

‘Hindsight’ என்பது என்ன? - ‘Foresight’ என்பதற்கு எதிர்ச்சொல். ‘Before’ என்பது ‘fore’ என்றும் ‘behind’ என்பது ‘hind’ என்றும் சுருங்கி இருப்பதாகக் கொள்ளலாம். ஒரு விளைவை முன்னதாகவே கணிப்பது ‘foresight.’ அனுபவித்த பிறகு அறிந்துகொள்வது ‘hindsight.’ சில பேர் ‘இதெல்லாம் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்’ என்று பெருமை பீற்றிக்கொள்வார்கள். அதாவது, அதெல்லாம் நடந்த பின் இப்படிக் கூறுவார்கள். ஆங்கிலத்தில் இதை ‘Hindsight bias’ என்று சொல்லலாம்.
***
‘Remission’ என்பது எதைக் குறிக்கிறது? - சிறைத் தண்டனைக் காலம் குறைக்கப்படு வதை இப்படிக் கூறுவார்கள். நன்னடத்தைக்காக அவரது சிறை தண்டனை மூன்று மாதங்கள் குறைக்கப்பட்டது என்பது போல. நோயைப் பொறுத்தவரை ‘remission’இல் உள்ளது என்றால், அந்த நோயின் தீவிரம் குறைந்துள்ள காலகட்டத்தைக் குறிக்கிறது எனலாம். ‘His cancer has been in remission for two years.’
***
‘Covert operation’ என்பது எதை குறிக்கிறது? - ‘Overt’ என்றால் வெளிப்படையான, ‘Covert’ என்றால் ரகசியமான என்று பொருள். ரகசியமாக செய்யப்படும் திட்டங்களை இப்படிக் குறிப்பார்கள். ‘Covert military operations, covert police actions' என்பதுபோல. ‘Overt behaviors’ என்பனவற்றை நம்மால் கவனித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.
‘Covert behaviors’ ரகசியமானவை. உள்ளுக்குள் வில்லத்தனத்தை வளர்த்துக்கொண்டு வெளியில் நல்லவன்போல வேடமிடுவது அல்லது உள்ளுக்குள் மிக மென்மையாக இருந்துகொண்டு வெளியில் கரடு முரடாகக் காட்சி தர முயற்சிப்பது போன்றவை.
பெரும்பாலும் உளவுத்துறை ரகசியமாக செய்யும் வேலைகளை ‘covert operations' என் பார்கள். ஃபிரெஞ்சு மொழியிலிருந்து வந்த சொல் ‘covert.’ இதற்கு அந்த மொழியில் ‘மூடப்பட்ட’ அல்லது ‘மறைந்துள்ள’ என்று பொருள். ‘Covert’, ‘overt’ ஆகிய இரண்டுமே ‘adjectives’.
***
‘He doctored the document’ என்பதற்கும் மருத்துவச் சான்றிதழுக்கும் தொடர்பு உண்டா? - 'டாக்டர்' என்றால் மருத்துவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால், ‘doctor' என்ற சொல்லை ‘verb'ஆகப் பயன்படுத்தும்போது அது எதிர்மறைப் பொருளைத் தருகிறது. ஓர் ஆவணத்தை, பிறரை ஏமாற்றுவதற்காக மாற்றி எழுதுவதைக் குறிப்பிட ‘doctored' என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்.
‘The results of the survey were doctored.’ உணவு பொருளில் நச்சுப்பொருளை ரகசியமாகக் கலப்பதைக் (அதாவது கலப்படம் செய்வதை) குறிக்கவும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். ‘Bottles of lemonade doctored with rat poison were discovered in the kitchen.’
***
‘Optometrist’, ‘Ophthalmologist’ ஆகிய இரண்டும் ஒருவரைத்தான் குறிக்கிறதா? - அண்மையில் ஒரு கண் மருத்துவரிடம் சென்றபோது கண்ணை ‘டைல்யூட்’ செய்ய வேண்டும் என்றபடி சில சொட்டு மருந்துகளைக் கண்ணில் விட்டார்கள். கண்ணை ‘டைல்யூட்’ செய்வது என்றால் விபரீதமாக இருக்கிறதே! அது ‘dilute’ அல்ல.
‘Dilate.’ ஒன்றை விரிவடையச் செய்வதை ‘dilate’ என்பார்கள். கண்களிலுள்ள ‘pupil’ (கண்மணி) என்ற பகுதி விரிவிடைந்த பிறகு கண்களைப் பரிசோதித்தால்தான் கண்ணில் உள்ள பிரச்சினைகளைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும்.
‘Opto’ என்றால் கிரேக்க மொழியில் ‘பார்வை’ என்று பொருள். ‘Optic nerve’ என்று கண் பார்வை தொடர்பான நரம்பைக் குறிப்பிடுவார்கள். ‘Optometrists’ என்பவர்கள் பார்வைத் திறனை சரி பார்ப்பவர்கள், பார்வைக் குறைபாடு இருந்தால் அதற்குரிய (மூக்கு கண்ணாடி போன்ற) தீர்வுகளைக் கூறுபவர்கள்.
‘Opthalmos’ என்றால் கிரேக்க மொழியில் ‘கண்’. இதை அடிப்படையாகக் கொண்டுதான் ‘Ophthalmologist’ என்ற சொல் உருவானது. ‘Ophthalmologist’ கண் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் செய்பவர், அறுவை சிகிச்சை உட்பட.
- aruncharanya@gmail.com