

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்புகளை முடித்தால் நல்ல வேலை கிடைக்குமா? நல்ல சம்பளம் கிடைக்குமா? என்பது போன்ற சந்தேகங்கள் கடந்த காலங்களில் இருந்தன. ஆனால், வழக்கமான பொறியியல் படிப்புகளைவிட சுவாரசியமும் சவாலும் நிறைந்த தனித்துவமான சில பொறியியல் படிப்புகளைப் படித்தால் வேலைவாய்ப்புகளைப் பெறலாம் என்கிற நம்பிக்கை இப்போது மாணவர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
அதிக வேலைவாய்ப்புகள்: பொறியியல் படிப்பில் 50க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. ஒரு காலத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாரம்பரியப் பொறியியல் படிப்புகளை எடுத்து படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், கணினி துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் பெருகிய நிலையில், அந்தப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும் கணினி துறை சார்ந்த படிப்புகளில் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற துறைகள் மட்டுமல்லாமல், தற்போது செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் ஆர்வம் காட்டுகின்றனர். கணினி துறை சார்ந்த படிப்புகளைப் படித்தால் கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெறலாம் என்பதே இதற்குக் காரணம்.
மேலும் கணினி துறை அல்லாத மற்ற பொறியியல் படிப்புகளுக்குச் சம்பளம் குறைவு என்கிற பிம்பமும் பொதுவெளியில் உருவாகியுள்ளது. இது முற்றிலும் தவறான கண்ணோட்டம். ஏனென்றால் பொறியியல் படிப்புகளுக்கு எப்போதும் நல்ல வேலைவாய்ப்பு உண்டு.
ஏறத்தாழ 70% தொழில் நிறுவனங்கள் பொறியியல் துறை சார்ந்தவையே. எனவே, பொறியியல் மாணவர்களுக்கு எல்லையில்லா வாய்ப்புகள் உள்ளன. 15 வருடங்களுக்கு முன்பு பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரிகளைப் போட்டி போட்டுக் கொண்டு வேலைக்கு அமர்த்தின. அத்துடன் வேலைக்கான பயிற்சியையும் அளித்தன.
இன்று நிலைமை வேறு. வேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் நிறுவனங்களும் தங்களின் வளர்ச்சியை மட்டும் கருத்தில்கொண்டு திறமையான பொறியியல் பட்டதாரிகளை மட்டுமே வேலைக்குத் தேர்வு செய்கின்றன. புதிதாக வேலைக்கு சேரும் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதில்லை.
திறன் பயிற்சி: பொறியியல் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற முழு கவனம் செலுத்தக்கூடிய சூழலில், திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. படிக்கும் போதே திறன்களை வளர்த்துக்கொள்ளும் மாணவர்களே எளிதில் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.
இதைக் கருத்தில் கொண்டுதான் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பொறியியல் மாணவர்களுக்கு துறைரீதியான திறன்களை மேம்படுத்தக்கூடிய பாடங்களை கற்றுத் தந்து வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய ஆரோக்கியமான சூழல் இப்போது நிலவுகிறது.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டு மருத்துவப் பயிற்சி எடுத்துக் கொள்வதுபோல பொறியியல் மாணவர்களும் கடைசி பருவத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்களைப் பற்றியும், நிறுவனங்கள் என்ன மாதிரியான திறன்களை எதிர்பார்க்கின்றன என்பது பற்றியும் தெரிந்துகொள்ளக்கூடிய அரிய வாய்ப்பு மாணவர்களுக்கு அமைந்துள்ளது.
படிக்கும்போதே பயிற்சி: பொறியியல் படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்த கையோடு வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்றால், படிக்கும்போதே தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களில் அடிப்படையான விஷயங்கள் முதல் நவீன தொழில்நுட்பம் வரை தெரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டு, மூன்றாமாண்டுகளில் எந்தப் படிப்பைப் படிக்கிறோமோ அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சென்று தொழிற்பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாண்டு வரும்போது நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களுக்கான சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டால், கண்டிப்பாக வேலை வாய்ப்பை பெற்றுவிடலாம்.
இரண்டாமாண்டு படிக்கும்போதே பாடம் ரீதியான ‘மினி புராஜெக்ட்’டை உருவாக்க வேண்டும். அது தொடர்பான ஆய்வு கட்டுரை களைக் கல்லூரி கருத்தரங்குகளில் பங்கேற்று சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாண்டில் அது ’மெயின் புராஜெக்ட்’டாக மாறி அதன் மூலம் மாணவர்களின் திறன்கள் வெளிப்பட வாய்ப்பாக அமையும்.
பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்துக்குப் பயன்படும் விதத்தில் உருவாக்க வேண்டும். ‘இன்னோவேட்டிவ் புராஜெக்ட் சென்டர்’களை கல்லூரியில் அமைத்து நல்ல கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவர் களைத் தொழில்முனைவோராக்கும் முயற்சி எடுத்தால், அதன் மூலம் சிறிய தொழில் நிறுவனங்களை உருவாக்க முடியும்.
இதனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பொறியியலில் மதிப்பெண்களும் பட்டமும் வேலைவாய்ப்புக்கான தகுதியாக மட்டுமே நிறுவனங்கள் பார்க்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களிடம் நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்ப்பது திறன்களை மட்டுமே. எனவே, வேலைவாய்ப்பில் திறன்களே பிரதானம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் துறை ரீதியான நவீனத் தொழில் நுட்ப திறன்களை வளர்த்துக்கொள்வது, ஆங்கில உரையாடல் திறன், குழு விவாதத்தில் பங்கேற்று பேசுவது, ஆளுமை திறன் போன்றவற்றை படிக்கும்போதே வளர்த்துக்கொள்வது தங்களை மெருகேற்றிக்கொள்ள உதவும்.
இந்தக் காலகட்டத்தில் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஆர்வம், இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வில் அதிக இடங்கள் மாணவர்களால் நிரப்பப்படும் என்பதையே காட்டுகிறது. எனவே, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாண வர்கள், பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கும்போதே திறன்களை வளர்த்துக் கொண்டால் பொறியியல் துறையில் சாதிக்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், கல்வியாளர்.