பெயரில் மாற்றம் தேவை?

பெயரில் மாற்றம் தேவை?
Updated on
2 min read

இசையமைப்பாளர், தமிழார் வலர் ஜேம்ஸ் வசந்தன், ‘ர,ற,ல,ள,ழ எழுத்துகள், ஏன் மொழி முதலில் வருவதில்லை?’ என்று கேட்டிருக்கிறார். மெய்யெழுத்துகள் -18, ஆய்த எழுத்து -1, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன– எழுத்துகளின் வர்க்க எழுத்துகள் (8x12) -96, ங, ஞ, ய, வ – வர்க்க எழுத்துகளில் சில - 30. ஆக, 145 எழுத்துகளும் மொழி முதலில் வராதவை என்பர்.

முதலில் வராத காரணம்: உயிரெழுத்துகள் பிறப்பை 3 நூற்பாவில் விளக்கும் தொல்காப்பியர் (85-87), மெய்யெழுத்துகள் பிறப்பை, 13 நூற்பாவில் சொன்ன பிறகும், ‘புறனடை’யில், மெய்களை, மாத்திரையால் சொல்வார் (102). ‘உயிரின்றி மெய் தனித்து இயங்காது’ என்பதால், மெய் முதலில் வருவது தமிழ்ச்சொல் ஆகாது. மெய் முதலில் வராது. உயிரோடு சேரும் போதுதான் மெய்யின், உச்சரிப்பு எளிதாகும். ‘க்’ என்பதை ‘இக்’ என்றே சொல்கிறோம் அல்லவா?

அடுத்து, உயிர்மெய் எழுத்துகளிலும், உச்சரிப்பு மாறக்கூடிய ‘ல-ழ-ள, ட-ர-ற, ண-ன' எழுத்துகள் சொல்லின் முதலில் வந்தால் புரிதலில் குழப்பம் நேரும். இதனாலேயே இவற்றைப் பிரித்து சொல்லின் முதலில் வராத எழுத்துகள் பட்டியலில் வைத்தனர். இதுவே ஜேம்ஸ் வசந்தனின் கேள்விக்கான எனது விளக்கம். எனினும், தற்காலத் தமிழ், இம்மரபை மீறிவருகிறது.

வாழ்வியல் கலப்பே மொழிக்கலப்பு: தமிழுக்கு மாறாக, மெய்யெழுத்தில் தொடங்கக் கூடிய வடமொழிச் சொற்கள் - ‘ப்ரியா’ போல, தமிழில் புழங்கும்போது, ‘இதே எழுத்துகள் ஏன் தமிழில் முதலாகாது?’ எனும் கேள்வி எழுவது இயல்பே.

‘வடசொற்கள் தமிழில் வழங்கும் முறை’ பற்றி விளக்குகிறார் தொல்காப்பியர் (884). பின்வந்த நன்னூல், எழுத்ததிகாரம் பதவியலில் ‘வடமொழியாக்கம்’ என்றொரு தலைப்பில், இருமொழி எழுத்துகளையும் ஒப்பிட்டு, தனித்தமிழில் அவற்றை எழுதக்கூடிய முறையை விளக்கும். இதில்தான் ‘ஸ்ரீரங்கா–அரங்கன்’, ‘ராஜ்–இராசா’, ‘ருஷப-இடபம்’, ‘ஷண்முக–சண்முகன்’, ‘ப்ரியா – பிரியா’ என்றாகிறது.

உண்மையில் ஆழ்வார்கள் பாடிய ‘அரங்கம்’ முதலிய தனித்தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து மீண்டும் தமிழில் இப்படி வரும் என்றது, தொல்காப்பியர்க்குப் பின்வந்தோர் செய்த ‘உள்ளடி வேலை’ என்றறிக. சமயச் சடங்கு வழி, தமிழர் வாழ்வில் கலந்த சொற்களால், புதிய மொழிகள் தோன்றியதைச் சொல்வார் பெ.சுந்தரனார்.

ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன்

வாழ்வியல் இலக்கணம்: இன்றைய பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பில், தமிழ் இலக்கண வரலாற்றைக் கவனிக்கி றோமா? ‘Hospital’-ஐ ‘ஆஸ்பத்திரி’யாக ஆக்கியும், சிற்றூர்க் கிழவி, ‘ஆசுபத்திரி’ என்கிறாரே. ‘காமாட்சி’ என்ற மகனை, சிவகாமி அம்மையார், ‘ராசா’ என்று அழைக்க, நமக்குக் ‘காமராசர்’ கிடைத்தாரே. இதுதான் மரபு மாறாத வாழ்வியல்.

மாற்றுவதும் மரபே: வாழ்வியல் கலப்பால், ‘ச, ர, ல எழுத்துகள் மொழி முதலாகாது’ என்ற பழைய மரபு மாறிவிட்டதே? இன்றைய தமிழ்க் குழந்தைகளின் கலப்புப் பெயர்களில் வாழ்வியல் கலப்பும் தெரியவில்லையா? தமிழே அல்லாத ‘கிரந்த’ முதலெழுத்தில் தொடங்கும் ‘ஸ்டாலின்’, ‘ஜெயலலிதா’, ‘ஜீவா’ போலும் பெயர்களை மாற்ற வேண்டுமா? மொழி வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை ஏற்கத்தானே வேண்டும்? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ – நன்னூல். ஆனால், கவனம், கழித்தல் அல்ல கழிதல்.

ஜேம்ஸ் வசந்தன் கேட்டிருந்த உயிர்மெய்களில் சில, இப்போது மொழி முதலாவதோடு, பிறமொழி மெய்யெழுத்துகளும் மொழி முதல் ஆகின்றனவே? புழங்குமொழி மாறாமலே இருப்பதும் இயலாதே. மாறுவது மரபு, இல்லையேல் கவனத்தோடு மாற்றுவதும் மரபுதான்.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in