

‘Dark horse’ என்பது எதைக் குறிக்கிறது? - இதுவரை ஒருவரைப் பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால், ஒரு திடீர் சூழல் காரணமாக அவர் மிகவும் புகழ் பெற்றுவிடுகிறார் என்றால், அவரை ‘dark horse’ என்பார்கள். முக்கியமாக அரசியலில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பலரும் ஒரு தேர்தலில் போட்டியிடும்போது யாரும் எதிர்பார்த்திராத நபர் ஒருவர் வெற்றி பெற்றால், அவரை ‘dark horse’ என்று விவரிப்பார்கள். தன் திறமைகளை ரகசியமாகவே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவரைக் குறிக்கவும் ‘dark horse’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
***
‘Racism’ என்றால் இனவெறி என்பது புரிகிறது. இப்போதெல்லாம் ‘Reverse racism’ என்கிற வார்த்தைகள் பயன்படுத்தப்படு கின்றன. இதன் பொருள் என்ன? - ‘Race’ என்பது போட்டி, பந்தயத்தை மட்டுமல்ல இனம் என்பதையும் குறிக்கும் சொல். இனவெறி (Racism) என்றவுடன் கறுப்பர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் மனநிலை என்பது நமக்கு புரிகிறது. இனவெறிக்கு எதிரான போக்கு நாகரிக உலகில் அதிகம் வளர்ந்து வருகிறது.
அதேசமயம் இந்தப்போக்கு நேரெதிர் விளைவை உண்டாக்குவதாகவும் சிலர் கருதுகிறார்கள். அதாவது வெள்ளையர்கள் எப்போதும் எதிர்மறையாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். வெள்ளையாக இருக்கும் ஒரே காரணத்தால் அவர்களுக்கு இனவெறி இருப்பதாக வீண்பழி சுமத்தப்படுகிறது என்கிறார்கள். இவர்களது நிலைப்பாடு ‘reverse racism’ எனப்படுகிறது.
‘Black lives matter’ என்று ஓர் இயக்கமே உருவானது. அதாவது, கறுப்பர்களும் மனிதர்கள்தான். அவர்களின் உயிர்களும் மதிக்கத்தக்கவைதான். எனவே காவல் துறையும் அதிகாரிகளும் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று இதற்குப் பொருள். ‘Reverse racism’ நடைபெறுவதாகக் கருதுபவர் கள் கூட்டமாகக் கூடி கைகளில் ஏந்திக் கொண்டிருக்கும் பதாகைகளில் ‘All lives matter’ என்ற சொற்கள் காணப்படுகின்றன.
***
‘Agreement’, ‘Contract’ இரண்டும் ஒன்றா? - சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘agreement’ என்பது ‘contract.’ எனவே, ஆறு வயதுக் குழந்தை எட்டு வயதுக் குழந்தையுடன் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம், தீவிரவாதிகள் தீவிரவாதச் செயலுக்காக போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம், மனநிலை சரியில்லாத நிலையில் ஒருவரிடம் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் போன்றவை எல்லாம் ‘agreements’ ஆக இருக்கக்கூடும். ஆனால் அவை ‘contracts’ அல்ல.
***
‘Flyer’ என்பது எதைக் குறிக்கிறது? - தெருவில் ஒருவர் நின்றுகொண்டு, போவோர் வருவோரையெல்லாம் நிறுத்தி ஒரு தாளை அவர்களிடம் நீட்டுவார். நாளிதழை ஆர்வமுடன் பிரிக்கும்போது அதன் உள்ளே இருந்து ஒரு சிறிய அச்சிட்ட தாள் வெளியில் வந்துவிழும். இப்படி வழங்கப்படும், வெளியே வந்து விழும் விளம்பரத்தாளை ‘flyer’ என்பார்கள். விமானத்தில் பறக்கும் ஒருவரை அல்லது ஒரு பொருளைக்கூட ‘flyer’ என்பதுண்டு.
***
‘Aggregator’ என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘Ride aggregators' என்று புதிதாக யாரையோ குறிப்பிடுகிறார்களே? -பலவித வலைதளப் பக்கங்களில் இருந்து செய்திகளைத் திரட்டி ஒரே வலைதளத்தில் பதிவிடுபவரை ‘aggregator’ என்பார்கள். ‘Taxi aggregator’ அல்லது ‘ride aggregator’ என்பது ஒரு புதிய சந்தைப் பிரிவு. இதில் டாக்ஸிகளை இயக்குபவர்கள் அவற்றின் உரிமையாளர்கள் இல்லை. ஓலா, ஊபர் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள் என்றால் தெளிவாகப் புரிந்துவிடும்.
***
‘Life size statue’ என்றால் நிஜமாகவே ஆள் உயர சிலையா? - குறிப்பிட்ட நபரின் உயரத்தில் அமைந்த அவரது சிலை. என்றாலும் நடைமுறையில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ‘Larger than life’ என்று ஒருவரை குறிப்பிட்டால், அவர் மற்ற பெரும்பாலானவர்களைவிட பிறரது கவனத்தை ஈர்க்கிறார் என்று பொருள். இந்த ஈர்ப்பு எதன் காரணமாகவும் இருக்கலாம்.
சிப்ஸ்:
# ‘I don't want to coerce you’ என்றால்?
நான் உன்னை வற்புறுத்த விரும்பவில்லை.
# ‘Wager’ என்பது?
பந்தயத் தொகை (சூதாட்டம்)
# ‘RIP’ என்றால் என்ன?
‘Rest in peace.’ ‘May she rest in peace’ என்றால் ‘அவள் ஆத்மா சாந்தி பெறட்டும்.’ கல்லறைகளில் ‘RIP’ என்ற எழுத்துகள் பொறிக்கப் படுவதுண்டு.
- aruncharanya@gmail.com