்துவிடுவார்கள் என்கிற சங்கடமும் அந்த மனநிலையில் இருக்கும். (உண்மையில் அவர்கள் பிறரது அங்கீகாரத்துக்குத் தகுதியானவர்களாகத்தான் இருப்பார்கள்)
***
ஒன்று என்பது ஒருமை. 12 என்பது பன்மை. ‘Dozen’ என்பது ஒருமையா பன்மையா? - அதை நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது. பொதுவாக ‘dozen’ என்பது ஒரு ‘collective noun.’ ‘Family, army, committee’ ஆகிய சொற்களைப் போல. எனவே அது ஒருமைதான். ஒரு டஜன் (வாழைப்பழங்கள்) போதும் என்றால் ‘A dozen (bananas) is enough’ என்று நீங்கள் குறிப்பிடலாம். ஆனால், பன்னிரண்டில் ‘ஒற்றுமை இல்லை’ என்றால், அதைப் பன்மையாகக் குறிப்பிடலாம். ‘The dozen has agreed.’ ‘The dozen are in disagreement.’
சிப்ஸ்:
| தூக்கம் வருகிறது என்பதை ‘Sleep is coming’ என்று சொல்லக் கூடாது என்பது தெரிகிறது. பின் எப்படிச் சொல்ல? ‘I feel sleepy.’ ‘Take little rest’ என்பது சரியா? ‘Take some rest.’ ‘Ongoing?’ ‘இன்னமும் நடைபெற்றுக் கொண்டி ருக்கிற’ என்று அர்த்தம். |
- aruncharanya@gmail.com