தமிழ் இனிது 11: வேண்டா சொல் வேண்டாம்

தமிழ் இனிது 11: வேண்டா சொல் வேண்டாம்
Updated on
2 min read

சில தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும்போது சிலர் குழம்பிப் போவார்கள். அதுபோன்ற சொற்களைப் பார்ப்போமா?

அருகில் - அருகாமையில்L: அருகில் என்பதே சரியான சொல். அருகண்மை எனும் ஒரு பொருள் பன்மொழி, திரிந்து அருகாமை ஆகிவிட்டது. ஆனால், இது அருகு எனும் சொல்லுக்கு எதிரான பொருளையே தருகிறது. வழக்கில் உள்ளது என்பதாலேயே, சரியான சொல்லை விட்டுவிட்டு, நாம் தூரத்தில் நிற்க வேண்டாம். ‘அருகில்’ எனும் சொல்லையே பயன்படுத்துவோம்.

எத்தனை - எத்துணை: எத்தனை–எண்ணைக் குறிக்கும். ‘எத்தனை வயது?’. எத்துணை – அளவைக் குறிக்கும். ‘எத்துணை வெள்ளம்?’. ‘எத்துணையும் பேதமுறாது’ - திருவருட்பா - 5298. ஆனால், கால- வெள்ளத்தையே நுணுகி ‘எண்ணும்’ இக்காலத்தில் ‘எத்துணை’ எனும் சொல் வழக்கிழந்தது. ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?’ எனும் பட்டுக்கோட்டையார் தொடங்கி, ‘எத்தனை பேர் கூடி இழுத்தும் என்ன? சேரிக்குள் வரவில்லை தேர்’ எனும் செ.ஆடலரசன் வரை, ‘எத்தனை’ என்பதே வழக்கில் உள்ளது.

எல்லாரும் - எல்லோரும் - எல்லீரும்: வள்ளுவர் ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்கிறார் (125); கம்பர், ’எல்லாரும்’ என்கிறார் (கம்ப ராமாயணம்-பால-நகரப் படலம்-167). இவ்வாறு முன்னரே, ‘எல்லாரும்’, ‘எல்லோரும்’ இரண்டு வழக்கும் இருந்ததை, ‘ஆ ஓ ஆகலும் செய்யளில் உரித்தே’ (தொல்-680) என ஏற்கச் சொன்னார் தொல்காப்பியர். இப்போதும் இலக்கிய வழக்கில் இவ்விரண்டு சொற்களையுமே பாரதி பயன்படுத்தி எழுதியிருக்கிறார். ‘எல்லாரும்’ எனும் சொல்லே மக்கள் வழக்கில் இப்போது உள்ளது. ‘எல்லீர்’ எனும் சொல், பழந்தமிழில் இருந்ததாகத் தெரிகிறது.

கட்டிடம் – கட்டடம்: ‘கட்டிடத் திறப்பு விழா’ என்பது தவறு. கட்டும் இடமே கட்டிடம்-மனை (Plot/Site). கட்டி முடிக்கப்பட்டது கட்டடம் (Flat/Building). கட்டு-அடம்- அடுத்து-அடுக்கிக் கட்டுவது. ‘Apartment’ என்பதை ‘அடுக்ககம்’ எனலாம்.

நம்மைப் பொறுத்ததா? யாரைப் பொருத்தது? - பொருத்திப் பார்ப்பது பொருத்தம். திருமணத்தில் பொருத்தம் பார்க்கிறோம். பொறுத்தம் எனத் தமிழ்ச்சொல் ஏதும் இல்லை. ஆனால், ‘கொஞ்ச காலம் பொறுத்துச் செய்யலாம்’ என்பதற்கு, ‘காலம் தாழ்த்திப் பொறுமையாகச் செய்யலாம்’ என்பது பொருள்.

ஆனால், ‘இதற்கு நான் பொறுப்பல்ல’ என்பது, பொறுப்புத் துறப்பு. இரண்டு சொற்களும் வேறு வேறு ஒப்பீட்டுப் பொருளில் ஒன்றுபோல வழக்கில் உள்ளன என்றே புரிந்துகொள்ள வேண்டும். இலக்கணத்தில் பொருத்தமே பொருத்தம். ஆக, சொல் மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சி நம் அனைவரையும் பொருத்ததே.

இரண்டு மாதிரியும் புழக்கத்தில் உள்ள சொற்கள் சில: வெயில் – வெய்யில்: வெப்பத்தின் காரணமாக வருவது வெயில். குறளும் ‘என்பில் அதனை, வெயில்போல’ என்றே சொல்கிறது (குறள்-77). ‘மாலை வெயில் மயக்கத்திலே மயங்கிடலாமோ?’ என்றுதான் கேட்கிறார் பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்.

ஆனால், ‘வெய்யிற் கேற்ற நிழலுண்டு’ என்கிறார் கவிமணி தேசிக வினாயகர். ‘வெய்யில்’ எனும் பெயரில் நல்ல கவிஞர் ஒருவரும் எழுதி வருகிறார். பேச்சில் வெய்யில் அடிப்பதாகத்தான் சொல்கிறோம்.

வேண்டா- வேண்டாம்: ‘வேண்டா’ என்பதே இலக்கண வழக்கு (குறள்-37). இச்சொல் இப்போது, ‘வேண்டாம்’ என்றே எழுத்திலும் பேச்சிலும் புழங்கி வருகிறது. இனி, ‘வேண்டா’ இலக்கணத்தைத் தெரிந்துகொண்டாலும், யாரும் அப்படி எழுதுதல் வேண்டாம் அல்லவா? ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்றார் ஔவையார்.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in