

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம், பொது நூலகத் துறை, அண்ணா நூலகம் இணைந்து மாணவர்களுக்கான ‘e-learning’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு (TRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வு (UPSC), வங்கிப் பணிக்களுக்கான தேர்வு, ரயில்வே பணிகளுக்கான தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாதிரி வினாத் தாள்களை மாணவர்கள் இலவசமாகப் பயன்படுத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் வாய்ப்பை வழங்கியுள்ளது.
தேவையும் ஆர்வமும் உள்ள மாண வர்கள் இந்நூலகத்தின் https://elms.annacentenarylibrary.org/ என்கிற இணையதளத்தைப் பார்க்கலாம். இதில் பதிவு செய்வதன் மூலம், கடைசி 30 ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட மாதிரி வினாக்களை மாணவர்கள் அறிய முடியும். மொத்தம் 21 பாடத்திட்டங்களின் 31,000 கேள்வி-பதில்களைத் தெரிந்துகொள்ள மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இது மட்டுமல்ல, 293 துணைப்பாடங்களுக்கான கேள்வி - பதில்களும் இத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையவழிக் கல்வி மூலம் மாணவர்கள் படிக்கலாம், குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம், மாதிரி தேர்வுகளிலும் பங்கேற்கலாம். கூடுதலாகக் காணொளிவழி பாட வகுப்புகளும் இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணைய வசதி இருந்தால்போதும், இருக்கும் இடத்திலிருந்தே மாணவர்கள் இந்த மாதிரி வினாத்தாள்களைப் படித்து பயன் பெற முடியும். திறன்பேசி வழியாகவும் மாணவர்கள் எளிமையாக போட்டித் தேர்வுக்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.