தமிழ் இனிது 23: ஒலியும் ஒளியும் ஒழியும்

தமிழ் இனிது 23: ஒலியும் ஒளியும் ஒழியும்
Updated on
2 min read

சுவர் விளம்பரத்தை விரும்பாத வீட்டார், ‘சுவற்றில் எழுதாதீர்’ என்று எழுதி வைக்கிறார்கள்.

சுவறும் சுவரும்: ‘சுவர்’, இடையின எழுத்தில் முடிகிறது, இதனால் சுவர் விழுந்துவிடுமோ(?) என்று, ‘சுவற்றில்’ என்று வல்லெழுத்துப் போடுவது தவறு. ‘சுவரில் எழுதாதீர்’ என்றே சரியாக எழுதுவோம். பாரையும் பாறையும் கடப்பாரை, இரும்புக் கோல்-கருவி. கல்லால் ஆனது கற்பாறை. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ‘கடப்பாரைக்கும் உடையாத பாறை, அதன் அடியில் முளைத்துக் கிளம்பும் சிறு செடியின் வேருக்கு நெகிழ்ந்து இடம் கொடுக்கும்’ என்று, வேறுபட்ட இவ்விரண்டு சொற்களைக் கொண்டு வாழ்க்கை முறையை விளக்குகிறார் ஔவையார். ‘பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்’ (நல்வழி 33). ‘பாறை ஓவியங்கள் காலத்தால் தொன்மையானவை’ என்கிறார் நா. அருள்முருகன், நூல் - ‘புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்’. தொல்லியல் ஆய்வுகளில் கடப்பாரையைப் பயன்படுத்துவதில்லை.

முருக்கா? முறுக்கா? - தமிழரின் பலகாரங்களில் ஒன்றான இது, முருக்கா? முறுக்கா? என்று கேட்டால், நம்மிடம் முறுக்கிக் கொள்பவர்களும் உண்டு. இதைத் தெளிவுபடுத்த, தமிழறிஞர் கண்ணபிரான் ரவிசங்கர் (‘கரச’) சிறுபாணாற்றுப் படையின், ‘விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி’ (247) வரியையும், ‘பிட்டு, அவல், அடை, முறுக்கு’ எனும் திருப்புகழ் வரியையும் உதாரணம் காட்டுவது சிறப்பு. ஆக, முறுக்குதான் தின்பண்டம். முருக்கு என்பது, ‘கொல்’ எனும் பொருளில் வழக்கிழந்து, இப்போது தவறாகப் புழங்கி வரும் சொல்.

அரையும் அறையும்: விரல் விரிந்த கையளவே ‘சாண்’. அவரவர் கையால் எட்டு சாண் கொண்டதே அவரவர் உயரம். ‘எறும்பும்தன் கையால் எண் சாண்’ என்பார் ஔவையார். உடலின் கால் பகுதியே ‘கால்’ எனும் மனித உறுப்பு. உடலின் அரைப் பகுதியே ‘அரை’ - ‘இடுப்பு.’ இடுப்பில் கட்டும் அரைஞாண் கொடியே ‘அரணாக்கொடி’. கால்களை அரையுடன் தொடுப்பது தொடை. அறை என்னும் சொல்லுக்கு விளக்கம் வேண்டாம். எவ்வளவு பேரிடம் ‘அறை’ வாங்கியிருப்போம்? இது தவிர, வீடு-விடுதியில் உள்ளதும் அறை.

தமில் வால்க சாதி ஒளிக: 1991இல், இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) வந்தது. அதற்குமுன் தனியார் தொலைக்காட்சிகள் வருமுன் 1980களில் பொதிகைத் தொலைக் காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘ஒலியும் ஒளியும்’. இதில், ஒற்றல் ‘லகர’ ஒலி எனும் சொல் ஓசையைக் குறிக்கும், வருடல் ‘ளகர’ ஒளி எனும் சொல் வெளிச்சத்தைக் குறிக்கும். ‘ஆடியோ விஷூவல்’ எனும் ஆங்கிலத் தொடரின் தமிழாக்கமே இது. அடுத்து வரும் ‘ஒழி’ எனும் சொல்லுக்கு ‘ஒழிந்து போ’ என்று பொருள். இந்த வேறுபாடுகள் இருந்தும், ‘தமில் வால்க, சாதி ஒளிக’ என்று நரம்பு புடைக்கச் சொல்லிப் பயன் என்ன? இதனால்தான் தமிழ் தனக்குரிய பெருமையோடு வாழா மலும், சாதி ஒழியாமல் ஒளிந்துகொண்டும் இருக்கிறதோ என்று நான் நினைப்பதுண்டு. எழுத்து, பேச்சு எனும் இரண்டு வழியில்தான் ஒரு மொழி வளர்வதும், அழிவதும் நடக்கும். இதை உணர்ந்து பேசி, எழுதினால்தான் தமிழ் வாழும். நடந்தால் சாதி ஒழியலாம்.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in