ஆங்கிலம் அறிவோமே 4.0 - 46: இரவை நினைத்தாலே பயம்

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 46: இரவை நினைத்தாலே பயம்
Updated on
2 min read

‘Mare’ என்பது பெண் குதிரை யைக் குறிக்கும் சொல். ‘Nightmare’ என்ற சொல்லுக்கும் பெண் குதிரைக்கும் தொடர்புண்டா? - இல்லை, வாசகரே. ஏதோ ஒன்றை நினைத்தாலே இதயம் பயத்தில் படபடக்கிறது; உடல் நடுங்குகிறது என்றால், அந்த ஒன்று உங்களுக்கு ‘nightmare’. அப்படி ஒரு உணர்வை உங்களுக்கு ஒரு கனவு கொடுத்தால் அதுவும் ‘nightmare’தான்.

***

‘Rationale or rational’ ஆகிய இரண்டு சொற்களை ஒன்றுக்குப் பதிலாக மற்றதைப் பயன்படுத்த முடியுமா? - முடியாது நண்பரே, இரண்டும் உணர்த்தும் பொருளில் ஓரளவு ஒற்றுமை உண்டு என்றாலும், ‘rational’ என்பது ‘adjective’ (nounஐ விவரிக்கும் சொல்). இதற்கு ‘அறிவுக்கு ஏற்புடைய' என்று பொருள். மறைமுகமாக ‘உணர்வு சார்ந்தது அல்ல' என்பதையும் இது குறிக்கிறது. ‘Make a rational choice about which course to study’. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னால் ஒரு ‘rational thinker' நன்கு சிந்திப்பார், பிறருடைய கருத்துகளை அறிய முயற்சிப்பார்.

‘Rationale' என்பது ‘noun’. காரணவிளக்கம் என்று இதன் பொருளைக் குறிப்பிடலாம். ‘I demand a rational explanation for your decision.’ ‘What is the rationale for your decision?’ இரண்டாவது வாக்கியத்தில் உங்கள் முடிவுக்கான காரண விளக்கம் கேட்கப் படுகிறது. அந்த முடிவை நீங்கள் அறிவுக்கு ஏற்புடையதாக எடுத்திருக்க வேண்டும் என்பதில்லை. ‘I think if you had been rational, you would not have come to such conclusion. Please clarify on your rationale for coming to such conclusion’.

***

ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த ஒருவர், ‘Pardon my French’ என்று கூறியதைக் கேட்டேன். ஏன் அப்படி கூறினார்? - அதானே, தவறாக ஆங்கிலத்தில் பேசியிருந்தால்கூட ‘Pardon my English’ என்றுதானே பேசியிருக்க வேண்டும் என்கிறீர்களா? ஒரு காலத்தில் பிரெஞ்சு மொழி தெரியாதவர்கள் (ஆங்கிலப் பேச்சாளர்கள்) பிரெஞ்சு வார்த்தைகள் கலந்து பேசிவிட்டால் ‘Pardon my French’ என்று கூறியதுண்டு.

ஆனால், இப்போது அதற்கான பொருள் வேறு. தவறான, சபையில் பேசத் தகாத வார்த்தைகளை உதிர்த்துவிட்டால் அதைத் தொடர்ந்து ‘Pardon my French’ என்று கூறுவதுண்டு. இது பிரெஞ்சு மொழியைப் பற்றிய இகழ்வான கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறதுதான்.

***

‘Contempt of court’ என்பது என்ன? - நீதிமன்றத்தை ஏளனம் செய்வது. இதற்குத் தண்டனை உண்டு. ‘Contempt’ என்பது ஒருவருக்கு (அல்லது ஒன்றுக்கு) மதிப்போ மரியாதையோ தகுதிப்பாடோ இல்லை என்பதை வெளிப்படுத்துவது. இதை வெளிப்படுத்துபவர் உயர்வு மனப்பான்மை கொண்டிருப்பவ ராகவும், கோபம், எரிச்சல் வயப்பட்டு இருப்பவராகவும் இருப்பார்.

’He had complete contempt for all his teachers’ என்றால் அவன் தன் அனைத்து ஆசிரியர்களையும் மிக ஏளனமாகவும் அலட்சியமாகவும் எண்ணுகிறான் என்று பொருள். ‘The teacher treated my question with contempt’ என்றால் என் கேள்வியை ஆசிரியர் தகுதிப்பாடற்ற ஒன்றாக (பதிலளிக்கவே தேவையில்லாத ஒன்றாக) கருதினார் என்று பொருள்.

‘Contempt of court’ என்பது சட்டமீறலான நடவடிக்கை. ஏனென்றால் அது நீதிமன்றத்தின் விதிமுறைகளை பின்பற்றாத, மதிக்காத ஒன்று. இதற்குத் தண்டனை உண்டு. ‘Disdain’, ‘scorn’ ஆகியவற்றை ‘contempt’ என்பதன் சம வார்த்தைகளாகக் கூறலாம்.

சிப்ஸ்:

# ‘ஹிரண்யா என்ற நோயின் ஆங்கில வார்த்தை என்ன? அகராதியில் கண்டுபிடிக்க முடியவில்லையே.’
அது ஹிரண்யாவோ, பிரகலாதாவோ அல்ல. ஹெர்னியா (Hernia).
# ‘Voluptuous' என்பது பாலியல் தொடர்பான சொல்லா?
பெரும்பாலும் அப்படித்தான். தேர்ந்த வடிவம் மற்றும் பாலியல் கவர்ச்சி கொண்ட என்று அந்தச் சொல்லுக்குப் பொருள் கூறலாம்.
# ‘Alter’ தெரியும். Altar?
பலிபீடம். தொழுகைமேடை.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in