

‘அக நக முக நக..’. ‘பொன்னியின் செல்வன்-2’ பாடல் இது. “குடைபிடித்திடும் நெடுமரச் செறிவே, பனி உதிர்த்திடும் சிறுமலர்த் துளியே” இளங்கோ கிருஷ்ணனின் பாடல் அழகு. ஆனால், ‘க' எழுத்தை, பாடல் முழுவதும் ‘ga’ என்றே பாடுகிறார் சக்திஸ்ரீ கோபாலன். ‘mugil’, ‘magal’, ‘punnagai’ இவ்வாறு. “இப்பாடலின் ‘க' உச்சரிப்பு சரியா?” என்று பலரும் கேட்கிறார்கள். “முகத்தில் முகம் பார்க்கலாம்” (படம்-தங்கப்பதுமை-1959), “நறுமுகையே” (படம்-இருவர்-1997) போன்றவற்றில் இல்லாத க (ga) ஒலி, இதில் எப்படி வந்தது? (‘தமிங்கில’ மொழிபெயர்ப்பை விட்டு விடுவோம்)
இந்தியில் Khana – உணவு, Ghana – பாடல். தெலுங்கில் Muggu – கோலம், Mukku – மூக்கு என ஒலி மாறினால் பொருள் மாறுவதே அதிகம். தமிழ்ச் சொல், உச்சரிப்பு வேறுபட்டும் பொருள் மாறுவதில்லை. அதனால், ‘அகநக முகநக' உச்சரிப்பு மாறினாலும் பொருள் மாறவில்லை. எனினும் கலை சொல்லித் தரும் ஆசாரம்தானே கலாசாரமாகும்? (பாவம், பாவம் போலும் சில சொற்களில் வடமொழி, ஆங்கிலத் தாக்கமே இங்கு தமிழ் உச்சரிப்பைத் தாக்குகிறது. இதில்தான் கவனம் தேவை)
‘க' எழுத்து -
‘gha’ என ஒலிப்பது – தங்கம், (ங்க - இன எழுத்தை அடுத்து)
‘ha’ என ஒலிப்பது – காகம், (நெடிலை அடுத்து)
‘kha’ என ஒலிப்பது – பக்கம் (அதே ஒற்றை அடுத்து)
‘ka’ என ஒலிப்பது – கலை, காலை, அகம், முகம் (சொல்லின் முதலில் வரும்போது அழுத்தமாகவும், இடையில் வரும்போது நெகிழ்வோடும் ஒலிக்கும்).
தியாகம், ரட்சகன் போல வடசொல்லைத் தமிழில் சொல்லும்போது, ‘க' எழுத்தை ‘Ga’ என்று ஒலிப்பதே தவறான வழக்கு. அந்தப் பாதிப்பில் தமிழ்ச் சொல்லையும் ‘க' (ga) என்பது தமிழ் மரபு அல்லவே. கிரந்த எழுத்து உச்சரிப்புப் பற்றித் தனியாக விரிவாகப் பேச வேண்டும். சிறப்பு-அழுத்தம் தந்து, ‘ஷிரப்பாக’ சொல்வது சிரிப்பாகிவிடும். உடல்சூட்டை, காய்ச்சல் சுரம் (சுர்-வெப்பம்) என்று சரியாகச் சொல்வர் படிக்காதவர். அதை ‘ஜூரம்' என்றும், சீன நாட்டிலிருந்து வந்த சீனியைக்கூட ‘ஜீனி' என்றும் படித்தவர்கள் சொல்கிறோம்.
“க (ka) எழுத்து, அடிநா, அடிஅண்ணத்தைப் பொருந்த” உருவாகும் என்கிறது தொல்காப்பியம் (எழுத்து-பிறப்பியல்-89). சரியான உச்சரிப்பை, பள்ளி ஆசிரியரை, அடுத்து காட்சி ஊடகமே கற்றுத்தர முடியும். இன்றைய காட்சி ஊடகர், இதில் கவனமாக இருந்தால் நல்லது. வாருங்கள், ‘அகநக முகநக’ அழகாகப் பாடுவோம். தமிழ் இனிது.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com