ஆங்கிலம் அறிேவாேம 4.0: 45 -‘Appeasement’ என்பது என்ன?

ஆங்கிலம் அறிேவாேம 4.0: 45 -‘Appeasement’ என்பது என்ன?
Updated on
2 min read

‘Appeasement’ என்றால் அமைதிச்சூழல் என்று கொள்ளலாமா? - நண்பரே, அந்தச் சொல்லுக்கு அவ்வளவு நேர்மறை அர்த்தம் கிடையாது. சொல்லப்போனால் ஒரு நாடு அடிக்கடி ‘appeasement'இல் ஈடுபட்டால், அதன் வெளியுறவுக் கொள்கை பலவீனமானது என்றாகிவிடும். போரைத் தவிர்ப்பதற்காக, எதிரி நாட்டின் நிபந்தனைகளை அப்படியே அல்லது கணிசமாக ஏற்றுக்கொள்வதை இந்தச் சொல்லால் குறிப்பார்கள். பிரிட்டிஷ் பிரதமராக இருந்த நெவில் சேம்பர்லின் ஹிட்லருடன் ஒரு ‘appeasement’ உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

இது பிடிக்காத வின்ஸ்டன் சர்ச்சில் ‘போரா? அகெளரவமா? என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது. நீங்கள் அகௌரவத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள். எனவே, போர் தொடங்கும்' என்றார்.

***

‘Legitimate son’, ‘legitimate share’ என்ற பயன்பாடுகளைக் கேள்விப்பட்டி ருக்கிறேன். ‘Legitimate’ என்பது என்ன? - ‘நியாயமாகவும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ள காரணத்தை அடிப்படையாகக் கொண்டது' என்று அந்தச் சொல்லுக்குப் பொருள் உண்டு. ‘All legitimate requests should be looked into’ என்றால் எல்லா நியாயமான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று பொருள்.

‘His business is not legitimate’ என்றால் அவர் நியாயமற்ற முறையில் தன் வணிகத்தை நடத்துகிறார் என்று அர்த்தம். நியாயமான, நேர்மையான, ஏற்றுக்கொள்ளத்தக்க, சட்டபூர்வமான என்று இதற்கு பல அர்த்தங்கள் உண்டு.

‘Legitimate son’ எனும்போது சட்டபூர்வமான என்ற கோணம் முன்னிறுத்தப்படுகிறது. அதாவது, ஒருவர் தன் மனைவியின் மூலமாக ஒரு குழந்தையையும், வேறொரு பெண்ணின் மூலமாக இன்னொரு குழந்தையையும் பெற்றெடுத்தால், முதல் குழந்தை ‘legitimate child’ என்றும், இரண்டாவது குழந்தை ‘illegitimate child’ என்றும் குறிப்பிடப்படுகின்றனர். (இப்போ தெல்லாம் illegitimate என்பதற்குப் பதிலாக ‘outside the marriage’ என்கிறார்கள்)

‘Legitimate government’ என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று பொருள்.

***

‘Chief Justice pulls up Manipur police’ என்று ஒரு நாளிதழின் தலைப்பு செய்திகளில் படித்தேன். ‘Pulls up’ என்றால் என்ன? - ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்பதை அவரிடம் கூறுவதைத்தான் ‘pulls up’ என்பதன் மூலம் உணர்த்துகிறார்கள். ‘She's always pulling me up for my bad manners’.

***

சமீபத்தில் ஓர் ஆங்கில தொலைக் காட்சி சேனலில் ஒருவர் ஒரு பிரபல தலைவரை ‘simpleton’ என்று குறிப்பிட்டது அதிர்ச்சியைத் தந்தது. அவர் தொடர்பாக மேலும் பேசுகையில் அந்தத் தலைவர் மிக எளிமையாக வாழ்ந்தவர் என்பதை விவரித்தார் அந்தப் பேச்சாளர். ‘He led a simple life’ என்பது வேறு. ‘He was a simpleton’ என்பது வேறு. ‘Simpleton’ என்பது ஓர் எதிர்மறைச் சொல். சுயபுத்தி இல்லாத, முட்டாள்தனமான ஒருவரை இந்தச் சொல்லால் குறிப்பிடலாம். அதாவது, புரிந்துகொள்ளும் தன்மை குறைந்தவர்.

இப்படி ஒரே சாயலில் உள்ள சொற்களை நாம் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. ‘Enormous’ என்றால் மிகப்பெரிய, மகத்தான என்று பொருள். இதை வைத்துக்கொண்டு ‘enormity’ என்ற சொல்லும் அதே பொருள் கொண்டது ம​ட்டுமே என்று நினைத்துவிடக் கூடாது. அதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. ‘Enormity of Hitler's regime’ என்றால் ஹிட்லர் ஆட்சியில் நடந்த பெரும் கொடுமைகள் என்று பொருள்.

‘Official’ என்றால் அதிகாரபூர்வமான அல்லது பணித்துறைக்குரிய. ‘Official biography’, ‘official announcement’ என்பது போல. ஆனால். ஒருவரை ‘officious’ என்று குறிப்பிட்டால், அவரை எதிர்மறையாக விமர்சிக்கிறீர்கள். வேண்டாத விஷயங் களில் எல்லாம் வலிந்து தலையிடும் ஒருவரை ‘officious person’ என்பார்கள்.

சிப்ஸ்:

# ‘Yahoo’ என்றால் அஞ்சல், தேடுபொறி போன்றவை நினைவுக்கு வருகின்றன. இந்த ‘brand’ உருவாவதற்கு முன் இந்தச் சொல்லுக்குப் பொருள் ஏதாவது உண்டா?
கரடுமுரடான ஒரு நபர் மற்றும் உற்சாகக் கூச்சல் இரண்டையுமே இந்தச் சொல்லால் குறிப்பிடுவார்கள்.
# ‘Puppy’ என்பது நாய்க் குட்டியை மட்டும்தான் குறிக்குமா?
வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்குட்டி.
# ‘Wit’ என்றால் நகைச்சுவை என்று புரிகிறது. ஒரு நாளிதழில் ‘whit’ என்ற சொல்லைப் பார்த்தேனே?
மிகமிகச் சிறிய துகள் என்று அதற்குப் பொருள். (Wit என்பது நகைச்சுவையல்ல, புத்திசாலித்தனம்)

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in