தமிழ் இனிது 18: அய்யாவும் மய்யமும்

தமிழ் இனிது 18: அய்யாவும் மய்யமும்
Updated on
2 min read

நண்பர் ஒருவர், “‘ஐயா', ‘அய்யா' இரண்டில் எது சரி?, கமல் கட்சியில் ‘மய்யம்’ என்பது சரியா? ‘மையம்’தானே சரி?’ என்று கேட்டார். ‘ஐயா’வில் உள்ள ‘ஐ’ எழுத்தை, அதற்குரிய இரண்டு மாத்திரை அளவுக்கு அழுத்தி உச்சரிக்காமல், ஒன்றரை மாத்திரை அளவில் ‘அய்யா’ என்றே பேசுகிறோம். அதுபோலவே, ‘சமையல்’, ‘சமயல்’ ஆகிறது. ‘மழை பெய்கிறது’ என்பதை, ‘மழ பெய்யுது’ என்றே சொல்கிறோம். இதை ‘ஐகாரக் குறுக்கம்’ என்று இலக்கணம் சொல்கிறது. அதாவது, ‘ஐ’ எனும் இரண்டு மாத்திரை, தன் ஓசையில் குறுகுவது.

‘தற்சுட்டு அளபு ஒழி ஐ, மூவழியும் நையும்’ - நன்னூல்-95. கை, பை, எனவரும் ஓரெழுத்து ஒருமொழி தவிர்த்து, தொடரில் வரும் ‘ஐ’யை, 2 மாத்திரைக்கு உச்சரிப்பதில்லை. ‘ஐ’ முதலில் வந்து ‘ஐயா’, ‘அய்யா’ ஆகிறது. இடையில் வந்து, ‘உடைமை’- ‘உடமை’ ஆகிறது, இறுதியில் வந்து ‘தவளை’, ‘தவள’ ஆகிறது. இது பற்றித் தொல்காப்பியரிடம் கேட்டால், ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ (தொல்-நூற்பா எண்-54) என்று, ‘ஐ’, ‘அய்’ இரண்டையுமே பயன்படுத்தச் சொல்லி, வியக்க வைக்கிறார்.

மீண்டும், ‘விளிமரபு’ இயலில், ‘ஐ ஆய் ஆகும்’ என்கிறார் (தொல்-606). ‘அன்னை’ என ஐகாரத்தில் முடியும் சொல், விளி (அழைப்பு) ஏற்கும்போது ‘அன்னையே’ என்று ஆவது போல, ‘அன்னாய்’ என்றும் வரும் (கலித்தொகை-51). ஆக, ‘ஐ’-‘அய்’ என வருவது புதிதல்ல. பழந்தமிழில், ‘கை’யை, ‘கய்’ என்றே சொல்கின்றன, சிந்தா மணியும் (கய்தரு மணி) கம்ப ராமாயணமும் (கய்யொடும் இற்று).

இன்றும் கிராமக் காவல் தெய்வமாக ‘அய்யனார்’ இருக்கிறார். ‘ஐயப்பன்’ ‘அய்யப்பன்’ இருவரும் ஒருவரே. ஆக, ‘ஐயா’, ‘அய்யா’ இரண்டும் சரிதான். கமல், ‘மய்யம்’ என்பதும் சரிதான். உடனே, ‘தமிழில் ‘ஐ’ எனும் உயிர் எழுத்தே வேண்டாமா?’ எனில், ‘ஐ’ இருக்கும். இரண்டும் கெட்டானாக, ‘ஐய்யா’ என்பதுதான் இருக்கக் கூடாது. அதோடு, ‘அய்’ என்பதே தவறு என்றும் சொல்ல வேண்டாம்.

இதன் தொடர்ச்சியாக, ‘கலைஞரை, கலய்ஞர் என்றல்லவா எழுத நேரும்?’ எனில், ஆம்! ஆனால், ‘ஒரே மூச்சில் ஒன்பது படி தாண்டக் கூடாது’ என்று எழுத்துச் சீர்திருத்தர் வலியுறுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

வள்ளுவர் குறளில், ‘ஔ’ எழுத்தையே பயன்படுத்தவில்லை. ‘ஔ’ வந்த இரண்டு குறளிலும் (167,169) ‘அவ்’ என்றே சொல்கிறார். ‘ஐ’, ‘அய்’ ஆவதற்கும் ‘ஔ’, ‘அவ்’ ஆவதற்கும் தொடர்புண்டோ?

மறுபக்கம், மற்ற உயிரெழுத்துகள் போலன்றி, ‘ஐ’ ‘ஔ’ இரண்டு எழுத்து மட்டும் கூட்டெழுத்தாக உள்ளதையும் ஆய்வு செய்ய வேண்டும். ‘இலக்கணமும் சமூக உறவுகளும்’ என்றொரு சிறு ஆய்வு நூலை, ஈழத் தமிழறிஞர் கா.சிவத்தம்பி எழுதியிருக்கிறார். அதன்படி பார்த்தால், ‘தோழரே’, ‘உடன்பிறப்பே’, ‘ரத்தத்தின் ரத்தமே’, ‘ஜீ’ என்று, அவரவர் சார்பை அடையாளப்படுத்துவதுபோல, பெரியார் கருத்துகளை ஏற்றுக்கொள்வோர், ‘ஐயா’வைப் பெரும்பாலும் ‘அய்யா’ என்றே எழுதுகிறார்கள் என்பதும் உண்மைதான். ‘மய்யம்’ கமலும் அப்படித்தான் போல.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in