

சில சொற்களைப் பேசும்போது வராத குழப்பம், எழுதும்போது வரும். உதாரணமாக ‘கோவிலா, கோயிலா?’ என்பதுபோல. ஏனெனில், பேச்சுமொழி வேறு, எழுத்துமொழி வேறு. உலகம் முழுவதும் இந்த வேறுபாடு உண்டு. எழுதுவோர் ‘நமக்கு இதுகூடத் தெரியலையே' என்று சுய ஆற்றாமை கொள்ள வேண்டியதில்லை. ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' அல்லவா? பேசப் பேச, எழுத எழுதத்தான், தவறு சரியாகும்.
பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, யாரும் பயிற்சி செய்வதில்லை. அதனால்தான் தமிழ்நாடு அரசு, அரசுப் பணிகளுக்குத் தமிழில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று ஆணையிட்டிருக்கிறது. இது மிகவும் நல்லது. பாடத்துக்காகவும் படிக்கலாம். வாழ்க்கைக்காகவும் தெரிந்துகொள்ளலாம்.
அங்கயற்கண்ணியும் மங்கையர்க்கரசியும்: அங்கயற்கண்ணி என்றால், அழகான கயல் (மீன்) போலும் கண்களை உடையவள் என்று பொருள். இதை அங்கயர்க் கண்ணி என்பது தவறு. அதேபோல, மங்கையர்க்கு அரசி எனும் பொருள் தரும், மங்கையர்க்கரசி என்பதே சரி, மங்கையற்கரசி என்பது தவறு. அரசு கலை, அறிவியல் கல்லூரி என்பதே சரியானது. இதை அரசினர் கல்லூரி என்று எழுத வேண்டியதில்லை. தேனீர் எனில், தேன் நீர் என்று தவறாகிவிடும். தேயிலை நீர் எனும் பொருளில் தேநீர் என்பதே சரி.
“போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூ” என்பது தொல்காப்பியம் (புறத்திணை-5)
ஆற்காடா? ஆர்க்காடா? - ஆர் என்றால் ஆத்திமரம், சோழர்களின் அடையாளப் பூ. ஆத்திமரங்கள் நிரம்பிய ஊர் ‘ஆர்க்காடு’ என்றிருக்கலாம். மாறாக, ‘ஆலமரம் நிரம்பிய ஊர்’ எனில் ‘ஆற்காடு’ என்பதும் சரிதான். (இதில், ஆத்திமரம் சிவனுக்குரியது, ஆலமரம் திருமாலுக்குரியது. ஊரை மதம் மாற்றலாமா?!)
கோயிலா? கோவிலா? - ‘குடியிருந்த கோயில்’, ‘கோவில்’, ‘இதயக் கோயில்’, ‘குடும்பம் ஒரு கோவில்’ என, கோயில், கோவில் ஆகிய இரண்டும் வரும் திரைப்படப் பெயர்கள் பல உள்ளன. ஆனால், ‘இ ஈ ஐ வழி, ய வரும், ஏனை உயிர்வழி, வ வரும்’ எனும் ‘உடம்படு மெய்’ (நன்னூல்-162) இலக்கணத்தின் படி, மணி ஓசை= மணியோசை, கோ இல்=கோவில் என்பதே சரி. உயிரும் மெய்யும் இணையுமே அன்றி உயிருடன் உயிர் இணையாது. அப்படி உயிர் எழுத்துடன் மற்றோர் உயிரெழுத்து சேரும்படி நேர்ந்தால் இவற்றை ‘உடன்படுத்த’ வரும் எழுத்தை ‘உடம்படு மெய்’ என்ற பழந்தமிழறிவு வியப்பளிக்கிறது.
காவிரியா? காவேரியா? - காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, சொற்களில் எது சரி என்றும் சிலர் பிரச்சினை செய்கிறார்கள். இரண்டு வழக்கும் இருப்பதாகச் சிலப்பதிகாரமே சொல்கிறது. எடுத்த எடுப்பில் வரும் மங்கல வாழ்த்துப் பகுதி -அடி5இல்- ‘காவிரி நாடன்’ என்று வரும். பிறகு, அதே சிலம்பின் ‘கானல்வரி’யில், ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று பலமுறை வரும். ஆக, இரண்டு வழக்குகளுமே உள்ளன, எந்தச் சிக்கலும் இல்லை.
இதுபோலவே, பழைமை-பழமை, உடைமை-உடமை, புடைவை-புடவை என இரண்டும் (வழக்கு மொழிக்குரிய ஐகாரக்குறுக்கம் எழுத்தில் ஏறி வருவதும்) வழக்கில் வந்துவிட்டது. ஆக, இலக்கணத்தை மாற்றுவதும் வழக்கில் உள்ளது. ‘மாறுவது மரபு, இல்லையேல் மாற்றுவது மரபு’தானே? அப்படி மாறிய சொற்களையும் அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
(தொடரும்)