ஆங்கிலம் அறிவோமே 4.0 - 56 - ‘வேற லெவல்’ என்பது என்ன?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 56 - ‘வேற லெவல்’ என்பது என்ன?
Updated on
2 min read

‘பழங்கள் தொடர்பான சொற்றொடர் களை விவரித்த நீங்கள், ‘Apples and Oranges’ பற்றியும் விளக்கி இருக்க லாமே’ எனக் கேட்கிறார் ஒரு வாசகர். விளக்கினால் போயிற்று. இரண்டு கிரிக்கெட் வீரர்களைப் பற்றி ஒப்பிடச் சொல் கிறார்கள். ஒருவர் பத்து ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தன் முத்திரையைப் பதித்தவர். இன்னொருவர், இன்னும் ரஞ்சி கோப்பை அணியிலேயே இடம்பெறாதவர். நீங்கள் சுருக்கமாக ‘Apples and oranges’ என்று கூறிவிட்டு நகர்ந்துவிடலாம்.

ஆப்பிளையும் ஆரஞ்சு பழத்தையும் ஒப்பிட முடியுமா? ‘இரண்டிலுமே வைட்டமின்-சி சத்து உண்டு. ஆப்பிளை நினைத்தால் நியூட்டன் நினைவுக்கு வருவார். ஆரஞ்சை ‘கமலா ஆரஞ்சு’ என என் பாட்டி குறிப்பிடுவதால் அமெரிக்க துணை அதிபர் நினைவுக்கு வருவார்’ என்று நீங்கள் நீட்டி முழக்கி ஒரு கட்டுரை எழுதத் தொடங்கிவிடலாம். ஆனால், பொதுவாக இந்த இரண்டு பழங்களும் மிகவும் மாறுபட்டவை. ஒப்பிட முடியாதவை.

‘Apples and oranges’ என்பது அடிப் படையில் மாறுபட்ட, ஒப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாத இரண்டைக் குறிக்கும். ‘Dissimilar’, ‘conflicting’ போன்றவை இதன் இணை வார்த்தைகள்.

***

‘He has the ability to lampoon others’ என்று ஒருவரைப் பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது. அது என்ன திறமை? - ஒருவரையோ ஓர் அமைப்பையோ நகைச்சுவையாக ஒருவர் விமர்சிக்கிறார். (அது எழுத்தாலும் இருக்கலாம் ஓவியத்தாலும் இருக் கலாம்). இதன்மூலம் அவரது அல்லது அந்த அமைப்பின் அபத்தத்தை வெளிப் படுத்துகிறார். இப் படிப்பட்ட செயலை ’lam pooning’ என்பார்கள்.

***

‘Buzzy’ என்றால் என்ன? ‘Buzzword’ என்பதற்கும் இதற்கும் தொடர்பு உண்டா? - நிறைய பேர் இருக்கிறார்கள். நிறைய உற்சாகமான நிகழ்வுகள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலை ‘buzzy atmosphere’ என்பது உண்டு. சில வார்த்தைகள் மிகவும் பரவலாகிவிடும். அவற்றைப் பற்றிய தெளிவு இல்லாமல் மேம்போக்காகக் குறிப்பிடத் தொடங்கிவிடுவார்கள். அது ஒரு ’ஃபேஷன்’ ஆகிவிடும். ‘Holistic’, ‘downsize’, ‘off-shore’, ‘on-site’ என்பன போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.

திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது முகத்துக்கு அருகே மைக்கை நீட்டியபடி கருத்து கேட்கும்போது ‘படம் வேற லெவல்’ என்று கூறப்படுவதைக்கூட ‘buzzwords’ எனலாம். ‘கொலவெறியும்’ இந்த வகையே. ‘Think outside the box’ என்று பலரும் கூறத் தொடங்கி இருப்பதைக்கூட இந்த வகையில் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது. ‘Bestie’ என்பது உயிர்த் தோழன் என்பதைக் குறிக்கும் சொல். ‘Best friend’, ‘Bezzie’ என்றும் இந்தச் சொல்லைக் குறிப்பிடு வதுண்டு.

***

‘To read betweeen the lines’ என்பது எதைக் குறிக்கிறது? - கடிதத்தில் அல்லது புத்தகத்தில் உள்ள வரிகளைத்தானே படிக்க முடியும்? வரிகளுக்கு நடுவே வெற்றிடம்தானே? அதை எப்படிப் படிக்க முடியும்? ஒரு வேளை ரகசிய மையில் ஏதாவது எழுதப்பட்டி ருக்குமோ? இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. ‘To read between the lines' என்றால் ஒன்றிலுள்ள மறைபொருளை அறிந்துகொள்வது என்பதுதான்.

புரூட்டஸ், மன்னன் ஜூலியஸ் சீஸரை கொலை செய்துவிடுகிறான். மன்னனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் மார்க் ஆன்டனி, மன்னர் குறித்து இப்படி உரையாற்றுகிறார். மன்னர் ரோம் நாட்டுக்குச் செய்த பல நல்ல விஷயங்களை அடுக்கிவிட்டு, என்றாலும், ‘புரூட்டஸ் கூறுவதன்படி நம் மன்னர் ஒரு பேராசைக்காரர்’ என்கிறார்.

‘புரூட்டஸ் ஒரு கெளரவமான மனிதனும்கூட’ என்கிறார். இதற்குப் பொருள் ‘மன்னர் நல்லவர். புரூட்டஸ்தான் வஞ்சக எண்ணத்துடன் அவரைக் கொன்றுவிட்டான்’ என்பது. இதை மக்களால் உணர முடிகிறது. புரூட்டஸுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள். ‘They were able to read between the lines’.

அதாவது, வெளிப்படையாக எழுதப்படாத அல்லது பேசப்படாத விஷயத்தை மதியூகத்துடன் புரிந்துகொள்வதுதான் ‘reading between the lines.’ ‘என்ன இன்னிக்கும் லேட்டாத்தான் வீட்டுக்குப் போகப்போறியா? உனக்கு வீட்ல கற்பூர ஆரத்திதான்’ என்றால் அதன் அர்த்தம் புரிகிறதா? ‘You have to read between the lines.’

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in