ஆங்கிலம் அறிவோமே 4.0 - 43: ‘Drizzle’ தெரியும்.. ‘Mizzle?’

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 43: ‘Drizzle’ தெரியும்.. ‘Mizzle?’
Updated on
2 min read

‘மண்ணின் மீது தூறல் விழும்போது எழும் மண்வாசனையை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவார்கள்?'

வாசகரே, மண்ணில் உள்ள ஒரு வகை பாக்டீரியாமீது (மண் மீது அல்ல) தூறல் விழும்போது அதிலிருந்து எழும் வாசனைதான் மண்வாசனை. ஆங்கிலத்தில் இதன் பெயர் ‘petrichor’. தூறலை ஆங்கிலத்தில் ‘drizzle’ என்பார்கள். ‘Mizzle’ என்றும் கூறுவதுண்டு. கனமழை என்பது ‘downpour’. ‘Cloudburst’ என்றால் குறைவான நேரத்திலேயே மழை சும்மா அடித்துப் பெய்துவிட்டது என்று பொருள். இடி மின்னலும் இருக்க வாய்ப்பு உண்டு. அது வெள்ளத்துக்குக் காரணமாகவும் அமைவது உண்டு.

லேசாக மழை பெய்வதை ‘spritzing’ என்பார்கள். ஜெர்மானிய மொழியில் ‘spritzen’ என்றால் 'ஸ்ப்ரே' செய்வது என்று பொருள். ‘It is raining cats and dogs’ என்றால் அடாத மழை பெய்துகொண்டிருக்கிறது. எரிச்சலூட்டும்படியான மழைச் சூழலை ‘Lovely weather for ducks’ என்பர். அதாவது, வாத்துகளுக்கு மட்டும்தான் அந்த மழைச் சூழல் பிடிக்கும்.

***

‘Your throat is infected..............twice a day with warm water and salt'

(a) Rrumble

(b) Growl

(c) Gargle

(d) Rustle

நான்கு சொற்களுமே ஓசையைக் குறிப்பவைதான். தொண்டை சரியில்லாதபோது வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளி என்று கூறுவதுண்டு. அதை 'காகிள் செய்' என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். ‘Gargle' என்பதுதான் இதற்கான சொல். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு ‘களகள' என்று ஒலியை எழுப்புவோமே அதுதான் ‘gargling’.

வயிற்றில் ‘கடபுடா’ என்று ஒரு ஓசை கேட்குமல்லவா? அது, ‘rumbling of stomach’. உறுமுதலைக் குறிக்கும் சொல் ‘growl’. தாள்கள் அல்லது இலைகள் ஒன்றோடொன்று உரசும்போது எழும் சத்தத்தை ‘rustle’ என்பார்கள். வேறு சில வகை ஒலிக்குறிப்புகளையும் அறிந்து கொள்வோமே. ஊளையிடுதல் - ‘whine’ ; சிணுங்குதல் – ‘whimper’; வலியின்போது வெளிப்படும் ஓசையை விவரிக்க - ‘moan’.

***

‘I have been living here for eight years’

‘I have been living here since eight years’

மேற்கூறிய இரண்டு வாக்கியங்களில் எது சரி? அல்லது இரண்டுமே சரியானவையா? ‘For' என்ற சொல் ஒரு காலகட்டத்தை (அதன் நீளத்தைக்) குறிக்கிறது. ‘Since’ என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றைக் குறிக்கிறது.

எனவே ‘I have been living in this house for eight years’ என்பதே சரியானது. இரண்டாவது வாக்கியம் சரியானதாக இருக்க வேண்டுமென்றால், ‘I have been living in this house since 2015’ என்பது போல் அதை மாற்ற வேண்டும். ஆக, ‘for six months, for four years, for a decade’ என்று இருக்கலாம். ‘Since November, Since 1950, Since last Monday’ என்று இருக்கலாம்.

தவிர, ‘for’ என்பது முடிந்துபோன ஒரு கால கட்டத்தையும் குறிக்கக்கூடும். ‘I lived in this house for five years’ என்றால் நீங்கள் அந்த வீட்டில் முன்பு ஐந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று பொருள்.

ஆனால் ‘since’ என்ற சொல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றைக் குறிப்பதாக மட்டுமே இருக்கும். ‘I lived in this house since last Monday’ என்பதும் தவறான வாக்கியம்.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in