தமிழ் இனிது 22: வேறுபாடு - முரண்பாடு என்ன வித்தியாசம்?

தமிழ் இனிது 22: வேறுபாடு - முரண்பாடு என்ன வித்தியாசம்?
Updated on
2 min read

வேறுபாடும் முரண்பாடும்: வேறுபாடு - ஒரு கருத்துக்கு மாறான வேறொரு கருத்து. எல்லாருடைய கருத்தும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது அழகுமில்லை. ஐந்து விரலும் ஒன்றுபோல அன்றி வேறு வடிவில் இருப்பதே அழகும் பயனும் ஆகும். ‘நூறு பூக்கள் மலரட்டும்’ என்பது ஜனநாயகம். வேறுபாடுகள் பெரிதானால் முரண்பாடு வரும். முரண்பாடு – எதிர்க்கருத்து. வேறுபாட்டைப் பேசித் தீர்க்கலாம். முரண்பாட்டை மோதித்தான் தீர்க்க வேண்டும் என்கிறது குறள் (1077).

எத்தனை? எவ்வளவு? - எண்ண முடியும் அளவை ‘எத்தனை?’ என்று கேட்கலாம். எண்ணிக்கை தெரியாத அளவை ‘எவ்வளவு?’ என்று கேட்கலாம். பணத்தாள்களை எண்ணலாம், அதை ‘எத்தனை ரூபாய்?’ என்பதே சரியான வழக்கு. தொகை தெரியாதபோது ‘எவ்வளவு ரூபாய்?’ என்றும் கேட்கலாம். பொதுவாக காலம், நீர், ஒலி, ஒளியை அளக்க முடியாத பழங்காலத்தில் இவற்றைப் பிரித்துப் பார்க்க, இந்த அளவை முறைகள் இருந்தன. இப்போது துல்லியமாக அளக்கின்ற கருவிகள் வந்துவிட்டதால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் வருவதில் தவறில்லை. எனினும் இப்படியான வேறுபாடு தமிழில் இருந்தது பற்றி அறிந்திருப்பது நல்லது.

துல்லியம் துள்ளியம்: மிகச் சரியாக அளவிட்டு, நுட்பமாகச் சொல்வது ‘துல்லிய மானது’. துள்ளி ஓடும் மானை பிடிக்க முடியாது. துல்லியமாகப் படம் பிடிக்கலாம். அவசரத்தில் சிலர் ‘துள்ளியமாக’ என்று எழுதுவது தவறாகும். நீள் வட்டப் பாதையில் சுற்றும் நிலவிலிருந்து, பூமி உள்ள தூரத்தை, அருகில் 3,64,000 கி.மீ. எனவும், தொலைவில் 4,06,000 கி.மீ. எனவும் இரண்டு வகையில் ‘துல்லியமாக’ கணக்கிட்டுச் சொல்கிறார்கள்.

‘மாறடித்து’ அழுவது சரியா? - கற்பனை நலமும், சொற்புனை வளமும் கைவரப்பெற்ற நல்ல கவிஞர்கள்கூட, எழுத்துப் பிழையோடு எழுதினால், தமிழ் வருந்தாதா? அவர்கள் அறியாத தமிழல்ல, அவர்களைப் பார்த்து எழுதும் மற்றவரும் அப்படி எழுதுவார்களே. சிற்றூர்ப் பெண்கள் மாரடித்து அழுவதுண்டு. ‘மாறடித்து’ அழுவதாக நான் அறிந்த நல்ல கவி ஒருவர் எழுதியிருந்தார். மாற்ற முடியாத சோகத்தை, ‘மாரடித்து’ அழுது மாற்ற முயல்வது நம் கிராமத்துப் பண்பாடு. ‘தன்நெஞ்சு அறிவது பொய்யற்க’ - குறள்(293), ‘நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா’ - உலகநீதி(2). மார்-மார்பகம், நெஞ்சு-உறுப்பின் மேல் ஏற்றிய அழகான கற்பனை வேலை.

இரண்டும் தவறு:

‘சின்ன ர’ என்பதும் தவறு, ‘பெரிய ற’ என்பதும் தவறு.

‘ர’ – இதனை, இடையின ‘ர’ கரம் என்பதே சரியானது - மரம், கரம்.

‘ற’ – இதனை, வல்லின ‘ற’ கரம் என்பதுதான் சரி - மறம், அறம்.

வல்லினம் – கசடதபற (வன்மையாக, நெஞ்சிலிருந்து பிறக்கும்) ; மெல்லினம் – ஙஞணநமன (மென்மையாக, மூக்கிலிருந்து பிறக்கும்) ; இடையினம் – யரலவழள (இடைப்பட்ட கழுத்திலிருந்து பிறக்கும்)

வலுத்த பணக்கார வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப்பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில ‘லோல் படுற’ நடுத்தர வர்க்கம் (இடையின எழுத்து)

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in