ஆங்கிலம் அறிவோமே 4.0: 57 - ‘ஆட்டோகிராப்’, ‘96’ என்ன வகை படங்கள்?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 57 - ‘ஆட்டோகிராப்’, ‘96’ என்ன வகை படங்கள்?
Updated on
3 min read

ஒருவரை ‘trap’ செய்வது என்றால் என்ன? - ஓர் அறையில் சிலரை அடைத்து, கதவை சாத்தி பூட்டி விடுகிறோம் என்றால், ‘they have been trapped.’ என்றாலும், ஒருவரை சங்கடத்தில் ஆழ்த்துவது என்ற பொருளும் இதற்கு உண்டு. பதில் கூற முடியாமல் ஒருவரை மடக்கி விடுவதையும் இப்படிக் குறிப்பிடலாம். ‘Let me trap you with this question.’ அதாவது, தப்பிக்க முடியாத ஒரு மோசமான சூழ்நிலையில் ஒருவரை சிக்க வைப்பதை ‘trap’ எனலாம். ‘Mousetrap’ என்பது எலிப்பொறியைக் குறிக்கிறது. மிகவும் விரிசல்கள் கொண்ட, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்கிற கட்டடத்துக்கு நீங்கள் குடிபோனால் ‘you enter a deathtrap.’

பள்ளியில் செங்கோண முக்கோணத்தைக் குறிக்க ‘right angle triangle’ என்பது போல படித்திருக்கிறேன். மீன் பிடித்தல் தொடர்பான ஒரு கட்டுரையில் ‘angle’ என்ற சொல் அடிக்கடி இடம்பெற்றது, எந்த அர்த்தத்தில்? - தூண்டில் (கம்பியுடன் கூடிய) வீசுவது என்ற பொருளில் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘A battery of stainless steel utensils’ என்ற பயன்பாட்டைக் காண நேர்ந்தது. ‘Battery' என்பதற்கு இங்கு என்ன பொருள்? என்று கேட்கிறார் வாசகர் ஒருவர். ‘Battery’ என்பது மின்கலம். கேமரா பேட்டரி, தொலைபேசி பேட்டரி என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான். பார்ப்பதற்கு ஒரே மாதிரியும் நிறைய எண்ணிக்கையிலும் அமைந்த பொருள்களைக் குறிக்கவும் ‘பேட்டரி’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் நீங்கள் குறிப்பிட்டதில் உள்ள பயன்பாடு. ‘Battery’ என்பது நமது குற்றவியல் சட்டத்தின்படி ஒரு குற்றம் தெரியுமா? அதாவது, தாக்குதலைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுகிறது. உடல்ரீதியாக ஒருவர் மீது வன்முறைத் தாக்குதல் நிகழ்த்துவதை ‘battery’ என்பார்கள்.

‘Assault’ என்பதுகூட தாக்குதல் என்ற அர்த்தம் கொண்டதுதான், குற்றம்தான். என்றாலும் 'அசால்ட்டா செஞ்சிட்டான்’ எனும்போது ‘எந்தச் சிரமும் எடுத்துக்கொள்ளாமல், மிக இயல்பாகவும் எளிதாகவும்’ என்கிற பொருளில் அதைப் பயன்படுத்துகிறோம். இது தவறு. இதே விதத்தில்தான் 'நம்ம தலைவர் கிளைமாக்ஸில் இருபது பேரை அசால்ட்டா போட்டுத் தள்ளுவார்’ என்கிறார்கள். என்றாலும் அது தற்செயலாக ஓரளவு சரியான அர்த்தத்தைக் கொடுக்கிறது.

‘Verbatim’ என்றால் என்ன? - ‘வார்த்தைக்கு வார்த்தை அப்படியே’ என்று பொருள். ‘I will follow him blindly’ என்பதை ‘நான் அவனைப் பின்பற்றுவேன் கண்ணிழந்த நிலையில்’ என்பது மோசமான ‘verbatim translation.’ ‘Verbatim plagiarism’ என்றால் இன்னொருவருடைய எழுத்துகளை ஒருவர் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே காப்பியடித்து அதைத் தன்னுடையது என்று கூறிக்கொள்வது.
அதற்காக ‘verbatim’ என்ற சொல் எப்போதுமே எதிர்மறையானதுதான் என்று கருதக் கூடாது. நூலின் ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு ஒருவரால் அதை ‘verbatim’ (அப்படியே வார்த்தைக்கு வார்த்தை) கூற முடிகிறது என்றால் அவருக்கு ‘photographic memory’ உள்ளது என்பார்கள். இப்போதெல்லாம் அதை ‘Eidetic memory’ என்று கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.

‘ரொமான்ஸ் ஜானர், சரித்திர ஜானர், துப்பறியும் ஜானர், இசை ஜானர், பிளாக் காமெடி ஜானர்’ என்றெல்லாம் படங்களை வரிசைப்படுத்துகிறார்களே, இந்த ‘ஜானர்’ என்பதை ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும்? - ‘Genre’ ‘Coming of age story’ என்பது என்ன வகை (ஜானர்) தெரியுமா? கதாநாயகன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் வளர்ந்து பெரியவன் ஆகும் வரை நடப்பவற்றைக் காட்டும் திரைப்படம் அல்லது நூல். முந்தைய வாக்கியத்திலேயே ஒரு ‘coming of age story’ வகை திரைப்படத்தின் பெயர் இருப்பதைக் கண்டுபிடிக்க உங்கள் பெயர் ‘வேலு நாயக்கர்’ என்று இருக்க வேண்டிய கட்டாயமில்லை. மற்றபடி ‘96’, ‘ஆட்டோகிராப்' போன்ற திரைப்படங்களும் இந்த ஜானர்தான்.

‘Radha is married with an industrialist’ ‘Radha is married to an industrialist’ - இவற்றில் எது சரி - ‘To' என்பதே சரி.

‘Warrant’ என்பது கைது செய்வதற் கான சட்டபூர்வமான ஆவணமா? - ஆம். ரெய்டு நடத்துவதற்கு (வீடு அல்லது நிறுவனத்தில் சோதனை செய்வதற்காக) வழங்கப்படும் ஆவணமும்கூட.

‘Too’ என்பதன் பொருள் என்ன? - அதிகம். ‘Too hot’, ‘too poor.’

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in