

“நிகழும் மங்களகர மான” என்று நமக்கு திருமண அழைப்பிதழ்கள் வருவதைப் பார்க்கலாம். இசையரங்குகளில் நிகழ்ச்சி முடிந்ததை, “மங்கலம் பாடியாச்சு” என்கிறார்கள். இதில் எது சரியான சொல்? ‘மங்களம்’ எனும் சொல், நிறைவு எனும் பொருளில் புழங்குவதை அறியாமல், அழைப்பிதழில் போடுவது தவறு! ‘மங்கலம்’ என்பதுதான் சரியான வழக்கு! “மங்கலம் என்ப மனைமாட்சி” (குறள்-எண்-60). இந்த ‘மங்கலம்’, இனாமாகத் தரப்பட்ட ஊர்ப் பெயர்களிலும் வருவதைப் பார்க்கலாம்.
ஆகிய, முதலிய வேறுபாடு என்ன? - ஒன்றில் தொடங்கி, தொடரும்போது, முதலிய எனும் சொல் வரும். “கல்வி முதலிய சமூகத் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை”. சொல்ல வேண்டியவற்றை முழுவதுமாகச் சொல்லி முடிக்கும் இடத்தில் ஆகிய எனும் சொல் வரும். “இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழிலும் வல்லவர்”. இவற்றை இடம் மாற்றிப் போட்டால், பொருள் மாறிப் போகும்.
துவக்கப்பள்ளியா? தொடக்கப்பள்ளியா? - இவ்விரண்டையும் ஆசிரியர் சிலரும்கூடப் பயன்படுத்துகிறார்கள்! தொடு- தொடங்கு- தொடர்- எனும் பொருளில் தொடக்கப் பள்ளி என்பதே சரி. துவக்கு என்றால் ஈழத்தமிழில் துப்பாக்கி என்று பொருள்.
முன்னால் – முன்னாள், மேனாள், முன்னை? - வரிசையில் முன்னால் இருக்கலாம். பதவியில் முன்னாள் அல்லது மேனாள் என்பதே பணிநிறைவு பெற்றவர் அல்லது அந்தப் பணியில் முன்னாள் இருந்தவர் என்று பொருள்தரும். முன்னை என்பது இலக்கிய மரபு.
ஒரு, ஓர்: இவற்றை எழுதும்போது, இந்த இடத்தில் ‘ஒரு போடுவதா? ஓர் போடுவதா?’ என்று பலருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. “அடுத்துவரும் சொல் உயிர்எழுத்தில் வந்தால், ஓர் எனும் எண்ணுப் பெயர் வரும். மற்ற எழுத்து வந்தால், ஒரு வரும்” என்பது இலக்கணம்.
ஓர் உயிர், ஒரு வாழ்க்கை என்பதுதான் சரி. ஆனால், வழக்கிலும், இலக்கியத்திலும்கூட இது மாறி வருவதுண்டு. ‘ஒரு ஊருல ஒரு நரியாம்’ என்ற கதையை நாம் கேட்டதுதான். “மேல் ஓர் நாள்” என்பது கலித்தொகை(51). ‘ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம்’ ஜெயகாந்தன் எழுதிய புதினம். இவற்றில், ஒரு, ஓர் இலக்கணம் இல்லை.
இதில் கவனம் பெறாத மற்றொன்றும் உண்டு! ஒன்று எனும் எண்ணுப் பெயரே ஒரு ஆகும். இஃது, அஃறிணைக்கு உரியது. இந்த அஃறிணை பற்றிய தெளிவில்லாமல் உயிர் எழுத்தை மட்டும் நினைத்து, ‘ஓர் அமைச்சர்’ என்று எழுதுகிறார்கள். அமைச்சரை அஃறிணையாக்குவது சரியல்லவே! அமைச்சர் ஒருவர் என்பதே சரி.
புதிய மரபாக ஒரு ஓர் இரண்டையும் ஒன்றேபோலப் பயன்படுத்தும் பழக்கம் தொடர்ந்து வழக்கமாகிவிட்டது. எனினும் இப்படி ஒரு மரபு தமிழில் உள்ளது என்பதையாவது கவனத்தில் கொள்வது நல்லது.
தொடர்புடைய மற்றொன்று - அது, இது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் சொற்களுக்கும் இதே மரபு உண்டு! – அது வந்தது, அஃது என்ன? ஆனால், தமிழில் கிட்டத்தட்ட ஆய்த எழுத்துப் பயன்பாடு அழிந்தே வருகிறது! வன்முறைக்கு எதிரானவராக இருந்தால் ஆயுதத்தை ஒழிக்கலாம், ஆய்த எழுத்தை ஒழித்து விடலாமோ?
- muthunilavanpdk@gmail.com