ஆங்கிலம் அறிவோமே 4.0: 54 - ‘Idolize’ என்பது சிலை வழிபாடா?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 54 - ‘Idolize’ என்பது சிலை வழிபாடா?
Updated on
2 min read

‘A snake in the grass’ என்பது எதைக் குறிக்கிறது? - பசுமையான, உயரமான புல்வெளி. அதில் பாம்பு ஒன்று இருந்தால் உங்களுக்கு அது சட்டென்று தென்படுமா? அதுவும் பச்சைப் பாம்பு என்றால்? இப்படி எளிதில் புலப்பட்டுவிடாத அபாயங்களையும், விபரீதங்களையும்தான் ‘A snake in the grass’ என்பார்கள்.

***

‘Fiasco’ என்றால் என்ன? - படுதோல்வி - அதுவும் அவமான கரமான விதத்தில். தமிழ் சரித்திர நாடகம் ஒன்று முதல்முறையாக மேடை ஏறுகிறது என்று வைத்துக்கொள்வோம். முதல் காட்சியிலேயே ஒரு நடிகர் மேடையில் கால் தடுக்கி விழுகிறார். அவரது அன்புத் தாயாக நடிக்கும் நடிகை, இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். வேறொரு நடிகர் ‘O my God, does he need medical help?’ என்று ஆங்கிலத்தில் வினவுகிறார். நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் வெடித்துச் சிரிக்கிறார்கள். ஆக, இந்த நாடகத்தின் அரங்கேற்றம் ஒரு ‘fiasco’.

***

‘Rise and shine’ என்று ஒருவரைப் பார்த்துக் கூறினால் அது வாழ்த்தா? அறிவுரையா? - காலையில் ஒருவரை எழுப்பும்போது ‘Rise and shine’ என்பதுண்டு. இந்த நாள் உனக்குப் பிரகாசமாக இருக்கட்டும் எனும் தொனி அதில் உள்ளது. (படுக்கையிலிருந்து எழுந்திருக்கப் பிடிக்காதவர்களுக்கு இந்த வாழ்த்து நாராசமாக இருக்கக்கூடும் என்பது வேறு விஷயம். அப்போது ‘ஏய், தூங்குமூஞ்சி, rise and shine’ என்பதுபோல இது ஒலிக்கும்).

கைலி ஜென்னர் என்பவர் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் மிக முன்னணியில் இருந்தவர். மூன்று வருடங்களுக்கு முன் அந்தப் பெண்மணி ஒரு காணொளி வெளியிட்டார். அதில் ‘rise and shine’ என்ற வரிகளைத் தன் பெண் குழந்தை ஸ்டார்மியை நோக்கிப் பாடியபடி வருவார். அந்த காணொளி மிகவும் பிரபலமானது. அதையே ரீமிக்ஸ் செய்து சமீபத்தில் மீண்டும் பதிவுசெய்தார். இதுவும் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டது. ‘Rise and shine’ என்ற ‘phrase'க்கு காப்புரிமை கோரியிருக்கிறார் கைலி. தன் பல அழகுப் பொருட்களுக்கு அதைப் பெயராக வைக்கப் போகிறாராம்.

***

‘Idolize’ என்றால் சிலை செய்து வழிபடுவதா? - இல்லை. ‘Idol’ என்பது விக்கிரகம் அல்லது சிலையைக் குறிக்கிறது. அவற்றை வழிபடுவது உண்டுதான். ‘Idol’ என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. மிகவும் உயர்வாக மதிக்கப்படும் ஒருவரை ‘idol’ என்பதுண்டு. அவரை ஒரு ‘role-model’ ஆக மதிப்போம். ஆனால், ஒருவரை ‘idolize’ செய்தால் அவரை மிக மிகப் பாராட்டுகிறோம் என்று பொருள் (அளவுக்கு அதிகமாக என்றுகூட வைத்துக்கொள்ளலாம்). ‘His fans idolize him.’ ஒருவரை அல்லது ஒன்றை ‘idealize’ செய்தால் அவரை அல்லது அதை லட்சியமாகக் கொள்கிறோம் என்று கூறலாம்.

***

‘Gobsmack’ என்ற சொல்லை ஒரு செய்தித் தலைப்பில் படித் தேன். அதன் பொருள் என்ன? - வியப்பில் வார்த்தைகள் வராமல் தவிப்பது. ‘She was completely gobsmacked when she won the award.’

சிப்ஸ்

‘Debacle’ என்றால்?

Fiasco!

‘We should not cut jokes in workplaces.’ ‘We should never cut jokes in workplaces.’ எது சரி?

இரண்டுமே ஒன்றைக் குறிப்பவைதான். எனினும் மொழிக் கோணத்தில் பார்த்தால் ‘cut jokes’ என்பதைவிட ‘crack jokes’ என்பதே சரி.

‘I have left smoking’ – சரியா?

புகைப் பழக்கத்தை நிறுத்திக்கொண்டது மிகச் சரி. மற்றபடி ‘I have given up the habit of smoking' என்பது சரியாக இருக்கும்.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in