

இன்றைய தமிழில் ‘ர’, ‘ழ' எழுத்துகள் சிதைந்து வருகின்றன. ‘ர' எழுத்தின் வரி வடிவமும், ‘ழ' எழுத்தின் ஒலி வடிவமும் ஆபத்தில் உள்ளன. ‘ர' – எழுத்து, கணினி அச்சில் படாத பாடுபடுகிறது. அரசு ஏற்பு பெற்ற ‘செந்தமிழ்' உள்ளிட்ட சில எழுத்துருக்களில் ‘ர' தனது துணைக் காலின் கீழ் ஒரு கோடு எனும் சரியான வடிவத்தில் இல்லை. துணைக்காலாக மட்டுமே உள்ளது. தொலைக்காட்சிச் செய்தி எழுத்துகளை, இனி கவனித்துப் பாருங்களேன். கடைசி எழுத்து, துணைக்கால் போட்டு, புள்ளி வைத்திருக்கும்.
ஒருங்குறி (யுனிக்கோடு) எழுத்துருவில் இது சரியாகவே இருப்பதால் இன்னும் உயிர் இருக்கிறது. அச்சகங்களில் பெரும்பாலும் ‘செந்தமிழ்' எழுத்துருவே பயன்பாட்டில் இருப்பதால், கண்ணில்படும் இடங்களில் எல்லாம் ‘ர' எழுத்து, துணைக்காலாகவே தெரிகிறது. தற்போது பாடநூல்களில் மாற்றிவிட்டாலும் வினாத் தாள்களில் தொடர்கிறது. இதைச் சரி செய்ய ஒரு நிரந்தர வழி உள்ளது.
ஒருங்குறி எழுத்துகளை மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். ஏற்கெனவே ஒரு தலைமுறை பாடநூல், இதழ்கள், நூல்கள், செய்தித் தாள்கள் உள்ளிட்ட அச்சு வடிவங்களில் தவறாகப் பழகியதை மாற்ற முயற்சி எடுப்பது, தமிழ் எழுத்து வடிவைக் காக்கும் அவசியப் பணி.
‘ழ' – எழுத்து, உச்சரிப்பில் பல பாடுபடுவது ஊர் அறிந்த ரகசியம். மிகப் பெரிய பேச்சாளர், தமிழறிஞர், எழுத்தாளர், அரசியல் தலைவர்களும்கூட இதில் கவனம் செலுத்துவதில்லை. ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க வந்தவர், “நான் தமிளை எப்படி பிளையில்லாமல் பேசுவது, எளுதுவது எனும் தலைப்பில் ஆய்வு செய்கிறேன்” என்றார். இது மிகையல்ல, நடந்த நிகழ்ச்சி. ஏற்கெனவே எனது ‘இலக்கணம் இனிது’ நூலிலும் பதிவு செய்திருக்கிறேன்.
தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று, தமிழ் எனும் சொல் அமைப்பு. வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று ஒலி வடிவமும் கொண்டது. அதோடு, குறிகளற்ற எழுத்து, குறி கொண்ட எழுத்து, மெய்யெழுத்து என வரி வடிவத்திலும் நுட்பம் காட்டி நிற்பது. மிகச் சிலரே இந்த எழுத்தின் தனிச் சிறப்பை அறிந்து அழுத்தம் திருத்தமாக, தமிழின் உயர்வறிந்து சரியாக உச்சரிக்கிறார்கள்.
இதை, பள்ளி வகுப்பிலிருந்து, மேடைப் பேச்சு, ஒலிப்பதிவுக் கூடங்களில் மட்டுமின்றி அச்சிலும் கண்காணிப்பது அவசியம். இல்லாவிடில் அடுத்த தலைமுறையில் ‘தமிள் வலர்வதை’ தவிர்க்க முடியாது. தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் அமைப்புகள் வழியாக, இவ்வாறான தமிழை அழிக்கும் பிழைகளைச் சரி செய்யலாம்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com