தமிழ் இனிது 21: ஆய்த எழுத்தை நினைவுகூர்வோமா?

தமிழ் இனிது 21: ஆய்த எழுத்தை நினைவுகூர்வோமா?
Updated on
2 min read

ஆய்தமும் ஆயுதமும்: ‘ஆய்தல்’ எனில் ‘நுணுகிப் பார்த்தல்’ எனப் பொருள் (தொல்-813). ஆய்வு செய்பவர் ‘ஆய்வாளர்.’ உயிரெழுத்து மெய்யெழுத்துப் போல அன்றி, ‘நுணுக்கிய ஓசையோடு வருவதே ஆய்த எழுத்து’. இதையே, அஃகேனம் (அக்கன்னா) தனிநிலை, முப்புள்ளி எனவும் சொல்வர். ‘ஆயுதம்’ - தொழிலுக்கான கருவி. அதனால்தான், ‘ஆயுத பூசை’ நடக்கிறது. உயிருக்கும் மெய்க்கும் நடுவில் ஆயுதத்தை வைக்கலாமா? முப்புள்ளி எனும் பெயரால், கேடயம்(?) என்றெண்ணி, ‘ஆயுத எழுத்து’ என எழுதுகிறார்களோ? ஆயினும், ‘ஆய்த எழுத்து’ என்பதே சரி.

நினைவு கூர்வதா? நினைவு கூறுவதா? - அன்பிற்கு உரியவரின் நினைவை மீண்டும் நினைத்துப் பார்ப்பதை ‘நினைவு கூர்தல்’ என்பதா? ‘நினைவு கூறுதல்’ என்பதா? ‘கூர்ந்து’ என்பது ‘மிகுந்து, குவிந்து’ என்னும் பொருளில் வரும். ‘அன்பு கூர்ந்து’ ‘கூர்ந்து கவனி’ ‘நினைவு மிகுந்து மரியாதை செய்வது’ என்பதால் ‘நினைவு கூர்தல்’ என்பதே சரியானது. ‘இடும்பை கூர் என்வயிறே’ – ஔவையார் (நல்வழி-11). எனில், ‘நினைவு கூறுதல்’ எனும் தொடர், ‘நினைவை எடுத்துச் சொல்லுதல்’ என வலிந்து பொருள் கொள்வது தவறாகவே அமையும்.

வாழ்க வளமுடனா? வளத்துடனா? - ‘வாழ்க வளமுடன்’ என்று எழுதக் கூடாது, அத்துச் சாரியை தந்து ‘வளத்துடன்’ என்பதே சரி என்பார் சிலர். ஆனால், ‘வளமுடன் வாழலாம், என்பது நானல்ல, உலகமொடு (புறம்-72), காலமொடு (தொல்-686) எடுத்துக்காட்டி, ‘நலமுடன் எழுதலாம்’ என்றவர் அய்யா தமிழண்ணல்.

தமிழ்நாடு அரசா? தமிழ்நாட்டு அரசா? - அண்ணா சொன்ன ‘தமிழ்நாடு அரசு’ என்பதை, ‘தமிழ்நாட்டு அரசு’ என்றல்லவா எழுத வேண்டும்? என்று இப்போதும் கேட்போர் உண்டு. இதை மறுத்து, தமிழறிஞர்கள் நன்னன், வ.சுப.மாணிக்கம் போல்வாரை வழிமொழிந்து, ‘தமிழ்நாடு அரசு என்றே எழுதலாம்’ என, பொருநர் ஆற்றுப்படை - ‘நாடு கிழவோனே’ - இறுதி அடியை எடுத்துக்காட்டுவார் தமிழண்ணலார் (உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள் – பக்-111).

அல்லன், அல்லை, அல்லர் – தேவையா? - மேற்கண்ட பத்தி ஒன்றில் ‘நானல்ல’ என்று ஒரு தொடர் உள்ளது. இதைத் தவறு என்பார் இலக்கணப் புலவர். திணை, பால், எண், இடம் மாறாமல் வர வேண்டும் என்பது சரிதான். அதற்காக, ‘நான் அல்லேன்’, ‘நீ அல்லை’, ‘அவன் அல்லன்’, ‘அவர் அல்லர்’ என்று எழுதச் சொன்னால் ‘இருக்கிற சிக்கல் போதாதா அய்யா?’ என ஓடும் இளம் தலைமுறை. ‘வேறு, இல்லை, உண்டு’ எனும் சொற்களை திணை, பால், எண், இட வேறுபாடு கருதாமல் பொருத்திக் கொள்ளலாம் என்னும் முனைவர் பொற்கோ கருத்தை ‘புதியன புகுத’லாக நானும் வழிமொழிகிறேன்- (அண்ணல் தமிழ் – பக்-83). ஆக, நானல்ல, நீயல்ல என்பன சரிதானே?

தப்பும் தவறும்: தப்பு, தவறு - இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் சொல்கின்றனர். ஆனால், இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ‘தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது’ – வாலி (‘நம் நாடு’ திரைப்பாடல்). நமது உழைப்பாளி மக்கள் ஆடும் சரியான ஆட்டத்தை, ‘தப்பாட்டம்’ என்றது, தெரிந்தே செய்த தப்பல்லவா? ஆட்டத்தை அல்ல, போரைக் குறித்த இசைக்கருவிக்கு வைத்த பேரைச் சொல்கிறேன்.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in