தமிழ் இனிது? - உளமார / மனமாற வாழ்த்தலாமா?

தமிழ் இனிது? - உளமார / மனமாற வாழ்த்தலாமா?
Updated on
2 min read

மனம், குளம், மரம் – இவை போலும் சொற்கள் தொடரில் வரும்போது, ‘அத்து’ எனும் பகுபத உறுப்பு (சாரியை) சேர்ந்து, ‘மனத்தில் நினைத்தேன்’, ‘குளத்தில் குளித்தேன்’, ‘மரத்தில் ஏறினேன்’ என்று மாறுவது மரபு. எனினும் ஏனோ, ‘மனம்’ மாறி(?) ‘மனதில்’ என்று பேசுவது பழக்கமாகி, பிறகு அதுவும் தொடர்ந்து வழக்கமாகி, எழுத்திலும் வந்துவிட்டது.

பாரதி, ‘மனதில் உறுதி வேண்டும்’ என்றே பாடுகிறார். ‘மனத்தில்’ என்பது ‘மனதில்’ என்றானதற்காக, ‘குளதில்’ குளிக்க முடியாது. ‘மரதில்‘ ஏறவும் கூடாது. அப்படியான வழக்குகள், தமிழில் இல்லை. ஆனால், இங்கே பேச்சு வழக்கில் உள்ள ‘மனசு’, ‘மனசில் ஆயோ?’ என்று மலையாள வழக்கிலும் உள்ளதை, ஒப்பாய்வு செய்யலாம்.

தமயன் - தமையன்: தம் ஐயன் = தமையன் (தமக்கு மூத்த, பெரியவன்), தம் அக்கை = தமக்கை, தம் பின்= தம்பி (தமக்குப் பின் பிறந்தவன்), தம் கை= தங்கை (தமக்கு இளையவள், சிறியவள்), ‘கை’ எனும் சொல், ‘சிறிய’ என்றும் ஒரு பொருள் தரும். ‘கைப் பை’, ‘கைக் கடிகாரம்’, ‘கைப் பேசி’ என்பன கையில் இருப்பதால் மட்டுமின்றி கைக்கு அடக்கமான அளவில் சிறியதாய் இருப்பதாலும் இப்பெயர் பெற்றன என்பது இன்னொரு தமிழ் நுட்பம்.

அடமானம் - அடைமானம்: ‘மானத்தை அடகு வைப்பது’ என்னும் பொருளில் வரும் இந்தச் சொல்லின் பண்பாட்டுச் சிறப்பைப் பாருங்கள். சொந்தக் காலில் நிற்க வேண்டுமே அன்றி, கடனாகக்கூட ‘ஏற்பது இகழ்ச்சி’ எனும் சுயமரியாதை இதற்குள் கிடக்கிறது. அடகு வைப்பது சொத்தை அல்ல, தன்மானத்தையாம். பேச்சு வழக்கில் ‘அடைமானம்’ ‘அடமானம்’ என, ‘ஐ’ எனும் நெடில், ‘அ’ என குறில் ஓசை பெறுவது ஐகாரக் குறுக்கம்.

ஆனால், எழுதும்போது ‘ஐ’ சேர்த்து எழுதுவதே மரபு. அதாவது, எழுதும்போது பழைமை, உடைமை, புடைவை, தமையன், ஏழைமை, அடைமானம் என எழுதுவதை, பேச்சு வழக்கில் பழமை, உடமை, புடவை, தமயன், ஏழமை, அடமானம் என்றே சொல்கிறோம். இந்த எழுத்து மரபை அறிந்திருப்பது அவசியம்.

உளமாற – உளமார? - நண்பர்கள் ஆரத் தழுவிக்கொள்வதும், வாயார வாழ்த்துவதும், உளமாரப் புகழ்வதும், வயிறார உண்பதும் சரிதான். இதை ‘மனமாற’ என்றால், மனம் மாற என்னும் தவறான பொருள் தந்துவிடும்.

வான வேடிக்கை – சரியா? - வானத்தில் நடப்பதால் வானவேடிக்கை ஆகிவிடாது. வானமா வேடிக்கை காட்டுகிறது? வானத்தில் நாம்தானே வேடிக்கை காட்டுகிறோம்? வாணம் என்றால் வண்ணவெடிச் சரம். எனவே ‘வாண வேடிக்கை’ என்பதே சரி. ‘புஸ்வாணம்’ என்பது வெடிக்காமலே ‘புஸ்’ என ஒலி, ஒளியைத் தருவதால் வந்த பெயர்.

இதை, ‘எதிர்பார்த்தது நடக்காத’போது கிண்டலாக, ‘புஸ்வாணம் ஆயிருச்சு’ என்னும் வழக்கில் கேட்கலாம். வீடு கட்ட, பூமியைத் தோண்டுவதையும் ‘வானம் தோண்டுவது’ என்னும் வழக்கு வியப்பானதுதான். ‘மதுரையில் ‘மெஜுரா மில்’ கட்ட வானம் தோண்டியபோது ரோம நாணயங்கள் கிடைத்தன’ என்பது, சொல்லாலும் பொருளாலும் மகிழ்வூட்டும் தமிழ் நுட்பம்.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in