

பிற்காலச் சோழர்கள் ‘பரகேசரி', ‘ராஜகேசரி' என்றும்; பாண்டியர்கள் ‘ஜடாவர்மன்’, ‘மாறவர்மன்' என்றும் முன்னோர் பெயரில் பட்டம் சூட்டிக்கொண்ட வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. செட்டிநாட்டுப் பெரியோர் உள்ளிட்ட தமிழர் சிலரிடம் இவ்வழக்கம் இன்றும் உள்ளது. இதில் தந்தைவழிப் பெயர்கள்தான் இருக்கும். தாய்வழிச் சமூகத்தை மாற்றி, தந்தைவழிச் சமூகமாக நிலைநிறுத்திய ஆணரசியலும் இதில் உள்ளது.
இலக்கணத்தில் ‘மரூஉ’ - இந்த வகையில் வந்ததுதான் தாத்தா பெயரைப் பெயரனுக்கும், அரிதாகப் பாட்டி பெயரைப் பெயர்த்திக்கும் வைக்கும் வழக்கம். பெயரைத் தாங்கியவன்/ள்என்று பொருள். பெயரோடு, முன்னோர் பெருமையைத் தாங்கிய எனும் உட்பொருளும் உண்டு. பேச்சுவழக்கில் பெயரன் ‘பேரன்' ஆனான். இதை இலக்கணத்தில் ‘மரூஉ' என்பர். பேச்சு வழக்கில் மருவி – மாறி ஒலிப்பதே ‘மரூஉ.’
இரு குறில் எழுத்துகளின் ஓசை, ஒரு நெடில் ஓசைக்குச் சமம். அ அ=ஆ, இ இ=ஈ முதலான இன எழுத்துகளின் தோற்றத்தை இந்த வழக்கில் வரும் ‘மரூஉ’ உணர்த்தி நிற்பது, தனி ஆய்வுக்குரியது.
‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (பெயரியல்-640) தொல்காப்பிய இலக்கணத்தின்படி, சொற்கள் மருவியதற்கும் வரலாறு இருக்கலாம். ஆய்வதும் புதிய பொருள் காண்பதும் ஆய்வாளர் கடன்.
பெயர்த்து – பேத்து 'பேத்துருவேன்'
வெயர்த்து – வேர்த்து ‘வேர்த்து விறுவிறுத்து'
மிகுதி – மீதி (எஞ்சி நிற்பது)
பகுதி – பாதி.
பாதியை அரை என்பதே எழுத்து வழக்கு. அரையை ‘இடுப்பு' எனும் பொருளில் ‘புலித்தோலை அரைக்கசைத்து' என்கிறது சுந்தரர் தேவாரம். உடலின் கால் பகுதியைக் கால் என்றதும், உடலின் நடுவில் இடையில் உள்ள இடுப்பை அரை என்றதும் தமிழ் நுட்பம்.
இந்தப் பாதிப்பில், குறிலும் ஒற்றும் சேர்ந்து நெடிலாவதும் உண்டு. செய்தி – சேதி. 'அப்பறம், வேறென்ன சேதி?' பொழுது- போது, போழ்து. பொழுது சாயும் காலம் - சாய்ங்காலம், பொழுது சாயும் நேரம் - சாயந்தரம் என்பன வழக்கு. இரவு, பகலைச் சந்திக்கும் விடிகாலைப் பொழுதே சந்தி. பகல் முடியும் காலமே அந்தி. ‘இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுது’ - வைரமுத்து. இப்போது-இப்பொழுது என்பன எழுத்து, இப்ப-என்பது வழக்கான மரூஉ.
உறவுப் பெயர்களில் மரூஉ: புதிதாக மணமாகி வந்தவள், கணவரின் உடன்பிறந்தாளை எப்படி அழைப்பது? என்று விழிக்கிறாள். அதற்கு, ‘நாத்தூண் நங்கை’ என எடுத்துக் கொடுக்கிறார், இளங்கோவடிகள். (சிலப்பதிகாரம்-கொலைக்களக் காதை- வரி-19).
இதுவே பிறகு ‘நாத்தனார்’ என மருவியிருக்கலாம். இதிலும் ஒரு நுட்பம், நாற்று - இளம் பயிரை - பிடுங்கி வேறு வயலில் நடுவது வழக்கம். இந்த வீட்டில் பிறந்து, வேறொரு வீட்டில் வாழப்போகும் பெண் எனும் பொருளில் நாற்று-அன்னாள்; நாத்து-அன்னாள்; நாத்தனாள்; நாத்தனார். தமிழ் இனிக்கிறதல்லவா?
இதற்கு இணையான மற்றொரு சொல் ‘கொழுந்தியாள்’. இவள், இந்த வீட்டில் துளிர்விட்ட கொழுந்து அன்னாள்; கொழுந்தனாள்; கொழுந்தியாள்; மற்றொரு வீட்டிற்குப் போய் வாழ்ந்து, பிள்ளைக் கனி தருவாள் எனும் பொருள்தான் எவ்வளவு சிறப்பு. ஆங்கில உறவுப் பெயர்கள் ‘in-law’ என்றே வருவதை ஒப்பிட்டு, சொல்லின் வரலாறு, தமிழ்ச் சமூக வரலாற்றைச் சொல்வதைத் தனியே ஆய்வு செய்யலாம்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com