

Eyebrow’, ‘eyelid’ ஆகிய இரண்டு சொற் களும் ஒரே பொருள் கொண்டவையா?' எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.
இல்லை. ‘eyebrow’ என்பது புருவம். ‘eyelid’ என்பது இமை. அது இருக்கட்டும், ‘glabella’ என்பது எதைக் குறிக்கிறது தெரியுமா? இரு புருவங்களுக்கும் இடையே இருக்கும் பகுதிதான் அது.
‘Pupil’ என்றால் மாணவன் என்பது தெரிந்திருக்கும். இதன் பன்மைச் சொல் ‘pupils’. ‘People’ என்பது மக்களைக் குறிக்கும் சொல். இதுவே பன்மைத் தன்மை கொண்ட பெயர்ச்சொல்தான். அதே நேரம் ‘pupil’ என்பது கண்ணில் இருக்கும் ஒரு பகுதியையும் குறிக்கிறது. கண்பாவை என்று நாம் கூறுவது இதைத்தான். அதிக ஒளி பாயும்போது சுருக்கிக்கொண்டும் குறைவான ஒளி பாயும்போது விரிந்துகொடுத்தும் போதுமான ஒளியைக் கண்களுக்கு அளிக்க வழி செய்யும் பகுதி இது.
‘Keep your eyes peeled’ என்று யாராவது கூறினால் உங்களுக்கு திகைப்பு ஏற்படலாம். கண்கள் என்ன வெங்காயமா உரிப்பதற்கு? அப்படியே உரித்தாலும் அவற்றை எப்படி வைத்துக் கொள்வதாம்? யாராவது ஒருவர் உங்களிடம் இப்படிக் கூறினால், ‘கவனமாக இருங்கள்’ என்று அவர் கூறுவதாகப் பொருள் கொள்ளுங்கள்.
காரில் செல்கிறீர்கள். காரை நீங்கள் ஓட்டிக்கொண்டிருக்க பக்கத்தில் ஒருவர் உங்களுக்குச் செல்ல வேண்டிய பாதையை விளக்கிக் கொண்டிருக்கிறார். ‘அடுத்து வலப்பக்கமாகத் திரும்ப வேண்டும். இங்கு இல்லை. இன்னும் நாலு தெரு கடந்து' என்று கூறியவர், திரும்ப வேண்டிய இடம் நெருங்கும்போது 'The street is nearing. Keep your eyes peeled' என்று கூறக்கூடும். ‘விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது’ என்று பொருள்.
***
“Military’ என்றால் ராணுவம். ‘Militancy’ என்றால் போர்க் குணம். ஆனால், ‘militia’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்?'.
அமைதி நிலவும் காலத்தில் பெரும் ராணுவத்தைப் பராமரிப்பது பொருளாதாரத்துக்குச் சிக்கல். அதேநேரம் போர்ச்சூழல் ஏற்படும்போது மிக அதிகளவில் ராணுவத்தினர் தேவைப்படுவார்கள். எனவே, அமைதிச் சூழலில் இரண்டாவது வரிசை ராணுவம் உருவாக்கப்படும். இவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படும். போரின்போது கூடுதல் வீரர்கள் தேவைப்படும் போது இவர்களிலிருந்து சிலரை ராணுவத்தில் சேர்த்துக் கொள்வார்கள். போர் முடிந்த பிறகு இவர்கள் ராணுவத்தின் அங்கமாகக் கருதப்பட மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை ‘militia’ என்பர்.
***
‘பள்ளிக் காலத்திலேயே ‘As I am suffering from fever’ என்று தொடங்கும் விடுப்புக் கடிதங்கள் எனக்கு அறிமுகமானவைதான். என்றாலும் ஒரு சந்தேகம். ‘Suffering’ என்பது உடல் தொடர்பானது மட்டும்தானா?'
உடல் வலி, மன வலி இரண்டுக்கும் தொடர்பானதுதான் அந்தச் சொல். ‘He often suffers from severe headaches. He made a hasty decision and now he's suffering for it.’ மற்றபடி தரம் கெடுவதையும் பாதிப்புக்குள்ளாவதையும் பொதுவாகக் குறிக்க இந்தச் சொல்லை பயன்படுத்த முடியும். ‘His work is suffering as a result of problems at his home.’
சிப்ஸ்
# Any way, anyway, anyways?
Any way - ஏதோ ஒரு பாதை.
Anyway – எப்படியும்.
Anyways என்ற சொல்லை
தரமான அகராதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
# திருஷ்டி என்பது ஆங்கிலத்தில்?
Evil eye
# Vantage, Advantage வேறுபாடு?
இரண்டும் ஒரே பொருள் கொண்டைவதான்.
- aruncharanya@gmail.com