

விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணைய வழி வெப்பினார் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்தது. நாட்டுக்கு சேவை புரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறியச் செய்யும் நோக்கிலும்; மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டடக்கலை ஆகிய உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இந்த வெப்பினார் நடத்தப்பட்டது.
இந்த இணைய வழி நிகழ்வை ஒருங்கிணைத்து ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு கலந்துரையாடியனார். “ஒரு தேசத்தின் வருவாயில் வரி வருமானம் மிகவும் முக்கியமானது. இந்த வரியைக் கொண்டே குடிமக்களின் அடிப்படையான தேவைகளுக்கான திட்டங்களைத் தீட்டி, அரசு அதனை நிறைவேற்றி வருகிறது. நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் அரசுக்கான வரியைச் செலுத்துகிறோம்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமல்ல, மாநில-மத்திய அரசுகளுக்கும் வரிகளைச் செலுத்துகிறோம். இந்திய வருவாய்த் துறையில் இருக்கும் அதிகாரிகள், வரி விதிப்பு, வரிகளை எப்படி வசூலிப்பது, வரி வருவாயைக் கண்காணிப்பது, கண்காணிக்கும்போது ஏற்படும் குறைகளைச் சரிசெய்வது, வரி ஏய்ப்பு செய்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது எனப் பல தளங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
ஒரு தேசத்தின் ‘நுரையீரல்’ பகுதியாக விளங்கும் காடுகளிலும், இந்திய வனப்பணியின் மூலமாகச் சிறப்புமிக்க பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. இந்திய வருமான வரி, இந்திய வனப் பணியிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்” என்றார் வி. டில்லிபாபு.
இந்திய வருவாய்த் துறையில் வாய்ப்புகள்: சென்னை ஐ.டி.. கூடுதல் ஆணையர் வி. நந்தகுமார் ஐஆர்எஸ் பேசியதாவது: “இன்றைய தலைமுறை மாணவர்களிடத்தில் சிவில் சர்வீஸூக்கு எப்படி தயாராக வேண்டும் என்கிற தெளிவும் புரிதலும் இருக்கிறது. இருந்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகள் பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு வருவாய்த் துறையான ஐஆர்எஸ் பற்றிய புரிதல் இன்னும் தேவைப்படுகிறது. வருவாய்த் துறையிலும் பல பொறுப்புமிக்கப் பதவிகள் இருக்கின்றன என்பதை அறிந்து, அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வுகளைப் பொறுத்தவரை அவை வெறும் தேர்வு என்பதைவிட, ஒருவரின் முடிவெடுக்கும் திறன், தொடர்பு ஆற்றல், லாஜிக்கல் ரீசன், லீகல் ரீசன் இப்படியான விஷயங்களை முன்வைத்தே தேர்வுகளை நடத்துகிறது. ஒரு காரண - காரியத்தைப் புரிந்துகொண்டு கொஞ்சம் அறிவியல் ரீதியாக ஆராய்வதற்காகவே இரண்டாவது தாளுக்கான தேர்வும் நடத்தப்படுகிறது. யுபிஎஸ்சி தேர்வெழுத ஆங்கிலம், இந்தி தெரியாது என்பதற்காகவே தயங்கி நிற்கக் கூடாது.
ஒரு பத்தியைப் படித்து, அதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது. எந்த முடிவு எடுத்தாலும் அதில் உறுதியோடும் தெளிவோடும் முயற்சி செய்தால் வெற்றியை அடையலாம்” என்றார் வி. நந்தகுமார்.
இந்திய வனத்துறையில் வேலை: ஓசூர் வன உயிரின அலுவலர் கார்த்திகேயனி, ஐஎஃப்எஸ் பேசியதாவது: ”ஒரு மாவட்ட வன அதிகாரி என்று பார்க்கும்போது ஒவ்வொரு மாவட்டத்தின் வனச்சூழலுக்கும் ஏற்ப பொறுப்புகளும் செயல்களும் மாறுபடும். வனப் பாதுகாப்பு என்பது வனத்திலுள்ள விலங்குகளை மட்டுமின்றி, வனத்திலுள்ள மரம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பதாகும். வனத் துறை அதிகாரி பணி என்பது எப்போதும் வனத்துக்குள் இருக்கும் பணி கிடையாது. ஆய்வுப் பணிகளுக்காக வனத்துக்குள் செல்லும் நிலை பல நேரத்தில் உண்டாகும். ஒவ்வொரு பணியிலும் சவால்கள் இருக்கவே செய்கின்றன.
வனத் துறையில் இருக்கும் சவாலை வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும். நம் வாழ்க்கை சார்ந்து பல சுவாரசியமான விஷயங்களை அறிந்துகொள்ள வனத் துறை வாய்ப்பளிக்கிறது. வனத்துக்குள் சென்று வரும் ஒருவருக்கு புதுப்புது அனுபவங்கள் வாய்க்கின்றன. வனத் துறையிலும் பல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆர்வத்தோடு வருபவர்கள் இத்துறையில் பல வாய்ப்புகளைப் பெறலாம்” என்றார் கார்த்திகேயனி.
நிறைவாக, நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர். இந்த இரு நிகழ்வுகளையும் பார்க்க தவறியவர்கள் https://www.htamil.org/DKNPS02E01,https://www.htamil.org/DKNPS02E02 என்கிற இணைப்பின் மூலமோ அல்லது QR கோடு மூலமாகவும் பார்த்துப் பயனடையலாம்.