தமிழ் இனிது 15: நினைவா, நனவா?

தமிழ் இனிது 15: நினைவா, நனவா?
Updated on
2 min read

‘உங்கள் சொந்த வீடு கட்டும் கனவு, இந்த ஆண்டு நினைவாகும்’ என்று சோதிடம் சொல்கிறார்கள். சொல் அடிப்படையிலும் தவறான விளம்பரம் இது. நிறைவேறாத கனவுதானே நினைவாக இருக்கும்? தமிழறிஞர் பெருமாள் முருகன், 02.01.2023 நாளிட்ட தனது வலைப்பதிவில், ‘கற்பனையானது கனவு; உண்மை நனவு’ என்கிறார். கனவு நனவாக வேண்டும் என்பதே சரி.

ஓட்டுநர், நடத்துநர்: ‘போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப முடிவு' என்ற அறிவிப்பை ஊடகங்கள் சரியாகவே வெளியிட்டிருந்தாலும், மாலைச் செய்தித்தாள் ஒன்று, ‘ஓட்டுனர்’ ‘நடத்துனர்’ என்றே வெளியிட்டிருந்தது. இந்தக் குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

‘பொருநர் ஆற்றுப்படை’ சங்க நூல்களில் ஒன்று. செருநர்-குறள்-759. தொழிற்பெயர் (நடத்துதல்), பெயர்ச்சொல் (நடத்தும் ஒருவர்) ஆகி, கட்டளை (நடத்து) ஏற்கும்போது, ‘நடத்துநர்’ என வரும். அனுப்புதல்-அனுப்புநர், ஆளுதல்-ஆளுநர் என்பன சரி. வந்தனர், போயினரில் வரும் ‘அர்' விகுதி வேறு. ஓட்டுனர், ஆளுனரில் வரும் அர்/னர் விகுதி பொருத்தமற்றது. பொருத்தம், மரபு அற்றவற்றைத் தொடர்வது மொழியைச் சிதைத்துவிடும். அனுப்புநர், பெறுநர், இயக்குநர், ஆளுநர், நடத்துநர், ஓட்டுநர் என்பன சரியான சொற்கள்.

கோர்வை, கோவை: பள்ளி ஆண்டு விழாக்களில் ‘ஊசி நூல் கோர்த்தல் போட்டி’ அறிவிக்கிறார்கள். ‘கோர்த்தல்’ என்பது தவறு. ‘கோத்தல்’ என்பதே சரியானது. ஜலதோஷம்- நீர்க்கோவை என்பது அழகான நெல்லை வழக்கு. பேச்சு வழக்கில் விடுபட்ட ‘ர்’, எழுத்திலும் விடுபட்டது.

கழட்டி - கழற்றி: ‘என்ன சாதிச்சுட்டே?’ எனும் பொருளில் ‘என்ன கழட்டிட்டே?’ என்கிறார்கள். அது தவறு. ‘கழற்று’ என்பதே சரி. தன் சக மனிதனை அழைத்து, ‘செருப்பைக் கழட்டுடா' என்பது இரட்டைத் தவறு. சானட்-சானற் என, ‘ட்' வல்லினத்தை, ‘ற்' என்றே ஈழத்தமிழ் சொல்வதை ஆய்வுசெய்தல் நன்று.

பட்டினமும் பட்டணமும்: கடற்கரையில் அமைந்துள்ள ஊர்கள் ‘பட்டினம்’ எனும் பின் ஒட்டுப் பெற்றுவரும். அதிராம் பட்டினம், நாகப் பட்டினம், விசாகப் பட்டினம்போல. ‘பட்டினப் பாலை’ நமது சங்க இலக்கியங்களில் ஒன்று. நகரத்தைப் ‘பட்டணம்’ என்பார்கள். ‘கெட்டும் பட்டணம் போ' என்பது பழமொழி. ‘பட்டணம்தான் போகலாமடி பொம்பள பணம் காசு தேடலாமடி' என்பது உடுமலை நாராயணகவியின் திரைப்பாட்டு. ‘டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிளே டவுனாகிப் போயிடுவீங்க’ என்று, அதிலேயே பட்டணம் என்றால் நகரம் (டவுன்) என்பதையும் சொல்வார். சென்னை, பட்டணம், பட்டினம் - இரண்டு வகையிலும் வழங்கும் பெருமைக்குரிய பேரூர்.

‘பிண்ணிட்டான்’ – சரியா? - ‘போலீசு அடி பிண்ணிருச்சு’ என்கிறார்கள். கூடை ‘பிண்ண’ இணையத்தில் சொல்லித் தருகிறார்களாம். ‘பிண்ணு’ என்பது தவறு. சடை பின்னுதல், கூடை பின்னுதல் என்பன போல, ‘அடி பின்னிருச்சு’ என்பதே சரி. ஆனால், ‘என்ன பண்ணுச்சு தெரியுமா? அடி பிண்ணிருச்சு’ என்பது போல இரண்டு சொற்களையும் குழப்பிக் கொள்வது தவறானது. சடை, சண்டை எதுவாயினும் ஒன்றன் பின் ஒன்றாக -பின் பின்னாக- பின்னுதல்தான் சரி.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in