தமிழ் இனிது 17 - ‘அண்ணா’வை கைவிடலாமா?

தமிழ் இனிது 17 - ‘அண்ணா’வை கைவிடலாமா?
Updated on
2 min read

சொற்களைப் புரிந்து கொள்ள, நேரடியாக அகராதியில் தேடுவதைவிடவும், சூழலுடன் அச்சொல்லைப் பொருத்திப் பார்க்கும்போதுதான் தெளிவு கிடைக்கும். மேல்நாடும், கீழத்தெருவும் தமிழ் வழக்கில், ‘மேல்நாடு’ என்பதை மேற்குலக நாடு என்றே புரிந்து கொள்கிறோம். சிலருக்கு, ‘மேற்கில் உள்ள நாடா, மேலான நாடா?’ என்று சந்தேகம் வருவது இயல்பு.

தமிழில் ‘மேற்கு, கிழக்கு’ எனும் சொற்கள் திசைகளைக் குறித்தாலும், ‘உயர்ந்த, தாழ்ந்த’ என்றும் பொருள் உண்டு. தமிழ் நாட்டின் மேற்கில், உயரமான மேற்கு மலைத் தொடரும், கிழக்கில், தாழ்வான நிலப்பகுதிகளும் இருப்பதிலிருந்து இக்கருத்து வந்திருந்தாலும், சமூக ஏற்றத்தாழ்வைக் குறிப்பதும் ஆய்வுக்குரியது.

பெரும்பாலான குடிசைப் பகுதிகள், ஊருக்குக் கிழக்கி லேயே இருப்பதைச் சிந்தித்தால் இது விளங்கும். ‘சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு இருமைத் தன்மை’ என்று இதுபற்றி ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார், ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ எனும் பெருநூலின் ஆசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன். இந்தக் கருத்து வியப்புக்கு மட்டுமல்ல சமூகவியல் ஆய்வுக்கும் உரியது.

எல்லாரும், நல்லோரும்: இலக்கிய வழக்கில் ‘எல்லோரும்’ என்னும் சொல், பேச்சு வழக்கில் ‘எல்லாரும்’ என்றே வருகிறது. ‘எல்லாரும் ஓர் விலை’ - பாரதி பாடல், சில பதிப்புகளில் ‘எல்லோரும்’ என்றும் அச்சாகியுள்ளது. ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ - குறள்-125. இதேபோல, ‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே’ என்கிறார் ஔவையார். இதற்குத் தொல்காப்பியரும் ‘ஆ ஓ ஆகும்.. …செய்யுள் உள்ளே’ - ‘அதாவது, நல்லார் என்பது நல்லோர் என்றும் வரும்’ - என்று ஒப்புதல் தருகிறார் (தொல்-680). எனவே, இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்றை ஓசைக்கேற்பப் பயன்படுத்தலாம்.

மூத்த சகோதரர் எதற்கு? - பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கலாம், பிறநாட்டவரின் கண்டுபிடிப்புகளை, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் பயன்படுத்தும்போது, அவர்களின் சொற்களைப் பயன்படுத்துவது இயல்பே. ஆனால், அந்தச் சொற்களில் தமிழ் மரபின் கவனமும் தேவை. ‘அண்ணன்’ எனும் ஒற்றை உறவுச் சொல் ஆங்கிலத்தில் இல்லை. அதில் ‘Elder Brother’தான்.

அதற்காக ஆங்கில வழியில் ‘மூத்த சகோதரர்’ என்று தமிழ்ப்படுத்தலாமா? அண்ணன் என்னாவது? ‘Waterfalls’ஐ ‘நீர்வீழ்ச்சி’ என்றால் ஏற்கெனவே இங்கிருக்கும் அழகு தமிழ் ‘அருவி’ வருத்தப்படாதா? இவை போன்ற சொற்களில் மிகுந்த கவனம் தேவை. ஆடம்பரத்துக்காகக் கடன் வாங்கினால் வாழ்க்கை சீரழியும், அலட்சியமாகச் சொற்களைக் கடன் வாங்கினால் தமிழும் சீர்குலையும்.

காந்தீயமா? மார்க்சியமா? - காந்தியவாதிகள் தீயவற்றைப் பார்க்க, பேச, கேட்க வேண்டாம் என்று மூன்று குரங்குகள் உணர்த்தும். இருந்தும் சிலர், ‘காந்தீயம்’ என்று எழுதுகிறார்கள், இது தவறு. ‘இசம்’(ism) எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ‘இயம்’ என்பதே. இதன்படிப் பார்த்தால் ‘காந்தியம்’, ‘மார்க்சியம்’, ‘பெரியாரியம்’, ‘அம்பேத்கரியம்’ என்பனவே பொருத்தமான சொற்கள்.

இதே போல ‘பாசிசம்’, ‘நாசிசம்’ என்கிறார்கள். தமிழ் மரபின்படி ‘பாசியம்’, ‘நாசியம்’ என்றல்லவா எழுத வேண்டும்? சர்வாதிகாரத்தைத் தமிழ் விரும்பவில்லை போலும். குறள்- அதிகாரத்தை ஏற்கும் தமிழ், சர்வ-அதிகாரத்தை ஏற்பதில்லை என்றே தோன்றுகிறது. இதுதான் தமிழ் அறம். ஏனெனில் தமிழ் இனிது.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in