

‘Commentary’ என்றால் வர்ணனை என்பது தெரியும். ஆனால் ஒரு நூலுக்கான ‘commen tary’ என்று ஓரிடத்தில் படித்தேன். அது எப்படி?
ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே அதைப் பற்றி வானொலியில் அல்லது தொலைக்காட்சியில் வழங்கப்படும் பேச்சு வடிவிலான விளக்கவுரையை இப்படிக் குறிப்பிடுவார்கள். அதே வேளை ஒரு நூல், நாடகம் போன்ற ஒன்றைப் பற்றிய எழுத்து வடிவிலான விளக்கம் அல்லது மதிப்புரையையும் ‘commentary’ என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள்.
***
‘Heresy’ என்றும் ‘hearsay’ என்றும் இரண்டு சொற்கள் உள்ளனவா? அவற்றுக்கு ஒரே பொருள்தானா? - முறையே ஆமாம், இல்லை. ‘Heresy’ என்பது பொதுவான நம்பிக்கை, கருத்துக்கு எதிரான ஒரு விஷயம். கர்நாடக சங்கீத ராகத்தில் குத்துப்பாடல் வரிகளை இசைப்பது போல. ‘Hearsay’ என்பது செவி வழிச் செய்தி. ‘Hear’, ‘Say’ - வதந்தி என்றும் கூறலாம். ஒருவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நகரில் இருந்தார் என்பதற்கு அவரை அந்த நாளில் அந்த நகரில்தான் பார்த்ததாக ஒருவர் சாட்சி கூறினால் அது வேறு விஷயம்.
மாறாக 'அந்த நாளில் அந்த நகரில் அவரைப் பார்த்ததாக ஒருவர் என்னிடம் கூறினார்' என்று சாட்சி கூறினால் அது ‘hearsay evidence’. நீதிமன்றங்களில் பொதுவாக ‘hearsay’ சாட்சியங்களை ஏற்பதில்லை. ‘Hearse’ என்றும் ஒரு சொல்லுண்டு. சவப்பெட்டியை சுமந்துசெல்லும் வாகனத்தை அப்படிக் குறிப்பிடுவார்கள்.
***
கோடிட்ட இடத்தில் இடம்பெற வேண்டிய சொல் எது?
I cannot ___________ my lunch.
(a) forego
(b) fargo
(c) forgo
‘Forego’ என்பது முன்னால் செல்வதைக் குறிக்கிறது. 'என் உணவுக்கு முன்னால் செல்ல மாட்டேன்' என்பது சரியாக இல்லை. எனவே, ‘forego’ சரியான தீர்வு அல்ல. ‘Fargo’ என்பது பெரிய அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரப் பகுதியைக் குறிக்கிறது. ‘Forgo’ என்பது ஒன்று இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது.
‘Completion of work tends to forego a holiday. But we would never forgo a holiday.’ அதாவது 'விடுமுறைக்கு முன்னால் வேலைகளை முடித்து வைக்க வேண்டும் என்பது இயல்பு. ஆனால், விடுமுறை இல்லாமல் நாங்கள் ஒரு போதும் இருக்க மாட்டோம்.’ எனவே ‘I cannot forgo my lunch’ என்பதுதான் சரியான பயன்பாடு.
***
‘Bullshit’ என்பதன் பொருள் என்ன? - 'நான்சென்ஸ்'. தவறாக எண்ண வேண்டாம். உங்கள் கேள்விக்கு இதுதான் பதில். ஒருவர் உங்களை ஏமாற்றுவதற்காக எதையோ கூறுகிறார். அப்போது நீங்கள் மேற்படி வார்த்தையைக் கூறுகிறீர்கள் (அப்படி வைத்துக்கொள்வோம்) என்றால், அது உங்களை அவர் ஏமாற்றுவதை நீங்கள் உணர்ந்துகொண்டதற்கான சொல்.
ஆங்கிலத்தில் ‘bull’ என்று சொல் எருதை மட்டுமே குறிப்பதில்லை. அர்த்தமற்ற பிதற்றல் என்பதையும் குறிக்கிறது. அர்த்தம் இல்லாமல் உளறுவதில் 'மேதையாக' இருப்பவரை ‘bullshit artist’ என்று குறிப்பிடுவார்கள். அதாவது பெரும் பொய்யர்.
***
'No one told nothing' என்ற வாக்கியத்தை ஓர் ஆங்கிலத் திரைப்படத்தில் கேட்டேன். குழப்பமாக இருக்கிறது. நியாயமான குழப்பம்தான். இரண்டு எதிர்மறை சேரும்போது அது ஒரு நேர்மறையாக வேண்டும். ‘No one told anything’ என்றால் ‘யாரும் எதுவும் கூறவில்லை’ என்று பொருள்.
ஆனால், இதே அர்த்தத்தில்தான் ‘No one told nothing’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள். இதேபோன்று அபத்தமான, ஆனால் பயன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றொரு வாக்கியம். ‘I don't know nothing about that’. இதன் பொருள் ‘அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’.
சிப்ஸ்:
‘Ulcer’ என்றால் வயிற்றுப் புண்ணா? வயிற்றுக் கட்டியா?
‘Ulcer' என்றால் புண். ‘Peptic ulcer’ என்றால் வயிற்றுப்புண்.
‘He gets nod’ என்றால்?
அவருக்கு அனுமதி கிடைத்து விட்டது அல்லது அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார்.
‘Obelus’ என்றால்?
வகுத்தல் குறியாக (நடுவில் ஒரு சின்னக் கோடு. அதன் மேலும் கீழுமாக இரண்டு புள்ளிகள்) நாம் பயன்படுத்துவது.
- aruncharanya@gmail.com