ஒரு பெரும் கனவின் தொடக்கம்!

ஒரு பெரும் கனவின் தொடக்கம்!
Updated on
3 min read

1990களில் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 62 சதவீதம். இன்றைக்கு அது 80 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரம் பள்ளி செல்லும் குழந்தைகளின் வாசிப்புத் திறன் சரிந்துகொண்டே வருவதாக தேசிய அளவிலான ‘அசெர்’ உள்ளிட்ட ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது குழந்தைகள் தாய்மொழியில் வாசிக்கவே திணறுகிறார்கள். ஒன்றை வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே, அதன் வழியாக அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், புரிதலை விரிவுசெய்துகொள்ளவும் முடியும்.

புத்தாயிரம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளுக்கு நிறைய சிறார் இதழ்கள், சிறார் நூல்கள் கிடைத்துவந்தன. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எளிதாகவும் சுவாரசியமாகவும் சிறார் வாசிப்பதற்கான இதுபோன்ற வாசல்கள் குறைந்துவிட்டதும் ஒரு காரணம். வாசிக்கத் தெரியாத பிரச்சினை இன்றைக்கு பூதாகரமாகி நம் முன்னால் நிற்கிறது. அதைத் தீர்ப்பதற்கு வழி கண்டாக வேண்டும்.

இந்தப் பின்னணியில் பாடநூல் தாண்டி சிறார் வாசிப்பை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்துவருகிறது. அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான வகுப்பறை இதழ்களாக ‘தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ ஆகியவை கடந்த கல்வி ஆண்டு முதல் வெளிவருகின்றன. ‘இளந்தளிர் இலக்கியத் திட்ட’த்தின் கீழ் கடந்த ஆண்டு 59 நூல்கள் வெளியாகியுள்ளன.

புதிய திட்டம்: தற்போது வாசிப்பை இன்னும் ஆழ மாக எடுத்துச்செல்லும் வகையிலும், குழந்தை களை வாசிக்கத் தூண்டும் வகையிலும் ‘வாசிப்பு இயக்கம்’ முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நுழை, நட, ஓடு, பற என்கிற நான்கு பிரிவுகளில் 53 புத்தகங்கள் முதல் கட்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்துப் புத்தகங்களும் வண்ண வண்ண ஓவியங்கள், குறைந்த எழுத்துகளுடன் வெளியாகியுள்ளன. ஒரு புத்தகத்துக்கு ஒரு கதை என்கிற வகையில், 16 பக்கங்களில் அமைந்துள்ளன.

அறிவொளி இயக்கத்தில் பெரும் பணிகளை மேற்கொண்ட பேராசிரியரும் மாற்றுக் கல்வி செயல்பாட்டாளருமான ச.மாடசாமி, முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான வே.வசந்திதேவி, மாற்றுக் கல்வி செயல்பாட்டாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் இந்தப் புத்தகங் கள் உருவாக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஆர்.ராமானுஜம், கல்வியாளர் அருணா ரத்னம் உள்ளிட்டோர் புத்தகங்களைச் சீராய்வு செய்துள்ளனர்.

ஆர்வத் தூண்டல்: கதைகள் அனைத்தும் குழந்தைகளிடையே இயல்பாகக் காணப்படும் ஆர்வத்தைத் தூண்டு வதாக, அவர்களது சிந்தனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக, கேள்வி கேட்கத் தூண்டுவதாக, மேம்பட்ட சமூகத்துக்கான விழுமியங்களை கோடிட்டுக் காட்டுபவையாக அமைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக ‘சுடலை’ என்றொரு கதை. இன்றைக்குப் பெரும் பாலோரை ஆக்கிரமித்துள்ள தேய்ந்துபோன பொழுதுபோக்குகளுக்கு பதிலாக, மாமாவின் தோப்புக்கு தன் நண்பர்களை அழைத்துச் செல்கிறான் சுடலை. அங்கு அந்தக் குழந்தைகளுக்கு முற்றிலும் புதியதோர் அனுபவம் கிடைக்கிறது. இருக்கும் எளிய விஷயங்களைக் கொண்டு தங்கள் விளையாட்டை அவர் களே அமைத்துக்கொள்கிறார்கள், மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கிறார்கள்.

இந்த நூலைப் போல் ஒருவரது தனித்தன்மையை வலியிறுத்தும் ‘நோ சொல்லு’, ‘வித்தியாசம்தான் அழகு’, ஆளுமைகளைப் பற்றி ‘முதல் ஆசிரியர்’, ‘பதினான்கு’, ‘படிக்க அனுப்புங்க’, உலகப் புகழ்பெற்ற கதைகளான ‘மகிழ்ச்சியான சிங்கம்’, ‘புலியின் நிறம்’, சிறார் பாடல் நூல்களாக ‘பம்பரம்’, ‘மழைப் பாட்டு’ எனப் பற்பல நூல்கள் உள்ளன.

அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ‘எனக்குப் பிடிச்ச டீச்சர்‘, ‘பிடிவாதம் பிடி’, இன்றைய சமூக அவலங்களான குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை போன்றவற்றைத் தடுக்க வலியுறுத்தும் ‘பொன்னியின் வீடு’, ‘குழந்தையின் சிரிப்பு’ போன்ற நூல்களும் முக்கியமானவை.

சுயமான கதை: இந்தப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கும் ஒரு குழந்தை, ஒரு கதையைப் படித்தவுடன் ஒரு புத்தகத்தைப் முடித்துவிட்ட திருப்தியுடன் அடுத்த புத்தகத்தை எடுக்கத் தயாராகிவிடுகிறது. இவர்களது வாசிப்பை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் தன்னார்வலர்களும் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த நூல்களின் முக்கிய அம்சம், எளிமையான வார்த்தைகளும் சரளமான மொழிநடையும். அந்த வகையில் இந்த நூல்கள் மிகுந்த புரிதலுடன் முக்கியமான ஒரு முன்கையை எடுத்துள்ளன.

இப்படி மிகக் குறைந்த வசனங்கள், எழுத்துகளுடன் இந்தப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பல குழந்தைகள் ஓவியங்களைப் பார்த்து தங்கள் வார்த்தை களில் அவர்களே கதையைச் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையையும் வாசிக்கத் தூண்டுவதும் தொடர்ந்து வாசிக்க வைப்பதுமே தற்போதைய அவசியத் தேவை. அந்த நோக்கத்தை இந்த நூல்கள் அடையத் தொடங்கியுள்ளன எனலாம்.

1990களில் ‘புதிய கற்போர்’ என வாசிக்கத் தெரியாத வயது வந்தவர்களுக்கு அறிவொளி இயக்க காலத்தில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது நமது குழந்தைகளை வாசிக்க வைக்க இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வழியே குழந்தைகளுடன் ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் நிறைய புரிதலைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

திட்டம் தொடங்கப்பட்டுள்ளபோது உருவாகியுள்ள உற்சாகம் கடைசிவரை நீடிக்கப்பட்டால், தொடர் வாசிப்பு சாத்தியப்படும். ஒரு புதிய தலைமுறையை நிச்சயமாக இந்த இயக்கம் உருவாக்கும். அதன் வழியே காட்சி ஊடகம், கைபேசிகளில் சிக்கிக்கொண்டுள்ள ஒரு தலைமுறைக்கு விடிவு கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் பேராசிரியர் ச.மாடசாமி. இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டது:

அரசுப் பள்ளிக் குழந்தைகள் புத்தகத் தைக் கையிலெடுத்து ‘சுயமாக வாசிக்க‘ (Independent Reading) உருவானது தான் வாசிப்பு இயக்கம். 70 ஆண்டுகளுக்கு முன் ஏழை எளிய கறுப் பினக் குழந்தைகளின் வாசிப்புக்காக மேற்கு நாடுகளில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டபோது உள்ளடக்கமும் மொழியும் கீழ்க்கண்ட அடிப்படைகளில் அமைய வேண்டுமெனக் கல்வியாளர்கள் வலியுறுத்தினர்: 1) உற்சாகம் ஊட்டுவதாக இருக்க வேண்டும் (Fun) 2) எளிமையாக இருக்க வேண்டும். இதை மனதில் கொண்டே தெரிந்த வார்த்தைகள், சிறிய வாக்கியம், வண்ணமயமான படங்களுடன் புத்தகங்களைத் தயாரிக்க முடிவுசெய்தோம்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுதன், நந்தகுமார், இளம்பகவத் ஆகியோர் இந்தத் திட்டம் தொடங்கப் படுவதில் கூடுதல் அக்கறை காட்டினார்கள். குழந்தைகளைப் போலவே பெரியவர்களும் பெண்களும் வாசிக்க வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் கனவு. இன்றைக்கு ஆசிரியர்களும் பள்ளிக் குழந்தைகளும் கதைகள் சொல்லவும் எழுதவும் தொடங்கியிருக்கிறார்கள். இந்த இயக்கத் தின் விளைச்சலாக அவர்களுடைய படைப்புகளும் புத்தகமாக வேண்டும் என்பது எங்கள் ஆசை.

- valliappan.k@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in