ஆங்கிலம் அறிவோமே 4.0: 49 - ‘Breaking the ice’ஐ எப்போது உடைப்பது?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 49 - ‘Breaking the ice’ஐ எப்போது உடைப்பது?

Published on

‘Candid photography பற்றி அறிவேன். ‘Candid’ என்றால் யாருமறியாமல் என்று பொருளா?' - அதாவது போஸ் கொடுக்காமல் இயல்பாக எடுக்கப்படும் ஒளிப்படங்கள் இவை என்பதால் நீங்கள் இப்படி நினைத்திருக்க வேண்டும். ‘Candid photography’ என்பது 'கேமராவைப் பாருங்க, சீஸ் சொல்லுங்க, சிரிப்பா சிரியுங்க' என்றெல்லாம் இயக்கப்பட்டு, எடுக்கப்படும் ஒளிப்படக் கலை அல்ல. வீடு என்று இல்லை. பூங்கா, மளிகைக் கடை என்று மக்கள் கூடும் எந்த இடத்திலும் இந்த வகை ஒளிப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஆனால் ‘candid’ என்பதன் பொருள் வேறு. வெளிப்படையாக, நாணயமான என்பது இதன் அர்த்தம். ‘He was candid in his opinion’ என்றால் தன் கருத்தை எந்தப் பாசாங்கும் இல்லாமல் அவர் வெளிப்படுத்தினார் என்று பொருள்.

***

‘Iconic’ என்கிறார்களே. ‘Icon' என்பது என்ன? - ஒரு நிரலின் குறியீடாகக் கணினித் திரையில் காணப்படும் சிறு படம். ‘Printer icon’ஐக் க்ளிக் செய்யவும், இது ‘Recycle Bin icon’ என்பதுபோல. ஒன்றின் அடையாளச் சின்னமாகக் கருதப்படும் நபர் (அல்லது பொருள்) என்பதையும் ‘icon’ என்ற இந்தச் சொல்லால் குறிப்பிடுவார்கள். அதாவது, குறியீடு. அந்தந்தத் துறையில் பெரிதும் ஆராதிக்கப்படுபவர்கள். மைக்கேல் ஜாக்சன், புரூஸ் லீ, மடோனா, எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றவர்கள் அவரவர் பிரிவுகளில் ‘icons.’

***

‘Breaking the ice’ என்பதன் பொருள் என்ன? அதை எப்போது எப்படிப் பயன்படுத்த வேண்டும்? - ஐஸ் கட்டியை உடைப்பது சுலபமா, கஷ்டமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம். ‘To break the ice’ என்பதன் பொருள் வேறு. ரயில் ஒன்றில் ஏறுகிறீர்கள். உங்கள் பக்கத்தில ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். பல மணி நேரம் அருகருகே உட்கார்ந்துகொண்டு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். அவ்வளவு நேரமும் அருகில் இருப்பவரிடம் ஒன்றுமே பேசாமல் இருக்க வேண்டுமா என்ன?

‘அறிமுகமில்லாதவரிடம் எப்படி பேசத் தொடங்குவது? அவராகப் பேசினால் பரவாயில்லை’ என்று நினைக்கிறீர்கள். ஆனால், சற்று நேரம் கழித்து ‘அதனால் என்ன? நாமே பேச்சைத் தொடங்கலாமே’ என்று முடிவெடுத்து உங்களை அவருக்கு அறிமுகம் செய்துகொண்டு பேச்சைத் தொடங்கி விடுகிறீர்கள். இதுதான் ‘to break the ice.’ அதாவது, ஆரம்பத் தயக்கத்தை உடைத்துக்கொண்டு நீங்களாகவே பேசத் தொடங்குவது.

***

கோடிட்ட இடத்தின் பொருத்தமான வார்த்தை எது? -

............... comes before a conviction.

(a) Induction

(b) Indictment

(c) Indication

‘Indication’ என்றால் புலப்படுத்துவது. ‘Recent research indicates that teenagers are getting too little exercise.’ மறைமுகமாக ஒன்றை சுட்டிக்காட்டுவதை இந்தச் சொல்லின் மூலம் உணர்த்துவதும் வழக்கம்தான். ‘The spokesman indicated that an agreement was likely soon.’

‘Induction’ என்றால் தொடக்கம், முன்னுரை என்றும் கூறலாம். ‘The induction ceremony of the new employees was held at a banquet hall.’ தூண்டுதல் என்ற பொருளிலும் ‘induction’ என்று சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. அதாவது, ‘trigger.’ தொடர்ந்து பல செயல்களுக்கு வழிவகுக்கும் ஒரு செயலை ‘induction’ என்பார்கள்.

‘Indictment’ என்றால் குற்றச்சாட்டு. அதாவது, அதிகாரபூர்வமாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு. காவல் நிலையத்திலோ நீதிமன்றத்திலோ இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போதுதான் ‘conviction’ நடக்க வாய்ப்பு உண்டு. அதாவது, குற்றவாளி என்று தீர்மானித்தல். ஆக, ‘indictment comes before conviction’ என்பது பொருத்தமானதாக இருக்கிறது.

‘Conviction’ என்பதற்கு நம்பிக்கை என்ற பொருளும் உண்டு. ‘Speak with conviction’ என்றால் என்ன பேசுகிறாயோ அதில் சந்தேகமின்றி நம்பிக்கையோடு பேசு என்று பொருள்.

சிப்ஸ்:

‘Tomato prices tumble?’

‘Tumble’ என்றால் (தடுமாறி) விழுதல். இங்கே தக்காளியின் விலை சரிவதைக் குறிக்கிறது.

‘Nuts and bolts’ என்றால்?

அடிப்படையான தகவல்கள் என்று அர்த்தம். ‘Nuts and Bolts of doing a project’ என்றால், ஒரு புராஜெக்ட்டை செய்வதற்கான அடிப்படை விஷயங்கள்.

‘Henious crime’ என்பது எந்த வகைக் குற்றம்?

அராஜகமான பெரும் குற்றம்.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in