

இந்தியாவில் முதல் முயற்சியாக, தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக, அரசுப் பள்ளி மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதற்கு ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு' ஆகிய சிறார் இதழ்களை மாதம் இருமுறை கொண்டு வருகிறது. ஆசிரியர்களின் படைப்புத் திறனை வளர்க்க ‘கனவு ஆசிரியர்' இதழையும் மாதந்தோறும் கொண்டு வருகிறது.
படைப்பு இயக்கம்: இதுவரை வந்த இதழ்களில் இருந்து, நவம்பர் மாத இதழ்கள் கொஞ்சம் வித்தியாச மானவை. நவம்பர் மாத இதழ்களில் அனைத்துப் பக்கங்களிலும் மாணவர்கள் மட்டுமே எழுதி இருக்கிறார்கள். ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு' நவம்பர் மாத இதழ்களில் ஏறக்குறைய 100 மாணவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் அனை வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது இன்னொரு சிறப்பு. டிசம்பர் மாத இதழாக, ‘மாற்று திறனாளிகள்' சிறப்பிதழ் கொண்டு வர உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர் / ஆசிரியர் படைப்புகள் இதில் இடம்பெற உள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று.
ஆசிரியர் - மாணவர் உறவு என்பது, பாடப் புத்தகம், தேர்வு, மதிப்பெண், தேர்ச்சி விழுக்காடு என்ற தளத்தில்தான் இருந்துவந்தது. ஆனால், இந்த இதழ்களின் வரவால், ஆசிரியர் - மாணவர் இடையேயான உறவு, படைப்பு இயக்கமாக மாறிவிட்டது. பாடல், கதை, அறிவியல், புதிர், ஓவியம் எனப் பலத் தளங்களில் மாணவர்கள் தங்கள் படைப்புகளைப் படைத்து வருகிறார்கள். பள்ளிக் கல்வித் துறை இதழ்களில் பொறுப்பாசிரியர்களாக இருக்கும் யெஸ். பாலபாரதியும் (மத்திய அரசு வழங்கும், சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது பெற்றவர்) விஷ்ணுபுரம் சரவணனும் பாராட்டுக்குரியவர்கள். சிறார் இதழ்களுக்குச் சிறார் எழுத்தாளர்களைப் பொறுப்பாசியர்களாக நியமித்த பள்ளி கல்வித் துறையை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இவர்களுடன் இணைந்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் ஆசிரியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புத்தகமாக சிறார் இதழ்கள்: இனி வரும் இதழ்களில், மாணவர்கள் மட்டுமே எழுத வேண்டும் என்கிற நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நிறைய படைப்பாளிகள் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு மாறக்கூடும். சிறியவர்களுக்காகப் ‘பெரியவர்கள்' எழுதுகிற காலம்போய், சிறியவர்களுக்குச் சிறியவர்களே எழுதும் காலம் வலிமையாக இருக்கும் என்பதை இந்த இதழ்கள் நிரூபிக்கின்றன. அது மட்டுமல்லாது ஒரு முறை யாவது, சிறார் இதழின் ஆசிரியர்க் குழுவில், மிகச் சிறந்த படைப்பாளர் (மாணவர்) இடம்பெற வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் இதழ் ஆசிரியர்களாக மாறவும் வாய்ப்பு உள்ளது. பள்ளிக் கல்வித் துறை வெளியிடும் சுவர் நாள்காட்டிகளில், மேசை நாள்காட்டி களில் சிறார் இதழ் படைப்பாளிகளின் ஓவியமோ, அவர்கள் முகமோ இடம்பெற வேண்டும். ஒவ்வொரு கல்வியாண்டு முடிவில், சிறார் இதழ் படைப்பாளிகளின் பாடல்கள், கதைகள், கட்டுரைகளை ஒரு சிறு நூலாகக் கொண்டு வருவதும் சாத்தியம்.
மொழிபெயர்ப்பு பயிற்சி: இனி வரும் காலத்தில், பாடப் புத்தகங்களில், சிறார் இதழ் மாணவர்களின் படைப்புகள் ஒரு பாடமாக அமைவதும் சாலச் சிறந்தது. பள்ளிகளில் இப்போது மிக நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மொழி ஆய்வகம் வழியாக, ஆங்கிலத்தில் நன்கு தேர்ந்த மாணவரை, சின்னஞ்சிறு கதைப் புத்தகங்களை மொழிபெயர்க்கும் மொழிப்பெயர்ப்பாளராக மாற்றவும் வழி உள்ளது. சிறார் இதழ்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் சிறார் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஒரு பயிலரங்கம் வாயிலாகப் பயிற்சி அளிக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் ஒரு சிறந்த படைப்பாளியாக அவர்கள் உருவாகலாம்.
ஒவ்வோர் அரசுப் பள்ளியிலும் மன்றங்களுக் காக அரசு நிதி உதவியை அளிக்கிறது. சிறார் இதழ் மன்றத்திற்கு என்று நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும். அந்நிதியின் வழியாக, ஒவ்வோர் அரசுப் பள்ளியிலும் உள்ள படைப்பாளிகளை ஊக்கப்படுத்தவும், கல்வி ஆண்டு முடிவில், ஒரு புத்தகத்தைக் கொண்டு வரவும் இயலும். சிறார் இதழ்களில் எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கலாம். இவை அனைத்தும் கோரிக்கைகள் அன்று. சிறிய விண்ணப்பங்கள்தாம். இதுவரை வெளியான 25 இதழ்களில், ஏறத்தாழ 300 படைப்பாளிகளாவது உருவாகி இருப்பார்கள். மாணவர்களைப் படைப்பாளிகள் என்னும் விதையாக, தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை மாற்றி இருக்கிறது. இவை இப்போது செடிகளாக வளர்ந்துவிட்டன. எதிர்காலத்தில் நிழல் தரும், பயன் தரும் மரங்களாக வளர்ந்து நிற்கத்தான் போகின்றன.
- கட்டுரையாளர், சிறார், ‘கனவு ஆசிரியர்’ இதழ்களின் மாவட்டப் பொறுப்பாளர்.