

இந்தியாவில் மொத்தம் 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் திருச்சியில் ‘தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்’ இயங்கி வருகிறது. பொறியியல் துறைக்கு எப்படி ஐஐடிகளோ அதுபோல சட்டப் படிப்புக்கு இந்த சட்டப் பல்கலைக்கழகங்களே முன்னணி உயர்கல்வி நிறு வனங்களாக விளங்குகின்றன. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் சிறந்த கல்வியும் கிடைக்கின்றன. அரசுப் பள்ளிகளில் 6 - 12 வரை படித்த மாணவர்களுக்கு சட்டப் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு உண்டு.
என்ன படிக்கலாம்? - இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க பிளஸ்-டூ தேர்வு மட்டும் போதாது. இதற்கென ‘CLAT’ எனப்படும் ‘Common Law Admission Test’ என்கிற நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெற வேண்டும். இதற்கான தேர்வு வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக நவம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இரண்டு விதமான சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிஏ எல்எல்பி ஹானர்ஸ், பிகாம் எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய இரண்டும் ஐந்தாண்டுகள் படிக்கக்கூடிய படிப்புகளாகும்.
இது குறித்து தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர், முனைவர். எஸ்.எம்.பாலகிருஷ்ணன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் இப்படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது எங்கள் கல்லூரியில் 13 அரசுப் பள்ளி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். சிறப்பாகக் கற்பதற்கும் முன்னேற்றம் அடையவும் அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம்.’’ என்கிறார்.
உலகத் தரத்தில் நூலகம்: இது ஐந்து வருட படிப்பை பல்கலைக்கழகத்தில் தங்கி படிக்கவேண்டும். இது முழுக்க ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படும். ஆங்கிலத்தில் படிப்பது சிரமமாக உள்ள மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் தேசிய டிஜிட்டல் நூலகத்தோடு இணைந்து மொழி ஆய்வகமும் (Language lab), ஆய்வு செய்தல், எழுதுதல் வசதியும் செய்து தரப்பட்டிருக்கின்றன.
இதன்மூலம் கற்றல் எளிமையாக இருக்கும். ஆங்கிலத்தில் கற்க முடியாமல் திண்டாடும் மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் தரப்படுகிறது. அவர்களுக்கு கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டு அவர்களுடைய மொழி ஆளுமையை வளர்த்தெடுக்கப் படுகிறது.
உதவிப் பேராசிரியர் மகேந்திர பிரபு பேசும்போது, “இங்கே உலகத் தரம் வாய்ந்த நூலகம் உள்ளது. இதில் ஒவ்வோர் ஆண்டும் ரூ. 40 லட்சம் செலவில் இங்கே இணைய இதழ்களை வாங்குகிறார்கள். இங்கே ஒரு கோடி ரூபாய்க்கு ஆண்டுதோறும் நூல்களும் வாங்கப்படுகின்றன. காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை நூலகம் இயங்குகிறது. ஒட்டுமொத்த வளாகத்திலும் வைஃபை இலவசமாக வழங்கப்படுகிறது’’ என்றார்.
சிறப்பு வகுப்புகள்: இங்கே படித்துவரும் அரசுப் பள்ளி மாணவரான ஐய்யப்பன் நம்பிக்கையோடு பேசுகிறார். “தமிழ் வழியில் படித்த எனக்கு ஆரம்பத்தில் ஆங்கில வழியில் பாடங்கள் படிப்பதில் சிரமங்கள் இருந்தன. அப்போது இங்கே இருக்கும் ஆசிரியர்கள் மிகவும் அக்கறையோடு எனக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகள் உண்டு. கூடுதல் கவனம் கொடுக்ப்படுகிறது’’ என்கிறார்.
“இங்கே மாதிரி விவாதப் போட்டிகள், மாதிரி நீதிமன்றப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் வெளி உலகத்துக்கு முழுமையான வழக்கறிஞர்களாக செல்லும் வகையில் தயார் செய்யப்படுகிறார்கள்’’ என்கிறார் உதவி பேராசிரியர் எஸ்.முகமது ஆசாத்.
ஐந்தாண்டுகள் தங்கிப் படிக்கிற படிப்பு என்பதால் பெண்களை இந்தப் படிப்புக்கு அனுப்புவதில் பெற்றோர்களுக்கு நிறைய தயக்கம் இருக்கிறது. குறிப்பாக கிராமப்புற மாணவிகளுக்கு தயக்கம் இருக்கிறது. இது பற்றி ஜீவிதா என்கிற மாணவியிடம் கேட்டோம். “பெண்கள் பாதுகாப்பு குறித்து எல்லோருக்கும் அச்சம் இருக்கும். ஆனால், இங்கே மிகவும் பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. இங்கே கல்லூரியில் தைரியமாக வந்து படிக்கலாம்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார்.
படிக்கும்போதே பயிற்சி: இந்தக் கல்லூரியில் ஒவ்வொரு வாரமும் எதிர்கால வாய்ப்புகள் பற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. இதில் அனுபவமிக்க நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நிறுவனங்களில் வேலை செய்யும் அசோசியேட்களை அழைத்துவந்து ஒரு மணி நேரம் மாணவர்களோடு உரையாடச் செய்கிறார்கள்.
இதன் மூலம் மாணவர்கள் படிக்கும்போதே வேலைவாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். படிக்கும்போதே ஒவ்வோர் ஆண்டும் ‘இன்டர்ன்ஷிப்’ பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். நிறுவனங்களில், வழக்கறிஞர்களிடம் பயிற்சிக்கு செல்வதால் நல்ல அனுபவம் கிடைக்கிறது.
இங்கே ஒவ்வோர் ஆண்டும் வளாக நேர்காணல் நடக்கிறது. இருபது பேர் வரை பல்வேறு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்து வெளியே செல்கிறார்கள். இங்கே படித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உண்டு. இங்கே படித்த மாணவர்கள் இந்தியா முழுக்கப் பணியாற்றுகிறார்கள். பல முன்னணி நிறுவனங்களில் வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் வேலை செய்கிறார்கள்.
இங்கே படிக்க வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசே கூடுதல் கவனம் செலுத்தி வேண்டிய உதவிகளை செய்துத் தருகிறது. அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் இங்கே சேர்கிற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்கிறார் இந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலகிருஷ்ணன்.
- கட்டுரையாளர், பத்திரிகையாளர்