ஆங்கிலம் அறிவோமே 4.0: 55 - ‘Lemon Laws’ சொல்வது என்ன?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 55 - ‘Lemon Laws’ சொல்வது என்ன?
Updated on
2 min read

‘Go bananas’ எனப்படும் விசித்திரமான சொற்களுக்கு என்னதான் பொருள்? - வாசகரே, ‘banana’ என்பது ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணியைத் தலை சுற்றவைத்த பழம் என்பது தெரிந்திருக்கும். ‘Go bananas’ என்றால் கோபப்படுவது. ‘He will go bananas when he finds out that he had been cheated.’ அதே சமயம் அதீத உற்சாகமடைவதையும் ‘go bananas’ என்பதன் மூலம் குறிப்பிடுவார்கள். திரையில் நாயகன் அறிமுகமாகும் காட்சியில் பின்னணி இசை பரபரக்க, அவரது ஷூக்கள், கால்கள், கைகள், தொப்பி, விரல்கள், நகங்கள் என ஒவ்வொன்றாகக் காட்டப்படும்போது அவரது ரசிகர்கள் ‘go bananas’ ஆவார்கள். ‘When she entered the stage, her fans went bananas.’

‘Top banana’ என்றால் ஒரு நாடகம் அல்லது திரைப்படத்தின் முக்கிய நகைச்சுவை நடிகர். ‘Second bananas’ என்றால் அதன் துணை நகைச்சுவை நடிகர்கள். பல பழங்களின் பெயர்கள் பலவிதங்களில் ஆங்கிலத்தில் இடம் பெற்று வித்தியாசமான பொருள்களை அளித்து வருகின்றன.

‘Sour grapes’ என்பது ஒன்று கிடைக்காதபோது அது பற்றிக் கவலைப்படாமல் அடுத்த வேலையைக் கவனிப்பது. எவ்வளவு குதித்துப் பார்த்தும் திராட்சைக் கனிகளை எட்ட முடியாத நரி, ‘ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்றபடி நகர்ந்த கதைதான் உங்களுக்கு தெரியுமே.

‘Lemon Laws’ என்பது அமெரிக்காவில் இயற்றப்படும் ஒரு வித சட்டங்கள். குறைபாடுள்ள ஆட்டோமொபைல் வண்டிகளை ‘lemons’ என்று அங்கே குறிப்பிடுவது வழக்கம். குறைபாடுள்ள ஆட்டோ, ஸ்கூட்டர், கார் போன்றவற்றை விற்றால் தயாரிப்பாளர் அந்தக் குறைபாடுகளை நீக்கிக் கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நுகர்வோருக்கு ஆதரவாக இருக்கும் சட்டங்களை ‘lemon laws’ என்பார்கள்.

‘You only get a bite at the cherry in life’ என்பதில் ‘a bite at the cherry’ என்பது பலருக்கும் வாழ்க்கையில் கிடைக்காத ஒரு வாய்ப்பு என்பதைக் குறிக்கிறது. சோதனையான கட்டங்களிலும் நீங்கள் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தால், ‘You are cool as a cucumber’ என்று பிறர் உங்களைக் கண்டு வியக்கலாம். ‘He is a bad apple’ என்றால் அவர் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவர் அல்லது நேர்மையற்றவர்.

‘We spent the weekend in the Big Apple’ என்று அமெரிக்காவிலுள்ள உங்கள் உறவினர் அலட்டிக்கொண்டால், அவர் அந்த வார இறுதியை நியூயார்க்கில் கழித்தார் என்று பொருள். ‘When life gives you lemons, make lemonade’ என்று ஒருவர் ஆலோசனை கூறினால் பிடிக்காத சூழலிலும் அதை முடிந்தவரை உங்களுக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று பொருள்.

வேலைத்தேடி அலைகிறீர்கள். ஒரு வேலை கிடைக்கிறது. எளிதான பணி, அதிகமான சம்பளம். இது பற்றி அறிந்ததும் ‘You have a plum job’ என்று சிலர் பொறாமையுடன் வார்த்தைகளை உதிர்க்கலாம். ஒரு கேள்வி கேட்டு பதில் வராமல் இருந்தால் ‘வாயில் கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்?’ என்று எரிச்சலுடன் நாம் கேட்பதுண்டு. ஆனால், ‘She spoke with a plum in her mouth’ என்றால் அவள் உயர்மட்ட வகுப்பைச் சேர்ந்தவள் போல பேசுகிறாள் என்று அர்த்தம் (பீட்டர் விடுவது?).

சிப்ஸ்:

கீழே உள்ள ஒவ்வொரு குறிப்பையும் ஆங்கிலத்தில் ஒரு பழத்தை உள்ளடக்கிய வார்த்தை அல்லது வார்த்தைத் தொகுப்பின் மூலம் வெளிப்படுத்த முடியும். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

(1) வம்புப் பேச்சு
(2) ஒன்றைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது
(3) நீண்ட காலமாக தொடர்ந்த ஒரு ஏற்பாட்டைச் சிதைப்பது

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in